பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


பட்டிமன்றத்துக்குன்னு சில மரபுகள் இருக்கு. அது குன்றக்குடி சாமி மாதிரி பெரியவங்க வகுத்தது. எதற்காகவும் அந்த மரபுகளை மீறக்கூடாதுங்கிறதுல உறுதியா இருப்பேன்.

பட்டிமன்றங்கள்ல பேசணும்னா பேராசிரியராவோ, புலவராவோ இருக்கணும். குறைஞ்சது உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவாவது இருக்கணும். எதிர்வாதம் செய்றபோது ஒருத்தர் பேசுறதை மறுத்தும் பேசணும். மறுத்துப் பேசுறவர் தங்களுக்கு இணையானவரா இருக்கணும்னு எதிர்த் தரப்புப் பேச்சாளர்கள் எதிர்பார்க்கிறதில தப்பு இல்லை.

பொருளாதாரம் படிச்சிட்டு வங்கியில வேலை செய்றவர் ராஜா. என்னோட சொந்தக்காரர் வேற. ‘சொந்தக்காரர்ங்கிறதால தகுதியில்லாத ஒருத்தரை அணியில போட்டு அண்ணன் இப்படி கூத்தடிச்சுட்டாரே’ன்னு குழுவில உள்ளவங்க நினைச்சுடக்கூடாது பாருங்க... அதனாலயே ராஜாவை தவிர்த்தேன். ஆனாலும், ராஜா வழக்கம் போலவே பட்டிமன்றங்களைப் பாக்க வந்து போய்க்கிட்டிருந்தார். ‘எனக்கு வாய்ப்பு குடுங்க’ன்னு ஒரு வார்த்தை கூட கேக்கலே!

என் குழுவில இருந்த காந்தி மதியம்மா, ராஜாராம் மாதிரி சீனியர் ஆட்கள் கொஞ்ச நாள்ல நேரடியாவே என்கிட்ட, ‘ஏன் ராஜாவைத் தவிர்க்கிறீங்கண்ணே’ன்னு கேட்கத் தொடங்கிட்டாங்க. நானும் என் மனசில இருந்ததைச் சொல்லி, ‘ராஜாவை விட எனக்கு என் குழு ரொம்ப முக்கியம். அதனாலதான் தவிர்த்தேன்’னு சொன்னேன். ஆனா, எல்லா பேச்சாளர்கள் ஆதரவும் ராஜாவுக்கு இருந்துச்சு. அதுக்குப்பிறகும் தேவை ஏற்படுறபோது மட்டும் ராஜாவை போட்டுக்குவேன். போடுற போதெல்லாம் ராஜா அதை தக்க வச்சுக்கிட்டார். தனக்குன்னு ஒரு தனித்துவத்தை உருவாக்கிக்கிட்டார்.

 ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரைத் தவிர்க்க முடியலே. ‘அந்த ஒல்லியான பேச்சாளர் வரலையா’ன்னு கேக்கத் தொடங்கிட்டாங்க! எந்த தருணத்திலயும் ராஜாவுக்கு என் தனிப்பட்ட ஆதரவு இருந்ததில்லே. இன்னைக்கு அவருக்கு கிடைச்சிருக்கிற வெற்றியானது, அவரோட முயற்சிக்கும் பணிவுக்கும் பொறுமைக்கும் கிடைச்சது. 

எங்க குழுவைச் சேர்ந்த இன்னொரு முக்கிய பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன். சிவகாசி கல்லூரியில ஆங்கிலத்துறை பேராசிரியர். தமிழ், ஆங்கிலத்தில சிறப்பா பேசக்கூடியவர். செய்திகளை ரத்தினச்சுருக்கமா முத்து முத்தா வைப்பார். எங்க போனாலும் அவருக்குன்னு தனியா ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிருவார்.

இன்னொரு பேச்சாளர் முனைவர் ராம.சௌந்தரவல்லி. குற்றாலம் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர். ஆழமான சிந்தனையாளர். இலக்கியம், சமுதாயம் எதுவா இருந்தாலும் ஆக்கபூர்வமா பேசக்கூடியவங்க. இவங்களோட தனிச்சொற்பொழிவும் ரொம்பச் சிறப்பா இருக்கும்.

பேராசிரியர் ரமணிப்பாண்டியனும் எங்க குழுவைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர். ரசனையா பேசக்கூடியவர்.

