ஒரு எஸ்பியின் டைரி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவன் தானே கொலையானதாக ஆடிய நாடகம் இது... விடைகளைத் தேடும் முன்னே கண்ணனைத் தேட வேண்டுமே!

சில ஆண்டுகளுக்கு முன், மாந்திரீகம் செய்து கொண்டிருந்த கண்ணனுக்கு போதிய வருமானம் இல்லை. வருமானத்தைப் பெருக்க, பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் பழ வியாபாரம் செய்திருக்கிறான். அப்போது ஒரு பெண்ணுடன் பழக்கம். தனக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதை மறைத்து, அந்தப் பெண்ணையும் மணந்தான். அவர்களுக்கு ஒரு குழந்தை. இப்போது 2 குடும்பம், 4 குழந்தைகள். மாந்திரீகம், பழக்கடை, கல்யாண புரோக்கர் என பல கடமைகள். போதிய வருமானம் இல்லாமல் திணறல்.

அந்த நேரத்தில் பிரபு என்ற இளைஞன், ‘‘ஒரு பெண் என் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் என்னைக் காதலிக்கும்படி வசியம் செய்ய வேண்டும்’’ என்று கண்ணனிடம் வந்திருக்கிறான். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டான் கண்ணன். ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் கை மாறுகிறது. பிறகு பிரபுவை அழைத்து பூஜை, மாந்திரீகம் செய்திருக்கிறான் கண்ணன்.
நம்பிக்கையோடு அந்தப் பெண்ணிடம் பிரபு தன் காதலை மறுபடியும் சொல்ல, அவளோ பலர் முன்னிலையில் பிரபுவை செருப்பால் அடித்திருக்கிறாள். ஏமாந்த கோபத்தில், கண்ணனிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்தான் பிரபு. ‘‘கோபப் படாதே. இன்னொரு பூஜை செய்கிறேன். அதற்குப் பிறகும் அவள் ஏற்கவில்லை என்றால் பணத்தைத் தந்துவிடுகிறேன். அதற்கு முன் 3 நாள் விரதம்’’ என்று பிரபுவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறான் கண்ணன். பிரபுவை ஊருக்கு ஒதுக்குப்புறமான கோயிலுக்கு அழைத்துச் சென்று, தீர்த்தத்தில் சயனைட் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கிறான்.

காதல் தோல்வியில் பிரபு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினரும் ஊராரும் நினைத்திருக்கிறார்கள். பிரபுவின் நண்பர் ஒருவர் மட்டும் மந்திரவாதி கண்ணன் மீது சந்தேகம் உள்ளதாக போலீசில் தெரிவித்திருக்கிறார். விசாரித்த போலீசார் கண்ணனைக் கைது செய்திருக்கின்றனர்.

இந்த வழக்கில் தனக்காக ஆஜரான வக்கீலுக்குக் கொடுக்க கண்ணனிடம் பணம் இல்லை. பணம் இல்லை என்றால் வாதாட முடியாது என மறுத்திருக்கிறார் வக்கீல். இதனால் கண்ணனுக்குத் தூக்கு அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் சூழல். இந்நிலையில், ‘யாராவது ஒருவரைக் கொன்று, தான் இறந்து விட்டதாக நம்ப வைத்துவிட்டால், வழக்கில் இருந்து விடுபடலாம். வக்கீலுக்கும் பணம் கொடுக்க வேண்டாம்’ என்று திட்டமிட்டிருக்கிறான் கண்ணன். அதன்படி மனைவி ரமா, நண்பன் பரமன் உதவியோடு தம்பி துரையை கொலை செய்து, தன் சடலமாகக் காட்ட முயன்று நாடகமாடியிருக்கிறான்!

கண்ணனுடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கண்காணித்தோம். முதல் மனைவி ரமாவின் சகோதரி சங்கரியிடம் கண்ணன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது.
‘‘எங்கள் வீட்டுக்கு கண்ணன் ஒருநாள் வந்தார். அப்போது, ‘ஒரு கொலை செய்து விட்டு செத்தது நான்தான் என்று நம்ப வைத்துள்ளேன். இப்போது தலைமறைவாக இருக்கிறேன். விரைவில் வருவேன். அதுவரை என் மனைவி, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்’ என்றார். அதற்கு பிறகு ஒருமுறை போனில் பேசினார்’’ என்று சங்கரி கூறினார். 

