ஒரு இனிமையான காதல் கதையின் இடையில் அழகியலை நிரப்பி ஒரு கமர்ஷியல் ஹாம்பெர்கர் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. அதற்கு சாஃப்ட் டிரிங்க் காம்போவாக இசையைக் கூட்டி இனிமை சேர்த்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜும்.
இது எப்படிப்பட்ட கதை என்று முதல் காட்சியிலேயே ‘எங்கேயும் காதல்’ பாடலில் தோன்றி ஒரு நடனமும் ஆடி, நம்மைத் தயார் செய்துவிடுகிறார் பிரபுதேவா. அதற்குக் காதல் நகரமான பாரீஸும் பின்னணியில் அழகைச் சேர்த்து, முழுமையான ஒரு காதல் அனுபவத்துக்கு நம்மைத் தயாராக்கி விடுகிறது. வெற்றிகரமான தொழிலதிபரான ஜெயம் ரவி, ஓய்வுக்காக பிரான்ஸ் வந்து, நாளொரு ஜோடியும் பொழுதொரு இன்பமுமாக சிறகடித்துக்கொண்டிருக்கிறார். காதல் என்றாலே அலர்ஜியாக இருக்கும் அவரது வாழ்வில் காதலின் புனிதம் உணர்ந்த ஹன்சிகா வர... என்ன ஆகிறது என்பது கதை.
இதுவரை குடும்பமும், கூட்டமுமாகவே நடித்துவந்த ஜெயம் ரவிக்கு இதில் கட்டவிழ்த்துவிட்ட வேடம். படம் முழுவதும் ஹன்சிகா உள்ளிட்ட கட்டழகிகளுடன் ‘வாழ்ந்திருக்கிறார்’ மனிதர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்துக்கும், குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்துக்கும் என்ன வித்தியாசம் என்று விளக்கும் ஹன்சிகாவின் பாக்கெட் மணியும் களவு போக, தன்னிடமிருக்கும் அத்தனை சூதாட்டப் பணத்தையும் திருடனிடம் கொடுத்து ஹன்சிகாவின் சிறிய தொகையை மீட்கும் ரவியின் மனதும் அவரைப்போலவே அழகு. தேவைக்கான இடங்களில் அவர் போடும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சண்டைகளும் டாப் கிளாஸ்.
ஆப்பிள் கன்னங்களும், பிளம்ஸ் உதடுகளுமாக நடமாடும் பழமுதிர் சோலையாக வலம் வருகிறார் ஹன்சிகா. ரவியின் லீலைகளுக்குள் சிக்கி விடக்கூடாதென்று விலக நினைத்தாலும் முடியாமல் அடுத்தடுத்து மறுக்க நினைக்கும் அத்தனை செயல்களையும் மறுக்காமல் செய்யும்போது கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார். ரவியை உசுப்பேற்ற ஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ் இருப்பதாக அவிழ்த்துவிட்டு, கடைசியில் அவரை இழக்கநேரும் காட்சியில், முகத்தை மறைத்து அழும் காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஊர்க்காதலுக்கெல்லாம் டிடெக்டிவ் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குள் இருக்கும் மகளின் மனது புரியாமல் இருக்கும் சுமனிடமே & ஹன்சிகாவின் அப்பாதான் அவர் என்று தெரியாமல் & ஹன்சிகாவை உளவு பார்க்க ரவி கேட்பதும், அது தன் மகள்தான் என்று சுமன் உணரும் கட்டமும் அருமையான பிளே. ‘‘அந்தத் தலைவலி கிளையன்ட் போயாச்சா..?’’ என்று ரவிதான் வந்துபோனார் என்பது தெரியாமல் ஹன்சிகா அவரிடம் கேட்க, ‘‘கிளையன்ட் போயாச்சு... தலைவலி போகலை...’’ என்று சுமன் பதில் சொல்லும் காட்சியும் அருமை.
காமெடிக்கான இடத்தைச் சரியாக இட்டு நிரப்பும் ராஜுசுந்தரம் குண்டுப்பெண்மணியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இடங்களிலெல்லாம் கைதட்டல்கள்.
பிரான்ஸை பிலிமுக்குள் கொண்டுவந்திருக்கும் நீரவ் ஷாவின் குளுமையான ஒளிப்பதிவுக்கும், திகட்டத் திகட்டப் பாடல்களைத் தந்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தமிழ் வசனங்கள் இருப்பதால் மட்டுமே ஒரு தமிழ்ப்படமாக உணரவேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆங்கிலப்பட நேர்த்தியில் மூன்று மணிநேரமும் கரைந்து போகிறோம்.
எங்கேயும் காதல் - இளமைக் கொண்டாட்டம்..!
குங்குமம் விமர்சனக்குழு