ஆரோக்கிய குழந்தைக்காக நரபலி!



உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்த பெற்றோர் மாந்திரீகர்களின் பேச்சைக்கேட்டு தம் ஆறு வயது பெண்குழந்தையை நரபலி கொடுத்து உடலை எரித்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆறுவயது குழந்தையைக் கொன்றால் அடுத்து பிறக்கும் குழந்தை பயில்வானாகப் பிறக்கும் என்று மாந்திரீகர் அளித்த நம்பிக்கைதான் பெற்ற மகளையே கொல்லத்தூண்டியுள்ளது.

‘‘பல்வேறு மருத்துவமுறைகளைக் கையாண்டும் மகளின் உடல்நிலை பலவீனமடைந்து கொண்டே வந்தது. என் பேரனுக்கும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பு இருந்தது...’’ என்கிறாள் இறந்த தாராவின் பாட்டி. போஸ்ட்மார்ட்டம் அறிக்கைப்படி, தாராவை பெற்றோர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் போலீஸ் அதிகாரியான ரவீந்திர கவுர்.  

சமூக விழிப்புணர்வுக்கு கிகி சேலஞ்ச்!

மும்பையின் விரார் ஸ்டேஷனில் மின்ரயில்களில் அபாயகரமான ஸ்டண்டுகளைச் செய்து வந்த இளைஞர்களைப் பிடித்து கிகி சேலஞ்சிற்கு (பொது மக்கள் கூடும் இடங்களில் ஸ்டண்ட் செய்து காட்டுவது) எதிரான விளம்பரத்தை ரயில்வே தயாரித்துள்ளது! நிஷாந்த் ஷா, துருவ் ஷா, ஷியாம் ஷர்மா என்னும் மூன்று ரோமியோக்கள் மின்ரயில்களில் செய்த ஸ்டண்டுகளுக்காக ரயில்வே போலீஸ் அவர்களைக் கைது செய்தது.

இவர்களின் ஸ்டண்ட் வீடியோக்களுக்கு மட்டும் ஒரு கோடி ரசிகர்கள் இணையத்தில் உண்டு. பிரபலம் என்றாலும் ரூல்ஸ் மீறினால் போலீஸ் காப்பு மாட்டாமல் விடுவார்களா? ரயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, மூன்று நாட்கள் ரயில்வே ஸ்டேஷனை தூய்மைப்படுத்துவதோடு, காலை 11 மணி முதல் 5 மணி வரை ரயில்வே விபத்து விழிப்புணர்வை கிகி சேலஞ்சிற்கு எதிராகச் செய்ய உத்தரவாகியுள்ளது.         

பசுமை நினைவகம்!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு இவ்வாண்டோடு 76 வயதாகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி, வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவாக சுதந்திரப்போராட்டத் தியாகி களின் பெயரில் பசுமை நினைவகத்தை நிர்மாணித்து பராமரித்து வருகிறார். சங்லி மாவட்டத்திலுள்ள பல்வாலி கிராமத்தைச் சேர்ந்த சம்பத்ராவ் பவார், கிராந்தி வான் என்ற பெயரில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் நினைவாக 700க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு (1942.ஆக.9) இயக்கத்தின் தங்கவிழா ஆண்டான 1992ம் ஆண்டில் பவார் பசுமை நினைவக ஐடியாவைச் செயல்படுத்தி யிருக்கிறார். முதலில் 1,475 மரக்கன்றுகளை அரசு நிலத்தில் நட்டாலும் அரசின் வனத்துறை அவற்றை அனுமதிக்காமல் வெட்டி வீழ்த்தியிருக்கிறது. பின்னர், குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமான 4 ஏக்கர் கரும்புக்காட்டை அழித்து தியாகிகளுக்கான மரக்கன்றுகளை நட்டுள்ள பவாருக்கு அவரது மகன் வைபவ் மட்டுமே ஆதரவாக இருந்துள்ளார்.