‘‘கொலைகாரனுக்கு உதவினால் உனக்கும் தண்டனை கிடைக்கும். தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அவனைப் பிடிக்க நீ உதவ வேண்டும். அவன் பேசினால் உடனே எங்களுக்குத் தகவல் கொடு’’ என்று சங்கரியிடம் அறிவுறுத்தினேன். மற்ற வழிகளிலும் கண்ணனைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம்.

தலைமறைவாக சுற்றிக் கொண்டிருந்த கொலைகாரனுக்கு பிள்ளைப்பாசம் வந்தது. சங்கரிக்கு போன்... ‘‘பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் அழைத்து வா’’. அதை அப்படியே எங்களிடம் சங்கரி தெரிவித்தார். பஸ் ஸ்டாண்டில் கண்ணனின் குழந்தைகளுடன் சங்கரி காத்திருக்கிறார். அங்கு வந்த கண்ணனை பரமன் துணையுடன் அடையாளம் கண்டு, என் குழுவினர் மடக்கிப் பிடித்துவிட்டார்கள். ‘இனி தப்ப முடியாது’ என அதிர்ச்சியில் உறைகிறான் கண்ணன்.

‘‘தம்பிதுரையை ஏன் கொன்றாய்?’’ & இதுதான் எங்கள் ஒரே கேள்வி.

கண்ணனின் பதில் அடுத்தடுத்து அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.

‘‘எனது நண்பன் பரமன் மனைவியுடன் தம்பிதுரை தகாத உறவு வைத்திருந்தான். அவமானமாக இருக்கிறது என்று பரமன் அடிக்கடி சொல்லுவான். ஒருநாள் தம்பிதுரையும் நானும் சாராயம் குடித்தோம். இரவு என் வீட்டில் கோழிக்கறி சாப்பிட்டோம். நல்ல போதையில் இருந்ததால், அங்கேயே தங்க விரும்பினான் தம்பிதுரை. நானும் சம்மதித்தேன். நடு இரவில் போதையில் தூக்கம் கலைந்து புரண்டு கொண்டிருந்தேன். அப்போது, பரமன் மனைவி& தம்பிதுரை உறவு நினைவுக்கு வந்தது. விழித்து எட்டிப் பார்த்தேன். அங்கு என் மனைவியும் அவனும் கட்டிப் புரண்டு கொண்டிருந்தனர். அதிர்ச்சி. பக்கத்தில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் போதையில். அதனால் அதைப் பார்க்காதது போல இருந்து விட்டேன். அதிகாலை எனக்கு முன்பாகவே எழுந்து அவன் போய் விட்டான். என் மனைவியை அடித்துத் துவைத்தேன். குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

அவனை எப்படியாவது பழிவாங்க முடிவு செய்தேன். வேளை பார்த்து அவனுக்கும் சயனைட் கொடுத்து கொன்றேன். முகம் தெரியாமல் இருப்பதற்காக, பனைமட்டையில் போட்டு, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினேன்’’ என்றான் கண்ணன்.

மாந்திரீகம் செய்து ஊரை ஏமாற்றியது... மனைவி, 3 குழந்தைகள் உள்ளதை மறைத்து 2வது திருமணம் செய்தது... ஒருதலைக் காதல் செய்த இளைஞனை நம்ப வைத்து தீர்த்தத்தில் சயனைட் கலந்து கொன்றது... இறந்துவிட்டதாக நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்றது... தனக்கு துரோகம் செய்த தம்பிதுரையை கொன்று, பரமன் மனைவியிடம் உறவு வைத்ததற்காக கொன்றதாக, பரமனிடம் கூறி, தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வைத்தது... தம்பிதுரையின் தந்தையிடம் மகன் போலவே பேசி போலீசில் புகார் கொடுக்க முடியாமல் செய்தது... தம்பிதுரைதான் இறந்தது என மனைவியிடம்கூட மறைத்தது... இப்படி ஒரே கொலையில் பல திட்டங்களை வைத்திருந்த கண்ணனைப் பார்க்கையில் ஆச்சரியம்தான்!

மிகப்பெரிய புத்திசாலியாக இருந்தாலும், தடயமே இல்லாமல் கொலை செய்ய முடியாது என்பது கண்ணனுக்குத் தெரியவில்லை. திட்டமிட்டு சாமர்த்தியமாகச் செயல்பட்ட கண்ணன், தம்பிதுரையின் மொபட் சாவியை மறந்தான். அந்த சாவி மூலம் துப்புத் துலக்கி, ‘எவ்வளவு பெரிய குற்றவாளியும் தமிழ்நாடு காவல் துறைக்கு சாதாரணமே’ என்று நிரூபித்தோம்!
(பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன...)
துப்பறிவோம்!
அ.கலியமூர்த்தி