பலாத்காரம்



தலையில் ஈரத்துண்டோடு சமையலறையிலிருந்து வந்தாள் விசாலாட்சி. ஊதுவத்தியின் நறுமணம் பூஜையறையில் மாமியாரின் இருப்பை உணர்த்தியது. செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த கணவன் நாச்சியப்பனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.  ‘‘என்னங்க.. அந்தக் கொடுமையை படிச்சீங்களா..?’’ என்றாள் தலையைத் துவட்டியபடியே.‘‘டாலர் விலை அறுபத்தொம்பது ரூபாயை தாண்டிடுச்சே.... அதைச் சொல்றியா..?

‘‘உங்களுக்கு எப்பவும் யூஎஸ் கரன்ஸி பத்தின கவலைதானா..? கஷ்மீர்ல எட்டு வயசு பொண்ணை நாசம் பண்ணினாங்களே... அந்த கேஸ் பத்தி முதல் பக்கத்துலேயே வந்திருக்கு...’’ ‘‘இந்த மாதிரி ந்யூஸ் தினமும் ஏதாவது ஒண்ணு வந்துட்டேதான் இருக்கு விசா...’’‘‘இது மகா கொடுமைங்க. குழந்தையை கடத்திட்டு போயி எட்டு பேரு செதச்சி சின்னாபின்னமாக்கி கொலையும் பண்ணியிருக்காங்க. அவனுங்களை வெட்டிப் பொதச்சிருக்க வேண்டாம்?’’ உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினாள்.  

‘‘ஸென்ஸெக்ஸ் புதுசா உச்சத்தை தொட்டிருக்கு. கவனிச்சியா..?’’

‘‘ஏங்க... நாட்டுல கொடூரம் நடந்துகிட்டிருக்கு... நீங்க ஷேர் மார்க்கெட்டையே பார்த்திட்டிருக்கீங்க... நமக்கும் ஒரு மக இருக்கா...’’
‘‘விசா... தில்லி நிர்பயாவுல ஆரம்பிச்சுது. அப்பறம், ஒவ்வொரு ஊர்லயும் தொடர்ந்து நடக்குது. இப்பகூட சென்னைல ஏழாம்கிளாஸ் பொண்ணை பதினெட்டு பேர்  பலாத்காரம் பண்ணாங்கன்னு ஒரு செய்தி... இதே மாதிரி படிச்சி படிச்சி மரத்துப் போயிடுச்சு. அதனாலதான் நான் பிஸினஸ் பக்கத்துக்கு போயிடறேன்...’’

‘‘அந்த கதுவா பொண்ணு ரொம்ப பாவங்க. பெத்தவங்க மனசு என்ன பாடுபட்டிருக்கும்...’’‘‘எங்கயோ யாருக்கோ நடந்த விஷயத்துக்கு ஏன் இவ்ளோ அலட்டிக்கறே..?’’

‘‘இதையெல்லாம் பாக்கையிலே கடவுள்னு ஒருத்தன் இருக்கானான்னு சந்தேகமா இருக்குங்க. இந்த மாதிரி ஒலகத்துலே இருக்கறதை விட உயிரை விட்டுடலாம்னு தோணுது...’’ ‘‘நீ போயிட்டா எப்படி விசா..? நம்ம மீனா சமஞ்சா சடங்கு வெக்கணும்... கல்யாணம், மறுதாட்டு எல்லாம் இருக்கு. நான் ஒத்தையிலே என்ன செய்யறது?’’ என்றான் நாச்சியப்பன் நகைச்சுவையாக.    
 
‘‘ஆன்ட்டி... மீனா விளையாட வருவாளா?’’ வாசலில் சஞ்சனா கேட்க, பின்னணியில் பட்டாளமே காத்திருந்தது. எல்லோரும் அடுக்ககத்தில் வசிக்கும் பள்ளிப் பிள்ளைகள். அன்று விடுமுறையானதால் காலையிலேயே கூடிவிட்டனர்.விசாலாட்சி, ‘‘மீனூ... உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்தாச்சு...’’ உள்நோக்கி குரல் கொடுத்துவிட்டு வந்திருந்த பட்டாளத்தை நோக்கினாள். ‘‘சின்மயி... ஏதோ சம்மர் கோச்சிங் போறியாமே..?’’
‘‘நீச்சல் க்ளாஸ் சேர்ந்திருந்தேன் ஆன்ட்டி...’’

