கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவின் இரண்டு மாநில முதல்வர்களைப் பலி கொண்டிருக்கின்றன ஹெலிகாப்டர் விபத்துகள். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் விபத்து குறித்த அறிக்கையே இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவும் ஹெலிகாப்டர் விபத்துக்கு பலியாகி விட்டார். இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் நிகழ்ந்த மூன்றாவது ஹெலிகாப்டர் விபத்து இவருடையது. தொடர் விபத்துகளால் ‘ஹெலிகாப்டர்’ என்றாலே ‘கிலி’காப்டர் என்று ஆனதோடு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது விமானப் பயணமும்.
டோர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்குக் காரணம் என்ன? ‘‘டோர்ஜி பயணம் செய்த தவாங் பகுதி, நிலையற்ற வானிலை கொண்ட 12 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப்பகுதி. அவர் பயணம் செய்த தினத்தில் வானிலை மோசமாகவே இருந்துள்ளது. விபத்துக்கு அதுவே காரணமாக இருக்கலாம். ராஜசேகர ரெட்டி மரணமும் மோசமான வானிலை மாற்றங்களால் நிகழ்ந்ததுதான்’’ என்கிறார் பத்மினி. இவர் சென்னையில் ‘இந்திரா ஏர்’ என்னும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
‘‘கடந்த மாதம்கூட இதே பகுதியில் 23 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 17 பேர் மரணமடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும் குழந்தையும் கூட இறந்தனர். அனுபவம் வாய்ந்த இரண்டு பைலட்கள் அதை இயக்கியும் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை. அதை இயக்கிய பைலட்களில் ஒருவர் இந்திய விமானப்படையில் பைலட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விபத்தில் இருந்து மீண்ட அவர், காற்று பலமாக வீசியதே விபத்துக்கான காரணம் எனச் சொல்லியிருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களின்மீது மதியம் 12 மணிக்கு மேல் விமானப்பயணம் உகந்ததில்லை. பிற்பகலில் வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது அங்கு வழக்கம். கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கிளம்பியது மதியம் இரண்டரை மணிக்கு. டோர்ஜி சென்றதும் கிட்டத்தட்ட மதியவேளையில்தான்.
வானிலை மாற்றங்கள் உட்பட சில இடையூறுகளைப் பற்றி பைலட்கள் எடுத்துச் சொன்னாலும் அரசியல்வாதிகள் உட்பட சிலர் கவனத்தில் கொள்வதில்லை. அவர்களாகவே பயணம் செய்ய வேண்டிய நேரத்தை நிர்ணயித்து விட்டு, ஹெலிகாப்டர்களை இயக்குமாறு கட்டளையிடுகிறார்கள். இனிமேலாவது பைலட்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். அப்போதுதான் விபத்துகளைத் தவிர்க்க முடியும்’’ என எச்சரிக்கையாகப் பேசுகிறார் பத்மினி.
ஹெலிகாப்டர் பயணம் பற்றி கேப்டன் ராஜேஷிடம் பேசினோம்... ‘‘டோர்ஜி பயணம் செய்த ஏஎஸ்350பி3 என்கிற ஹெலிகாப்டர் யூரோகாப்டர் ரகத்தைச் சேர்ந்தது. நவீன தொழில்நுட்பத்தில் 2010ல் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.
பொதுவாக விமானம் அல்லது ஹெலிகாப்டர் கிளம்பும்முன் பலகட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன. பயணம் செய்யும் வழித்தடங்களில் உள்ள பகுதிகளின் வானிலை அறிக்கை பைலட்டிடம் ஒப்படைக்கப்படும். பொறியாளர் விமானத்தை சோதனை செய்தபின் அறிக்கையை பைலட்டிடம் அளிப்பார். அடுத்து பயணிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஜர்னி லாக் புத்தகம் வழங்கப் படும். அதன்பிறகும் சரியான சிக்னல் கிடைத்த பிறகுதான் விமானமோ, ஹெலிகாப்டரோ டேக் ஆஃப் ஆகும். ஆக, பைலட்களுக்கு பொறுப்புகள் அதிகம்.
விமானங்கள் போல இல்லாமல், ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறப்பவை. சூழலுக்குத் தகுந்தவாறுதான் இவற்றை இயக்க வேண்டும். மலைகளுக்கு நடுவே பறக்கும்போது மழை, அடர்த்தியான காடு, காற்றழுத்தத்தால் சில சமயங்களில் சிக்னல் கிடைக்காமல் போய்விடும். அடுத்தடுத்த இடங்களைக் கடக்கும்போது மீண்டும் சிக்னல் கிடைத்தால்தான் தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்பட ஆரம்பிக்கும். செல்போன் சிக்னலைப் போலத்தான் விமானத் தகவல் தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகளும்.
சி.வி.ஆர்., எஃப்.டி.ஆர். மூலம்தான் விமானங்களின் செயல்பாடுகளையும் பைலட்களின் செயல்பாடுகளையும் துல்லியமாக அறிய முடியும். சி.வி.ஆர் என்பது பைலட் அறையில் இருப்பது. பைலட் எந்த டவர் மூலம் தொடர்பு கொள்கிறார், என்னென்ன பேசினார், விபத்து நடப்பதற்கு முன் அந்த அறையில் அவர்கள் பேசிக்கொண்டது என அனைத்து விபரங்களையும் பதிவு செய்யும் கருவி. எஃப்.டி.ஆர். என்பது இன்ஜின் இயக்கம், பாராமீட்டர், கிலோமீட்டர், வழித்தடங்கள், எரிபொருள் நிலைமை ஆகியவற்றைப் பதிவு செய்யும் கருவி. இந்த இரண்டு கருவிகளையும்தான் பிளாக் பாக்ஸ் என்கிறார்கள். இந்தப் பெட்டி மூலம்தான் விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிய முடியும்’’ என்கிறார் ராஜேஷ்.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கை ஒன்று, ‘இந்தியாவில் இருப்பனவற்றில் சுமார் 120 ஹெலிகாப்டர்களும் சிறு விமானங்களும் மலைப்பகுதிகளில் பறப்பதற்குத் தகுதியற்றவை’ எனக் குறிப்பிடுகிறது. வேறு விமானங்கள் இல்லாததால் இவை பல வி.ஐ.பிக்களை சுமந்துகொண்டு ஆபத்தானமுறையில் பயணிக்கின்றன. இரவிலும், மழைக்காலங்களிலும், காட்சிகள் தெரியாத பனிமூட்டத்திலும் வி.ஐ.பி.க்களின் வற்புறுத்தலால் இவற்றை இயக்குகின்றனர் பைலட்டுகள். இப்படி அலட்சியத்தால் விபத்துகள் தொடர நாம் அனுமதிக்கலாமா?
ஆர்.எம்.திரவியராஜ்