குங்குமம் ஜங்ஷன்



சிற்றிதழ் Talk
‘‘கலையை விடவும் அன்பைத்தான் அதிகம் பொருட்படுத்துகிறேனோ என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். இரண்டும் ஒருபோதும்  பிரிக்க இயலாதவை என்பதுதான் பதில். கலைஞர்களைப் பொறுத்தவரை கலைதான் அவர்களுடைய நேசம். ஆன்மாவில் மிளிரும் முடிவற்ற  அழகின் காட்சியே அன்பின் வெளிப்பாடு!’’
- பரதநாட்டியக் கலைஞர் ராஜஸ்ரீ வாரியர் ‘காலச்சுவடு’ இதழில்...

சர்வே
இந்தியா முழுவதும் ஒரு வருடத்தில் 95 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதில், ஒவ்வொரு நாளும் உடல் உறுப்புகளின் செயலிழப்பால்  இறப்பவர்கள் மட்டும் முந்நூறு பேர். கார்னியா மாற்று சிகிச்சை ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு தேவைப்படுகிறது. ஆனால், 25 ஆயிரம்  கார்னியா மாற்று சிகிச்சையே நடக்கிறது. இதே போல், ஒவ்வொரு வருடமும் கிட்னி தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம்!  இதில், வெறும் 3,500 முதல் 4,500 பேருக்கு மட்டுமே கிட்னி மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது.

சுமார் இருபது ஆயிரம் பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பட்சத்தில், வருடத்தில் ஐந்நூறு பேருக்கு மட்டுமே அது  சாத்தியமாகிறது. இதற்கு, ‘உறுப்பு தானம் பற்றி தவறான புரிதல் மக்களிடம் இருப்பதே காரணம்’ என வேதனை தெரிவிக்கிறார்கள்  மருத்துவர்கள்.

யூ டியூப் லைட்!
‘அவளைப் போக விடாதீர்கள்’ என்ற டேக் லைனோடு வந்திருக்கும் ஸ்வச் பாரத் வீடியோதான் இன்றைக்கு செம ஹாட் ஷேரிங். மாடியில்  இருந்து குப்பையைக் கொட்டிவிட்டு பூஜையறைக்கு வரும் இல்லத்தரசி, பூஜையறையில் இருந்த லட்சுமி படம் காணாமல் போய் வெறும்  வெள்ளைத்திரை இருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறாள். அதேபோல பீடா கடை தாத்தாவும் காரில் போகும் ஆசாமியும் ரோட்டில்  குப்பையைப் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தால் அவர்கள் கும்பிடும் லட்சுமி உருவம் காணாமல் போயிருக்கிறது.

கிளைமேக்ஸில் கங்கனா ரணாவத் மகாலட்சுமியாக வந்து சுத்தத்தை மெயின்டெயின் பண்ணும் ஒருவரின் பைக் பின் சீட்டில் அமர்ந்து  பயணிக்கிறார். ‘‘சுத்தம் இல்லாத இடத்தில் லட்சுமி குடியிருப்பதில்லை!’’ என்ற மெசேஜை கட்டக்கடைசியாக வந்து சொல்வது சாட்சாத்  அமிதாப் பச்சன். ‘‘அட, கவர்ன்மென்ட் விளம்பரங்கள் எல்லாம் செம கிரியேட்டிவிட்டியா மாறிடுச்சு இல்ல!’’ என இது அப்ளாஸையும்  அள்ளியிருக்கிறது. அதே சமயம், ‘‘நல்ல விஷயத்துக்குக் கூட மூட நம்பிக்கை பிரசாரம்தானா?’’ என மதச்சார்பற்ற ஆசாமிகளை நறநறக்கவும்  செய்திருக்கிறது!

டெக் டிக்!
இதுதான் தன்னம்பிக்கை என்பது. ‘ஃப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகின் மிக மலிவு விலை ஸ்மார்ட் போனை அறிவித்த ரிங்கிங் பெல்ஸ்  நிறுவனம், இப்போது மலிவு விலை டி.வியையும் அறிவித்து, முன்பதிவைத் துவங்கியுள்ளது. ஏற்கனவே 251 ரூபாய் போனை குறித்த  நேரத்தில் தர முடியாமல், மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, பெற்ற முன்பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து, இந்த நிறுவனம் கண்ட  தடபுடல் தடுமாற்றம் நாம் அறிந்ததே. இப்போது முழு HD துல்லியத்துடனான 31.5 அங்குல டி.வி 9,900 ரூபாய் என முன்பதிவைத்  தொடங்கியிருக்கிறது ரிங்கிங் பெல்ஸ். இதையும் நம்பி பணம் கட்டும் இந்தியர்கள் இருக்கும்வரை இவர்களுக்கு என்ன கவலை!

நிகழ்ச்சி மகிழ்ச்சி
கமலின் ஃபேவரிட் இசையமைப்பாளர் ஜிப்ரான், இப்போது புதுமுகங்கள் நடிக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற படத்திற்கு இசையமைத்து  வருகிறார். இதன் சிங்கிள் ஸாங் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மீதமுள்ள பாடல்களை பூடான், தாய்லாந்து, மியான்மர்,  மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சாலை வழியே பயணித்து, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொன்றாக வெளியிட முடிவு  செய்துள்ளனர். புதியவர்களின் இந்த முயற்சியை சூர்யா பாராட்டியதுடன், பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்து  வாழ்த்தியிருக்கிறார். 

புத்தகம் அறிமுகம்
செவ்வி பேரா. தொ.பரமசிவன் நேர்காணல்கள்
(கலப்பை, 9/10, 1ம் தளம், 2ம் தெரு, திருநகர், வடபழனி, சென்னை-600026. விலை ரூ.130/-. தொடர்புக்கு: 94448 38389)
ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்வுபூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக்  கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள்  இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குள் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறது.

நம் முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள்  மூழ்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு சிந்தனைத் திறனை இவ்வளவு நுணுக்கமாகத் தர  முடிகிற ஐயா தொ.பரமசிவன், தமிழ் உலகிற்குக் கிடைத்திருக்கிற பெருங்கருணை!