‘‘அதைவிட கராத்தே கத்துட்டிருக்கலாம். சமயத்துல கைகொடுக்கும்!’’ராகுலும் அனிரூத்தும் முறையே ஐஃபோனையும் டேப்லெட்டையும் நோண்டிக் கொண்டிருக்க, கவுதம் ‘‘நாங்க புதுசா ஒரு கேம் கண்டுபிடிச்சிருக்கோம்...’’ என்றான்.வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் வெளியே வந்த மகளிடம், ‘‘மேல துப்பட்டா போட்டு போ மீனூ...’’ என்றாள். ஆரபி, ‘‘பக்கத்து தெரு அபர்ணா வீட்டுக்கு போயிடலான்டி...’’ என்றதற்கு விசாலாட்சி, ‘‘எதுக்கு..? இங்ஙனயே வெளையாடுங்க...’’ என்றாள்.

மதுப்ரியா, ‘‘இல்ல ஆன்ட்டி. நம்ம ஏரியாவுல இன்னிக்கி பவர்கட்...’’ என்றவுடன் மீனாளும் ‘‘ஆமாம்மா. கரண்ட் இல்லாம வெக்கை அடிக்கும்...’’ என்றாள்.‘‘சரி. சீக்கிரமா வந்துடணும்...’’ என்றதும் பூர்ணிமா உட்பட எல்லோரும் ‘‘ஹேய்.....’’ என உற்சாகமாக ஓடி மறைந்தனர்.
பழங்காலத்துப் பிரதிநிதியாக பாசமே மூச்சுக்காற்றாக விளங்கும் தேனம்மை ஆச்சி ‘நகரத்தார் மலரை’ மூடிவிட்டு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். பேத்தி வீடு திரும்பவில்லையே என்று கவலை வந்து விட்டது. மருமகளை அழைத்தாள். ‘‘விசாலம்...’’

‘‘இந்தா வாரேன் அத்தே...’’ ‘‘மணி பதினொண்ணாகப் போகுது. இன்னும் மீனாளைக் காணோமே..?’’

அப்பொழுதுதான் விசாலாட்சிக்கும் நினைவு வந்தது. கணவனை அனுப்பிவிட்டு சமையலறையில் மும்முரமாக இருந்ததில் பெண்ணை மறந்தே விட்டாள்.  ‘‘போய் பாக்கறேன்...’’ என்று கிளம்பி சாலையைக் கடந்து அபர்ணாவின் இல்லத்திற்குச் சென்றாள்.

அங்கே பிரதான கதவு திறந்திருக்க, பக்கவாட்டில் மோட்டார் அறையின் பின்புறம் அலறல் சத்தம் கேட்டது. ‘‘அய்யோ என்னை விட்ருங்க... ஒண்ணும் செஞ்சுடாதீங்க...’’குரல் மீனாளுடையதுதான். உடனே விசாலாட்சியின் மனம் பிள்ளையார்பட்டி விநாயகரைத் துதிக்க ஆரம்பித்தது. சுவரோரம் ஒளிந்துகொண்டு அவள் பார்த்த காட்சி அதிர்ச்சி யில் உறைய வைத்தது.

அலுவலகக் கணினியில் பங்குச்சந்தை நிலவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நாச்சி யப்பனிடம், ‘‘ஸ்டாக் மார்க்கெட் எப்டியிருக்கு..?’’ என்றார் சக தணிக்கையாளர். ‘‘இருநூறு பாயின்ட்டுக்கு மேல ஏறியிருக்கு. முப்பத்தேழா யிரமாயிடும்னு நெனைக்கறேன்...’’ என்றான். அப்பொழுது மனைவி கைபேசியில் அழைத்தாள்.

‘‘என்ன விசா..?’’‘‘நம்ம மீனாவை... மூணு பேரு...’’ கோர்வையில்லாமல் பேசினாள்.‘‘என்ன சொல்றே..? எங்க..? எப்பிடி..?’’ அதிர்ச்சியுடன் கேட்டான்.
‘‘பக்கத்து வீதி அபர்ணா அபார்ட்மென்ட்ஸ்ல...’’‘‘இதோ புறப்பட்டு வாரேன்...’’ என்றான் உடைந்த குரலில். நெற்றி வியர்வையைத் துடைத்தபடி மேலாளரிடம் சொல்லிவிட்டு உடனே கிளம்பியும், போராட்டக் குழுவினரின் திடீர் சாலை மறியலால் மூன்று கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு வீட்டையடைய ஒரு மணி நேரமாயிற்று.