பட்டிமன்றங்கள் மிகப்பெரும் ஜனவெளிக்கு வரக் காரணமா இருந்த மீடியாக்கள்ல வானொலிக்கு முக்கிய பங்கிருக்கு. தொடக்கத்துல இலக்கியப் பேருரைகள்தான் வானொலியில ஒலி பரப்பாகும். நானே நிறைய பேசியிருக்கேன். அந்த உரைகளை எல்லாம் தொகுத்து ‘உரைமலர்கள்’னு புத்தகமா போட்டிருக்கேன். அந்தப் புத்தகம் பல பல்கலைக்கழகங்கள்ல பாடமா இருந்திருக்கு.

குன்றக்குடி சாமி காலத்திலதான் வானொலிகளின் கவனம், பட்டிமன்றத்துப் பக்கம் திரும்புச்சு. மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல திருக்குறள் ஈராயிரம் ஆண்டு விழாவில, குன்றக்குடி சாமி தலைமையில நடந்த பட்டிமன்றம் பல வானொலிகள்ல நேரலையில ஒலிபரப்பாச்சு. அதுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்து தனியாவே வானொலி பட்டிமன்றங்கள் போடத் தொடங்கிட்டாங்க. அதன்மூலமா பட்டிதொட்டிக்கெல்லாம் பட்டிமன்றம் போய்ச் சேந்துச்சு.

தொலைக்காட்சின்னு எடுத்துக்கிட்டா அந்தக் காலத்தில தூர்தர்ஷன் மட்டும்தான். அதுவும் குறிப்பிட்ட பகுதிகள்லதான் ஒளிபரப்பாகும். எனக்கு முன்னாடியே குன்றக்குடி சாமி, அவ்வை நடராஜன், திருக்குறள் முனுசாமி, பேராசிரியர் சிற்சபேசன், டாக்டர் சத்தியசீலன் மாதிரி பெரியவங்க பட்டிமன்றங்கள் நடத்திக்கிட்டிருந்தாங்க. 87ம் வருஷம்தான் எனக்கு தொலைக்காட்சி வாய்ப்புக் கிடைச்சுச்சு.

மாணிக்கம்னு ஒரு மாணவர். மாணவர் மட்டுமில்லே... சகோதரனும் கூட. பெரிய இலக்கிய ஆர்வலர். கோயமுத்தூர்ல பாரதி இலக்கியப் பேரவைன்னு ஒரு அமைப்பு நடத்திக்கிட்டிருந்தார். அது சார்பா ‘பாரதி விழா’ ஏற்பாடு செஞ்சிருந்தார். அதுல எங்க பட்டிமன்றம். அந்த விழாவுக்கு தூர்தர்ஷனோட அன்றைய துணை இயக்குனர் நடராஜன் அவர்களும் வந்திருந்தார். பட்டிமன்றத்தை முழுமையாப் பாத்த நடராஜன், ‘நீங்க தொலைக்காட்சி பட்டிமன்றங்களுக்கு வந்திருக்கீங்களா’ன்னு கேட்டார். ‘இல்லைங்க’ன்னு சொன்னேன். ‘சரி, பார்க்கலாம்’னு சொல்லிட்டுப் போயிட்டார். அந்த வருட தீபாவளி பண்டிகை சமயத்தில நடராஜன்கிட்ட இருந்து போன். ‘தீபாவளிக்காக தூர்தர்ஷனுக்கு பட்டிமன்றம் போடணும். பேச்சாளர்களை நீங்களே அழைச்சுக்கிட்டு வந்திடுங்க’ன்னார். எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அப்போ தொலைக்காட்சிங்கிறது அபூர்வமான விஷயம். படபடன்னு வேலையில இறங்கிட்டோம். ‘குடும்பத்தின் பெருமைக்கு பெரிதும் காரணம் கணவனா? மனைவியா?’ன்னு தலைப்பு குடுத்தோம்.

அந்தப் பட்டிமன்றத்தில ஏகப்பட்ட படிப்பினைகள். தொலைக்காட்சி பட்டிமன்றங்கள்ல என்ன நெருக்கடின்னா, குறித்த நேரத்துக்குள்ள முடிச்சாகணும். ஆனா, சில பேச்சாளர்கள் பலமுறை மணி அடிச்சும், ஆர்வக்கோளாறுல அவங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்காங்க. அதனால தீர்ப்புக்கு வர்றதுக்கு முன்னாடியே நேரம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியலே. ‘அய்யா... தீர்ப்பு இல்லாம பட்டிமன்றம் போடுறது முறையாகாது. நான் சொல்ற தீர்ப்பை சொல்லிடறேன். நீங்க போடுறதை போட்டுக்குங்க’ன்னு சொல்லிட்டு ரொம்ப சுருக்கமா சில செய்திகளைச் சொல்லி முடிச்சுட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு தூர்தர்ஷனோட பெண் உயர் அதிகாரி வந்திருந்தாங்க. அவங்க, ‘பத்து நிமிஷம் அதிகமாப் போனாலும் பரவாயில்லே... கண்டிப்பா தீர்ப்போடதான் பட்டிமன்றத்தை ஒளிபரப்பணும்’னு உறுதியா சொல்லிட்டாங்க.

