வீறுகொண்ட வீரு... சிஎஸ்கே விர்ரு!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


‘நாக் அவுட்’ சுற்று நெருங்குவதால் எல்லா அணிகளும் ஜுர வேகத்தில். டாப் கியரில் ஓடிக்கொண்டிருக்கும் மும்பை, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு அதிகம். டி20ல் எதுவும் நடக்கலாம் என்பதால் மற்ற அணிகளையும் ஒதுக்கிவிட முடியாது.

உள்ளூர் ராசி இந்த அளவு கை கொடுக்கும் என்று டோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார். சார்ஜர்ஸுடன் மோதிய ஆட்டத்தில் மார்கெல் அடித்த ஹாட்ரிக் சிக்சர் செம ரகளை. சார்ஜர்ஸ் இன்னிங்சில், சோகல் போட்டுத் தாக்கியபோது சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில். ஜகாதி, மார்கெல், போலிஞ்சர் கூட்டணி சூப்பராகப் பந்துவீசி அசத்தியதில் சார்ஜ் இறங்கியது சார்ஜர்ஸ்.
அடுத்த கோதா ராஜஸ்தான் ராயல்ஸுடன். மிரட்டிக்கொண்டிருந்த வாட்சனை போட்டுப் பிடித்தார் ஜகாதி. அதன் பிறகு ராயல்ஸால் எழுந்திருக்க முடியவில்லை. ஹஸி, ரெய்னா அதிரடியில் எதிர்ப்பே இல்லாமல் சரணடைந்தது ராயல்ஸ். அரை இறுதி, இறுதிப்போட்டியும் சென்னையில்தான் என்பதால் சூப்பர் கிங்ஸ் உற்சாகம் கரை புரள்கிறது.

குறைந்தது 12 ஓவர் வரை களத்தில் நிற்க முயற்சிப்பேன் என்று சபதம் செய்த டேர்டெவில்ஸ் கேப்டன் சேவக் சாதித்துக் கொண்டிருக்கிறார். கொச்சிக்கு எதிராக 18&வது ஓவர் வரை தாக்குப்பிடித்து 47 பந்தில் 80 ரன் விளாசியவர், ஐதராபாத்தில் சார்ஜர்ஸை உலுக்கி எடுத்துவிட்டார். டெல்லி துரத்தலின் 6வது ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட் அவுட். கண்ணுக்கெட்டாத தூரத்தில் 176 ரன் இலக்கு. மனம் தளராத விக்ரமனாக வீறுகொண்டார் வீரு! சார்ஜர்ஸ் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்தார். ஒரு டஜன் பவுண்டரி, அரை டஜன் சிக்சரை பறக்கவிட்டவர் 48 பந்தில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்ய... அதிர்ச்சியில் உறைந்தது ஐதராபாத். ஒரே மிதியில் சச்சின், வல்தாட்டி, காலிஸ் எல்லோரையும் ஓவர் டேக் செய்து ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார் சேவக்.

கொச்சி டஸ்கர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் அணிகளும் நம்பிக்கை குறையாமல் உற்சாகமாகவே உள்ளன. யுவராஜின் புனே மட்டுமே பரிதாபத்துக்குரிய ஒரே அணியாக எக்சிட் கேட்டில். தொடர்ச்சியாக ஏழு தோல்வி. ‘என்ன நடக்கிறது என்றே புரியவில்லை’ என்று புலம்புகிறார் யுவா.

கொல்கத்தா அரை இறுதிக்கு வெகு அருகே இருப்பதில் ஷாருக் கான் திருப்தி. டிவி ரேட்டிங்கில் ஐபிஎல் டைவ் அடித்திருந்தாலும், இன்டர்நெட்டில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஜிவ்வென 85 சதவிகிதம் எகிறியிருக்கிறது.

நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் யுடிஆர்எஸ் முறையை, ஐபிஎல் போட்டியில் அறிமுகம் செய்ய ஆதரவு அதிகரித்து வருகிறது. ‘டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சுதாரித்துக்கொள்ள அவகாசம் அதிகம்.  டி20ல் ஒரு தவறான முடிவு கூட ஆட்டத்தின் முடிவை அடியோடு மாற்றிவிடும் என்பதால், நாட்டாமை தீர்ப்பை மாற்றச் சொல்லி கேட்கும் உரிமை அவசியம் வேண்டும்’ என்கிறார் ஜெயவர்தனே.
 பா.சங்கர்