நாலுகால் பாய்ச்சலில் மாடிப்படிகளைக் கடந்து வீட்டிற்குள் நுழைந்ததும் மகளைத் தேடினான்.ஹாலில் ஆச்சியின் அருகில் மற்ற பிள்ளைகளும் அவர்தம் தாய்மாரும் பேசிக்கொண்டிருக்க, உள்ளே மீனாள் பிரமை பிடித்த மாதிரி அமர்ந்திருந்தாள். ‘‘கண்ணூ...’’ பெண்ணை அணைத்தபடியே ‘‘என்ன நடந்திச்சி விசா..?’’ குரல் கமற கேட்டான்.

அபர்ணா வீட்டின் கீழ்த்தளத்தில் பின்பக்கத் தரையில் மீனாள் மல்லாந்து கிடக்க, ஆடைகள் அலங்கோலமாகக் கலைந்திருந்தன. நண்பர்கள் ராகுல், கெளதம், அனிரூத் மூவரும் அவள் மீது ஆக்ரமிப்பதும் அவள் திமிறுவதும் மற்ற சிறுமிகள் வேடிக்கை பார்ப்பதும்... ‘‘என்னடா பண்றீங்க..?’’ கத்தி மூவரையும் விலக்கி ‘‘மீனூ...’’ என்று அவளைக் கட்டியணைத்து உடைகளைச் சரிசெய்தாள். ‘‘இது ஒரு விளையாட்டு ஆன்ட்டி... ‘கேங்ரேப்’புன்னு பேரு...’’ என்றான் கவுதம்.

அதைக் கேட்டதும் நெருப்பையள்ளி முகத்தில் கொட்டினாற்போல் இருந்தது. ‘‘அதுக்கு அர்த்தம் தெரியுமா ஒனக்கு?’’

‘‘நெறைய பேரு சேர்ந்து ஒரு பொண்ணை... அவளோட டிரஸ்ஸை எல்லாம் பிடிச்சு இழுத்து கிழிப்போம் ஆன்ட்டி...’’ ராகுல் தொடர்ந்தான். ‘‘அவளைக் கீழே படுக்க வெச்சு...’’ விசாலாட்சி காதுகளைப் பொத்திக்கொண்டு, மலைக்கோட்டை, முக்குருணி, ஈச்சனாரி பிள்ளையார்களையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டாள்.

‘‘அவளை எந்திரிக்க விடாம போட்டு அழுத்துவோம்...’’‘‘அப்ப அந்தப் பொண்ணு ‘அய்யோ... என்னை விட்ருங்க’னு கத்தணும்...’’ என்றான் அனிரூத்.
ராகுல் தொடர்ந்தான். ‘‘எவ்வளவு நேரம் அந்தப் பொண்ணு தாக்குப் பிடிக்கறான்னு பார்ப்போம்... அவ்வளவுதான் இந்த விளையாட்டு...’’
விசாலாட்சிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

‘‘அதுக்கப்பறம்தான் கனெக்டிவிட்டி போயிடிச்சு ஆன்ட்டி...’’ ‘‘என்ன சொல்றே அனிரூத்..?’’ விசாலாட்சிக்கு புரியவில்லை.
‘‘கவுதம் என்கிட்ட ‘கேங்ரேப்’னு சொன்னதும் கூகுள்ல அதுக்கு என்ன அர்த்தம்னு தேடினேன். என்னமோ போட்டிருந்தது. புரியல... அப்பறம் யூ டியூப்ல பாத்தேன். கொஞ்ச நேரம்தான். பாதியிலே இன்டர்நெட் கட்டாயிடுச்சு... நாங்க பார்த்ததை வெச்சி இந்த விளையாட்டை கண்டுபிடிச்சோம்...’’
‘‘இந்த வார்த்தையை எப்படி தெரிஞ்சுகிட்டே கவுதம்?’’

‘‘நியூஸைப் பார்த்து ஆன்ட்டி...’’ ‘‘போன்ல மூணு பேர் சேர்ந்து நம்ம மீனாவைனு ஏதோ சொன்னியே விசா...’’ நாச்சியப்பன் அதிர்ச்சி குறையாமல் கேட்டான்.‘‘இவங்கதான் அது...’’ என்று ராகுல், கவுதம், அனிரூத்தை சுட்டிக் காட்டினாள். ‘‘இந்தப் பிள்ளைங்களா..?’’ என்றான் குழப்பத்துடன். ‘‘சும்மா ஃபன்னுக்குதான் அப்படி பண்ணோம் அங்கிள்...’’ என்றனர் மூவரும். மீனாளும், ‘‘அது ஒரு கேம்தாம்ப்பா...’’ என்றாள்.        
     
