டிசிப்ளின் சிவா... அசத்திய சமந்தா... மிரட்டிய சிம்ரன்... நெகிழ வைத்த நெப்போலியன்!



பொன்ராம் சொல்லும் சீமராஜா சீக்ரெட்ஸ்

‘‘சிவாவுக்கு நன்றி சொல்ல ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். என் முதல் படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கதையை அவர் கமிட் ஆகுறதுக்கு முன்னாடி நிறைய ஹீரோக்கள்கிட்டே சொல்லி வாய்ப்பு கேட்டு திரிஞ்சிருக்கேன். ஒரு சிலர் கதையைக் கேப்பாங்க. சில ஹீரோக்கள் கதையே கேட்கமாட்டாங்க. சிலர் நம்மள பார்க்கக்கூட விரும்பமாட்டாங்க.

ஆனா, ஆல்ரெடி சில படங்கள் பண்ணின ஹீரோவா இருந்த சிவா, ‘வ வா ச’ கதையை ரசிச்சுக் கேட்டு உடனே நடிக்க சம்மதிச்சார். இத்தனைக்கும் அவர முன்ன பின்ன அப்பதெரியாது.

இதுக்குப் பிறகு நாங்க திரும்பவும் ‘ரஜினிமுருகன்’ல ஒண்ணு சேர்ந்தோம். இப்ப மூணாவது முறையா ‘சீமராஜா’ல கைகோர்த்திருக்கோம். ‘வ வா ச’ல ஆரம்பிச்ச எங்க ஃப்ரெண்ட்ஷிப் நாளுக்கு நாள் பலப்பட்டுக்கிட்டே போகுது. இப்ப நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ் இல்ல. ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்...’’ நெகிழ்ச்சியுடன் சிவகார்த்தி கேயனைப் பற்றிப் பேசுகிறார் இயக்குநர் பொன்ராம்.

உங்க படங்கள்ல நகைச்சுவை அசத்தும். காமெடியை எப்படி பிடிக்கறீங்க..?
இப்ப இருக்கற சோஷியல் மீடியா சூழல்ல காமெடி ஸ்கிரிப்ட் பண்றது சவாலான வேலை. அரசியல்வாதிகள் பண்ற காமெடியை உடனே மீம்ஸா மாத்திடறாங்க.

நாங்க அதே விஷயத்தை செஞ்சா ‘மீம்ஸை காப்பி அடிச்சுட்டாங்க’னு ஈசியா சொல்லிடறாங்க.பொதுவா நான் ஸ்கிரிப்ட் எழுதறதுக்கு முன்னாடி என் நிஜ வாழ்க்கைல நடந்த விஷயங்களை கதையோடு பொருத்திப் பார்ப்பேன். எனக்கு ரிலாக்சேஷனே நண்பர்களோடு சுத்தறதுதான். அப்ப நமக்கே தெரியாம பல சீன்கள் மாட்டும்!

இந்த இடத்துல என் நண்பரும் இயக்குநருமான ராஜேஷ் பத்தி சொல்லியாகணும். எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட நாங்க இரண்டு பேரும் உதவியாளரா இருந்தப்ப வடபழனி பஸ் ஸ்டாண்டுக்கு போவோம். ஆளுக்கு ஒரு பஸ்ல ஏறுவோம். அந்த பஸ் எங்க போய் நிக்குதோ அங்க போயிட்டு திரும்பவும் அதே பஸ்ல வடபழனிக்கு திரும்புவோம்.

பஸ்ல நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துப்போம். விளையாட்டா நாங்க அப்ப செஞ்சது இப்ப கைகொடுக்குது. சுருக்கமா சொல்லணும்னா, நம்மைச் சுத்தி நடக்கிற விஷயங்களை கவனிச்சாலே காமெடி எளிதா கிடைக்கும். யார் அந்த ‘சீமராஜா’?சந்தேகமென்ன..? நம்ம சிவாதான். எடிட் ஒர்க் நடக்கிறப்பவே முழுப் படத்தையும் சிவா பார்த்துட்டார். ‘அந்த சீன் நல்லா இருக்கு. இந்த ஷாட் நல்லா இருக்கு...’னு சந்தோஷப்படறார்!

அவர்கிட்ட பிடிச்சதே டிஸிப்ளின்தான். சிவாவுக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. அவர் யார்கிட்டேயும் கோபத்தைக் காட்டிக்க மாட்டார். சில நேரங்கள்ல சூழல் காரணமா மேடைகள்ல அழுதிருக்கார். இதைத் தவிர எப்பவும் அவரை சிரிச்ச முகத்தோடு மட்டும்தான் பார்க்க முடியும்!  