அது ஏற்படுத்தின பரபரப்பு இருக்கு பாருங்க... பிரமாதமான வரவேற்பு! பத்திரிகைகள் மிகச் சிறப்பா எழுதியிருந்தாங்க. ‘பரவசமூட்டிய பாப்பையா’ன்னு தலைப்புப் போட்டு ஒரு பத்திரிகையில எழுதினாங்க. பெண்கள் மத்தியில மிகப்பெரிய தாக்கம். அந்தத் தாக்கத்தை நானே நேரா கண்டேன். அந்த பட்டிமன்றம் ஒளிபரப்பான வேளை... கோயமுத்தூர் பக்கம் ஒரு ஊருக்கு பஸ்சுல போய்க்கிட்டிருக்கேன். சூலூர் பக்கத்தில ரெண்டு பெண்கள் பஸ்சில ஏறினாங்க. என்னைவிட வயசுல பெரியவங்க. அவங்களைப் பாத்ததும், ‘உக்காருங்கம்மா’ன்னு சொல்லி எழுந்திருக்கப் போனேன். என் முகத்தைப் பாத்த அந்தப் பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டாங்க. முகம் மலர்ந்து போச்சு. ‘நீங்கதானே பாப்பையா... நீங்க உக்காருங்கய்யா... உங்களை நாங்க கும்பிடணும்’னு சொன்னதைக் கேட்டு நான் ஆடிப்போயிட்டேன். நெகிழ்ச்சியான அனுபவம்.

நடராஜன் அவர்களை காலமெல்லாம் வாழ்த்தணும் போலிருக்கு.

சன் டிவிக்கும் எனக்குமான பந்தம் 14 வருஷத்துக்கு மேலானது. பட்டிமன்றத்திலதான் அந்த பந்தம் தொடங்குச்சு. அதுக்குப் பிறகு இலக்கியம் பேசுற வாய்ப்பைக் கொடுத்தாங்க. 14 வருஷமா தினமும் காலையில இலக்கியம் பேசுறேன். இது மிக முக்கியமான பதிவு.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineதிருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, அறநெறிச்சாரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம்... எல்லாம் சொல்லியாச்சு. சன் டிவி செய்ற மிகப்பெரிய இலக்கியத் தொண்டு இது. இன்னைக்கு இதோட அருமை பலபேருக்குத் தெரியாமப் போகலாம். ஆனா, காலம் இதைப் போற்றி வாழ்த்தும். இந்த நிகழ்ச்சியில எந்தத் தலையீடும் இருந்ததில்லே. மிக சுதந்திரமா, ஈடுபாட்டோட இயங்குறேன். இடைப்பட்ட சில காலங்கள்ல வெளியில் இருந்து எனக்கு பல நெருக்கடிகள் வந்துச்சு. எந்தச் சூழல்லயும் நான் சன் டிவியோட தொடர்பை துண்டிச்சுக்க விரும்பலே. பட்டிமன்ற வளர்ச்சிக்கு மட்டுமில்லாம, என் வளர்ச்சிக்கும் சன் டிவி ஒரு முக்கியக் காரணம்.

இன்னைக்கு பட்டிமன்றத்தோட எல்லை பிரமாண்டமா விரிஞ்சிருச்சு. கடினமான செய்திகளை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கக் கூட இந்தக் கலைவடிவம் பயன் படுது. மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பிரச்னைகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிர்ப்பான செய்திகள்னு பலதுறைகள் சார்ந்து இன்னைக்கு பட்டிமன்றங்கள் நடத்தத் தொடங்கியாச்சு. இருந்தாலும் இன்னைக்கும் பட்டிமன்றங்களுக்கு எதிரான குரல் ஒரு பக்கமிருந்து ஒலிச்சுக்கிட்டுத்தான் இருக்கு. பட்டிமன்றத்துக்கு கிடைக்கிற கரவொலியிலேயே அந்த எதிர்ப்புக் குரல்கள் தேய்ஞ்சு போயிடுது.
அடுத்த வாரம் சந்திப்போமா!
சாலமன் பாப்பையா
படம்: புதூர் சரவணன்