நீங்கள் டோனி ஆக ரெடியா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னால் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப் பயணம் சென்றிருந்தது. சொந்த மண்ணில் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு இருந்தாலும், இந்திய வீரர்களுக்கு அந்தத் தொடர் முக்கியமானது. ஏனென்றால், அந்தத் தொடரின் செயல்பாடு அணித் தேர்வர்களின் கவனத்தை ஈர்க்கலாம்; உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கலாம் என்ற சூழ்நிலையில் எல்லோருமே ஒருவித பதற்றத்தோடு இருந்தார்கள்.

சச்சின், ஷேவக், கம்பீர் போன்ற சீனியர்கள் அந்தத் தொடரில் இல்லை என்றாலும், உடல் தகுதி அடிப்படையில் அவர்கள் கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துவிடுவார்கள் என்ற கணிப்பு இருந்தது. அதைத் தாண்டி சில மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் தங்கள் முழுத் திறமையைக் காட்டி விளையாடிய நேரம்...

தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒன்றில் தோல்வி, அடுத்ததில் வெற்றி, மூன்றாவது டிரா என்று தொடரைச் சமன் செய்துவிட்டார்கள். அடுத்து வந்த ட்வென்ட்டி 20 போட்டியில் வெற்றி! அதையடுத்து எல்லோரும் எதிர்பார்த்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்.

முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. அடுத்த இரண்டில் இந்தியா வெல்ல, கடைசி இரண்டை மீண்டும் தென் ஆப்ரிக்கா வென்று தொடரையும் கைப்பற்றியது. அந்தத் தோல்வி இந்திய அணியைக் கொஞ்சம் சீரியஸான மனநிலைக்குக் கொண்டு வந்தது. விஷயம் அதுவல்ல...

இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் ஆடிக் கொண்டிருந்த நேரத்தில்தான் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது தேர்வுக்குழு. பலமான மட்டை வீரர்கள், வலுவான வேகப்பந்து வீச்சு என்று 14 பேரை முடிவு செய்தார்கள்.

அந்தப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு டோனியை வீடியோ கான்பரன்ஸில் அழைத்துப் பேசினர். பதினைந்தாவது நபராக டோனி சொன்ன பெயர், பியூஷ் சாவ்லா. தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெற்றிருந்த சாவ்லா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. சொல்லப் போனால் ஒரு போட்டியில்தான் விளையாடவே செய்திருந்தார். அதிலும் பிரமாதமான பங்களிப்பு இல்லை. அவர் எதற்கு என்று தேர்வுக் குழு கேட்க, ‘‘நீங்கள் சொன்ன 14 பேரைப் பற்றி நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே... 15வது நபர் என் சாய்ஸ் என்றால் அது பியூஷ் சாவ்லாதான்...’’ என்று தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார் டோனி.

அந்தத் திடமான குணம்தான் தலைவனுக்கு அழகு. எதற்கு பியூஷ் சாவ்லா என்றதும், ‘‘ஓகே சார்... நீங்க யாரைச் சொல்றீங்களோ அவரைச் சேர்த்துக்கலாம்’’ என்று வளைந்து கொடுக்கவில்லை. ‘‘எனக்கு இவர் வேண்டும்’’ என்ற திடமான முடிவில் நின்றார் டோனி.

எப்போதுமே தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, யார் நமக்கு எந்த நேரத்தில் பயன்படுவார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவனை எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாகத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும் என்று யோசித்து ஆட்களைக் கழற்றி விடுவது ஆபத்தானது. அவருக்கான நேரம் வரும்போது, அப்படி ஒருவர் இல்லையே என்று வருந்தும் நிலை ஏற்பட்டுவிடும்.

உலகக் கோப்பை பட்டியலில் பியூஷ் சாவ்லா அறிவிக்கப்பட்டபோது பலரும், ‘அவனுக்கு மச்சம்... மைதானத்துக்கே வராமல் உலகக் கோப்பையில் இந்திய அணி அனுபவிக்கும் அத்தனை சலுகைகளையும் அனுபவிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு’ என்று முணுமுணுத்தார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் சாவ்லா ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ்.

ஆனால், தன்னுடைய தேர்வு சரிதான் என்பதை பெங்களூருவில் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது பியூஷ் சாவ்லாவை இறக்கி உணரச் செய்தார் டோனி. கருத்து சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லத் தகுதியானதுதான் என்பதை மற்றவர்களுக்கும், நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற உத்வேகத்தை நம் அணியினருக்கும் உணர்த்திய போட்டி அது.

அதனால், சாவ்லாவும் முக்கியமானவர்தான் என்று தான் நம்பியதை எல்லோரையும் நம்ப வைத்தார். அதுதான் தலைவனுக்குரிய குணம்.
உலகக் கோப்பை முடிந்து ஓய்வெடுக்கக் கூட நேரமில்லாமல் ஐ.பி.எல். தொடருக்கு ஆடவந்துவிட்டார். சென்னை அணி முதல் போட்டியில் கொஞ்சம் நெருக்கடியான சூழலில்தான் வெற்றி பெற்றது. கொஞ்சம் மிஸ் பண்ணியிருந்தாலும் கொல்கத்தா வென்றிருக்கும். அந்தச் சூழலில் டோனி சொன்னார்... ‘‘அணியில் பலரும் புதியவர்கள்... அதனால் எங்களுக்குள் புரிதல் வர கொஞ்சம் அவகாசம் தேவை... அதன்பிறகு எல்லாம் சரியாகிவிடும்!’’

இந்த வார்த்தைகள் அதி முக்கியமானவை. வெற்றிகரமான அணியாக இருந்தாலும் கூட்டு முயற்சிக்கு ஒருமித்த மனம் வேண்டும். அதற்கு அணியினருக்குள் புரிதல் வேண்டும். அதைத் தலைவன் தூண்டிவிட வேண்டும். அந்தப் புரிதல் வரும்வரையில் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். சின்ன பின்னடைவுக்கே சீறத் தொடங்கினால் அணியினர் எல்லோரும் தனித்தனி தீவாக நின்றுவிடுவார்கள். இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிதானமாக முன்னேறத் தொடங்கியிருக்கிறது. காரணம், டோனி தலைவராக இருப்பதுதான்!
(தொடரும்)
 சி.முருகேஷ்பாபு