‘‘சாரி அங்கிள்...’’ என்றபடி சிறுவர்கள் வெளியேற, மற்றவர்களும் கலைந்து சென்றனர்.‘‘இதெல்லாம் என்ன மீனா வெளையாட்டு?’’ என்றான்.‘‘அவங்கதான் புதுசா கண்டு பிடிச்சிருக்கோம்னு சொல்லி கூப்ட்டாங்கப்பா...’’ ‘‘சரி மீனா... கிச்சன்ல கருப்பட்டி பணியாரம் இருக்கு... சாப்பிடு... போ...’’ என்று அவளை வெளியேற்றினாள் விசாலாட்சி.

நாச்சியப்பன் டிவியில் சேனல் மாற்றி யூரோ மார்க்கெட் தொடங்கிவிட்டதா, நிஃப்டி எவ்வளவு பாயின்ட் என்றெல்லாம் பார்த்து விட்டு, ‘‘நான் கெளம்பறேன். ஆடிட்டிங் வேலை நெறைய இருக்கு...’’ என்று வேகமாகப் புறப்பட்டுச் சென்றான்.      
 
கணவனை அனுப்பிவிட்டு ‘‘மீனா எங்க அத்தே..?’’ என்று அவள் கேட்டதற்கு தேனம்மை, ‘‘அவ அப்பவே நம்ம வாட்ச்மேன் வந்து கூப்ட்டான்னு போனாளே... கூடவே ஆட்டோ டிரைவரும், வளர்த்தியா இன்னொருத்தனும் வந்து ஏதோ விலாசம் சொல்லி வழி கேட்டாங்க...’’ என்றாள்.
‘வாட்ச்மேன் எப்பவும் குடிபோதையிலே இருக்கான்னு அஸோஸியேஷன்லே சொல்லி நான்தானே அவனை வேலையிலயிருந்து நிப்பாட்டினேன்...

எதுக்கு மறுபடியும் வந்தான்..? ஆட்டோகாரன், இன்னொரு ஆளு... அவங்கல்லாம் யாரு? என்ன அட்ரஸ்... எதுக்கு ரெண்டு மாடி ஏறி வந்து மீனாகிட்ட வழி கேக்கணும்..?’ கலவரத்துடன் படியிறங்கினாள் விசாலாட்சி. படித்தசெய்திகள் வந்து வந்து போயின.

எனக்கு நானே எஜமான்!

அமெரிக்காவில் சிகாகோவைச் சேர்ந்த கோல்டன் ரெட்ரீவர் இன நாய், வாக்கிங் கயிற்றை, தானே வாயில் கவ்வி நடந்த வீடியோதான் நெட்டில் ஹிட் வைரல். ‘எனக்கு நானே எஜமானன்’ என தன் ஓனருக்கு உணர்த்தி வாக்கிங் நடந்த 3 நிமிட வீடியோவை லட்சத்துக்கு மேலானவர்கள் கண்டு ரசித்துள்ளனர். பிரில்லியன்ட் தோழன்!

அக்குள் விளம்பரம்

ஜப்பானைச் சேர்ந்த வகினோ விளம்பரக் கம்பெனி லிபெர்ட்டா அழகு சாதனப்பொருட்களை விளம்பரம் செய்த இடத்தால் பிரபலமாகியுள்ளது. பில்போர்டு, நோட்டீஸ் என விளம்பரம் கொடுக்காமல் இளம் பெண்களின் நாசூக்கான அக்குள் பகுதியில் பியூட்டி விளம்பரங்களை ஒட்டி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.மாடல் பெண்களின் ஒரு மணிநேர கால்ஷீட் தோராயமாக ரூ.6,157தான். விளம்பரத்தை உத்துப்பார்த்தாலே சர்ச்சையாகுமே!

தங்க சில்வர் ஜூப்ளி!

உத்தரகாண்ட் மற்றும் பீகாரிலுள்ள சிவனின் புனித தலங்களை தரிசிக்கச் சென்ற சுதீர் மக்கார்  கன்வார் யாத்திரையை விட பிரபலமாகிவிட்டார். கழுத்தில் அணிந்துள்ள 20 கி.கி. தங்க நகைகளும் அதற்கு செக்யூரிட்டியாக வரும் போலீசும்தான் காரணம்.
25 ஆண்டுகளாக யாத்திரை செல்லும் சுதீர், முன்பு பிஸினஸ் மேனாக இருந்தவராம். புனித யாத்திரை தங்க யாத்திரையாகிவிட்டதே!

சித்ரூபன்