தொப்புள் எனப்படுவது



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் சிசுவுக்கும் தாய்க்குமான இணைப்புக்கொடியின் மிச்ச அடையாளம்தான் தொப்புள். முட்டையிட்டுப் பால் கொடுக்கும் மிக அரிதான பாலூட்டிகள் நீங்கலாக ஏனைய அனைத்துப் பாலூட்டிகளுக்கும் அவற்றின் குட்டிகளுக்கும் தொப்புள் இருக்கும் & மனிதன் உள்பட!

கருவுற்ற பெண்களின் கருப்பையில் அமைந்திருக்கும் முக்கியப்பகுதி, தாமரை இலை வடிவத்தில் அமைந்த ‘ப்ளாசென்டா’. அரை கிலோ எடையுடன் சுமார் 8 அங்குலம் வரை விட்டம் உடைய இதன் மையத்திலிருந்து ஒரு குழாய் தொடங்கி, அது வயிற்றிலிருக்கும் சிசுவின் தொப்புள் பகுதியில் சேர்கிறது. இதுதான் தொப்புள்கொடி. தாயின் உடலிலிருந்து குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் தொப்புள்கொடி மூலம்தான் குழந்தைக்குப் போய்ச் சேருகிறது.

 தொப்புள்கொடி ஓர் இருவழிப் பாதை. ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களும் இதே கொடியின் வழியாகச் சென்று தாயின் உடம்பில் கலக்கின்றன. இந்தத் தொப்புள்கொடி சாதாரணமாக 20 செமீ நீளமும் 2 செமீ விட்டமும் கொண்ட குழல் போல இருக்கும். சில வேளைகளில் இது மிக நீண்டதாக அமைந்து விடுவதும் உண்டு. அப்போது குழந்தையின் கழுத்தில் ஒரு மாலை போல் இது சுற்றிப் பிறக்கும். ‘மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது’ என்ற மூடநம்பிக்கையும் உண்டு.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineகுழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி சரியாக அகற்றப்படாவிட்டால், தொற்று ஏற்பட்டு தொப்புள் ஒரு சின்ன பலூன் போல வாழ்நாள் முழுக்க இருந்துவிடும்.

விண்வெளிக் கப்பலில் இருந்து வெளிவரும் விண்வெளி ஆராய்ச்சியாளருக்கும் விண்வெளிக் கலத்துக்கும் இடையே உள்ள இணைப்புக் குழாயையும் தொப்புள்கொடி என்று கூறுவார்கள். மின் இணைப்புகளில் பலவித வயரிங்குகளிலும் தொப்புள்கொடி என்னும் வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.

ஒரு குழந்தையைப் பெற்றோரிடமிருந்து பிரித்து ஹாஸ்டலில் விடும்போது தொப்புள்கொடி துண்டிக்கப்படுகிறது என்று உருவகமாகச் சொல்லுதல் சகஜம்.

நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாட்டை போக்குவது, நீரிழிவு நோய் எதிர்ப்பு என 45 வகை நோய்களைக் குணமாக்கும் தன்மை தொப்புள்கொடியில் உள்ள ரத்தத்தில் இருக்கிறது.
தொப்புள்கொடி ரத்தத்தில் ஏராளமான ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. ரத்தப்புற்று நோய் சிகிச்சையின்போது எலும்பு மஜ்ஜை பாதிக்கப் படலாம். அப்படி நிகழ்ந்தால் ஸ்டெம் செல்களின் தேவை ஏற்படும். இப்போது தங்களின் குழந்தையின் தொப்புள்கொடி ரத்தத்தைப் பாதுகாப்பாக ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்க பலர் முன்வருகின்றனர். ரத்த வங்கிகளைப் போலத் தொப்புள்கொடி ரத்த வங்கிகள் பிரபலமாகி வருகின்றன.

தொப்புளுக்கு நாபி என்றும் பெயர் உண்டு. ஆன்மிகவாதிகள் திருமாலின் நாபியில் மலர்ந்த தாமரையானது லட்சுமி தேவியின் வடிவம் என்பார்கள். உலகப் படைப்பைப் பற்றிச் சொல்லும்போது திருமாலின் நாபியில் இருந்து எழுந்த தாமரைப் பூவில் அமர்ந்து நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மன், படைத்தல் தொழிலை மேற்கொண்டதாகக் கூறுவார்கள். திருமாலுக்கு பத்மநாபன் என்று பெயர் இருப்பதையும் கவனிக்கலாம்.

தொப்புளுக்கு இலக்கியங்களில் கொப்பூழ் என்று பெயர். பரிபாடல், ‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்பூவொடு புரையும் சீர் ஊர்’ என்று மதுரையைச் சொல்கிறது. அதாவது திருமாலின் நாபித் தாமரை போல மதுரை இருக்கிறதாம்! பூவின் இதழ்களைப்போல தெருக்கள் உள்ளன என்றும், பூவின் நடுப் பகுதியைப் போல அண்ணலின் கோயில் இருப்பதாகவும் பரிபாடல் பேசுகிறது.

தொப்புளுக்கு பெல்லி பட்டன் என்றும் பெயர் உண்டு. இடுப்பை அசைத்துத் தாள லயத்துக்கு ஏற்ப ஒசிந்தாடும் நடனம் ‘பெல்லி டான்ஸ்’ எனப்படுகிறது. இத்தொப்புள் நடனம் ஓரியன்டல் நடனம் எனவும் அழைக்கப்படுகிறது. அநேகமாக எல்லா கேளிக்கை நடன நிகழ்ச்சிகளிலும் கேபரே நடன நிகழ்ச்சிகளிலும் இது இடம் பெற்றிருக்கும்.

இது மத்தியக் கிழக்கு நாடுகளின் பாரம்பரிய நடனமாகும். ஐரோப்பிய நாடுகளில் பரவிய பெல்லி டான்ஸ், இடத்துக்கு இடம் ஆடப்படும்போது பல மாறுதல்களையும் நடன அசைவுகளையும் கொண்டாலும், அடிப்படையாய்ப் பார்வையாளர்களுக்குக் காட்சி தருவது நடன மங்கையரின் தொப்புளே!

பண்டைய எகிப்து சிற்பங்களில் பெல்லி டான்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகச் சொல்வாரும் உண்டு. பாலஸ்தீனத்தில் இது ‘ராக்ஸ் பலாடி’ என அழைக்கப்படுகிறது. கையில்
தீப்பந்தம், வாத்தியக் கருவிகள், பாம்பு போன்றவற்றைப் பிடித்துக்கொண்டும் தொப்புள் நடனங்கள் நடைபெறுகின்றன. தொப்புள் நடனங்கள் சிறந்த உடற்பயிற்சி என்றும், பெண்களின் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் ஆஸ்டியோ போரோசிஸ் நோய் வராமல் தடுக்கும் எனவும் சொல்கிறார்கள்.

மேலை நாடுகளில் இருந்த ஒரு கலாசாரம் மும்பை வழியாக இப்போது சென்னைக்கும் வந்திருக்கிறது. காதிலும் மூக்கிலும் வளையங்கள் மாட்டியது போக இப்போது தொப்புளிலும் வளையங்களை மாட்டிக்கொள்வதே அது! பலவித அளவுகளில், விதவிதமான டிசைன்களில் தொப்புள் வளையங்கள் இருக்கின்றன. சில பெண்கள் தங்கள் தொப்புளைச் சுற்றிப் பச்சை குத்திக்கொள்வதும் உண்டு.

வளையங்களை மாட்டுதல், தொப்புளில் பச்சை குத்துதல், தொப்புள் அழுந்தும்படியாக டைட் ஜீன்ஸ் அல்லது பெல்ட் போன்றவற்றை மணிக்கணக்கில் அணிந்திருப்பது, சரியாகத் தொப்புளைச் சுத்தம் செய்யாதது, அழுக்கான தண்ணீரில் குளிப்பது போன்றவை தொப்புளில் தொற்றுநோய் ஏற்படக் காரணங்களாகும்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine>Natural Orifice Transluminal Surgery(NOTES) என்பது, உடலில் இயற்கையாகவே உள்ள துவாரங்களின் மூலம் கேமராவையும் கருவிகளையும் செலுத்தித் தழும்பு இல்லாமல் மேஜர் ஆபரேஷன்களையும் வெற்றிகரமாகச் செய்யும் ஓர் உத்தி. இப்படி தொப்புள் மூலமாகவும் கருவிகளை நுழைத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை இப்போது பரவி வருகிறது. 2009 பிப்ரவரி 5 அன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் டியாகோ மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு நோயாளியின் தொப்புள் மூலம் கருவிகளைச் செலுத்தி அவரின் பழுதான சிறுநீரகத்தை வெற்றிகரமாக அகற்றினார்கள்.

இது உபயோகமான கண்டுபிடிப்பு என்றால், பம்பரம் விடுவது, ஆம்லெட் போடுவது என பலவிதத்திலும் சினிமாக்காரர்களுக்கு தொப்புள் பயன்பட்டிருக்கிறது. தொப்புள் இல்லாத பெண் என்றால் ஆதி மனுஷியான ஏவாளைச் சொல்லலாம். அவள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டதால் தொப்புள் இருக்க வாய்ப்பில்லை அல்லவா!
(அடுத்து...)
லதானந்த்