நாலு வருஷங்களுக்கு முன்னாடியே இந்தக் கதை தோணிடுச்சு. ஜமீன் குடும்பத்துல நடக்கிற ஃபேமிலி என்டர்டெயினர். இப்போதைய சூழலுக்குத் தேவையான ஒரு மெசேஜ் படத்துல இருக்கு.

இங்க ஜமீன்னு சொன்னா அது வில்லனுக்கான பின்புலமா இருக்கு. அதை மாத்த முயற்சி செய்திருக்கோம்.படத்துல சிவகார்த்திகேயன், சிம்ரன், சமந்தா, கீர்த்தி சுரேஷ், நெப்போலியன் சார், சூரி அண்ணன்னு எனக்குப் பிடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. ‘ரஜினி முருகன்’ டைம்ல அதோட ரிலீஸுக்கு முன்னாடி சில சிக்கல்களை சந்திச்சோம். அப்ப, அந்தப் பட டீமில் உள்ள நண்பர்கள் பலரும் முன்வந்து அப்பட ரிலீஸுக்கு கைகொடுத்தாங்க. அந்த டீமை அப்படியே ‘சீமராஜா’ல பயன்படுத்தியிருக்கேன்.  

டெக்னிக்கல் டீம் எங்க பலம். நாங்க கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் சாரோட ஒர்க் பண்ணும்போது கவலையே இல்லாம இருப்பேன்.

‘இமான் உங்களுக்கு மட்டும் தனியா பாடல்கள் கொடுக்கறார்’னு எல்லாருக்குமே எங்க மேல கண்ணு இருக்கு! ஆக்சுவலா இதுக்குக் காரணம் டீம் ஒர்க்தான். இமான் சார், யுகபாரதி சார் கூட ஒப்புக்குச் சப்பாணியா நானும் உட்காரு வேன். பேசிப் பேசி பாடல்களை உருவாக்கறோம்.

எடிட்டர் விவேக்ஹர்சன், என் நீண்டநாள் நண்பன். ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சார் நாம கேட்டதுக்கு மேலயே செய்து கொடுப்பார். அனல் அரசு மாஸ்டர் கூட முதல் முறையா ஒர்க் பண்ணியிருக்கேன். சின்ன விஷயத்தைக் கூட பில்டப் கொடுத்து நுணுக்கமா எடுக்கறதுல மாஸ்டர் கில்லாடி.
முதன் முதலா கிராமத்துப் பொண்ணா சமந்தா..?

ஆமா. அவங்க ரொம்ப ஹேப்பி. ‘ரஜினிமுருகன்’லயே அவங்க நடிச்சிருக்க வேண்டியது. மிஸ்ஸாகிடுச்சு. முதல்நாள் ஷூட்ல ஒரு கடினமான சீக்வென்ஸ் கொடுத்திருந்தேன். நிறைய டேக் வாங்குவாங்கன்னு நினைச்சேன். ஆனா, மிரட்டிட்டாங்க. எதையும் மனசுல வைச்சுக்க மாட்டாங்க. வெள்ளந்தியானவங்க.

படத்துல கீர்த்தி சுரேஷ் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காங்க. ‘காளீஸ்வரி’ என்கிற தைரியமான கேரக்டர்ல சிம்ரன் அசத்தியிருக்காங்க.
என்ன சொல்றார் நெப்போலியன்...?பிறப்பிலேயே ராஜாவா இருக்கற ஒரு கேரக்டருக்கு சத்யராஜ் சாரும், அவரும்தான் கரெக்ட்டா இருப்பாங்கன்னு நினைக்கறேன். என் முந்தைய படத்துல சத்யராஜ் சார் நடிச்சுட்டார். ஸோ, இதுல நெப்போலியன் சாரை கூட்டிட்டு வந்துட்டோம். அவரோட உயரம், நீளமான முகம்னு அத்தனையும் அந்த கேரக்டருக்கு ப்ளஸ்ஸாகிடுச்சு.

பார்க்கத்தான் அவர் அருவா மீசையும் கொடுவா பார்வையுமா இருக்காரே தவிர குழந்தை மனசுக்காரர். திருநெல்வேலி பக்கம் அம்பாசமுத்திரத்துக்கு படப்பிடிப்புக்காக போயிருந்தோம். அங்க வீரவநல்லூர்ல அவர் சொந்தமா மயோபதி கிளினிக் நடத்தறார். தசை சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவமனை அது. அங்க எங்களை அழைச்சுட்டு போனார். இந்தியா முழுக்க இருந்து அங்க குழந்தைங்க சிகிச்சைக்கு வர்றாங்க. ‘அரசியல், சினிமாவைத் தாண்டி இங்க நேரம் செலவழிக்கறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு தம்பி’னு நெப்போலியன் சார் சொன்னார்.

சூரியும் உங்க நண்பராச்சே..?

ஆமா. மொதல்ல அவர் என் நண்பர். அப்புறம்தான் அவர் நடிகர். நான் எஸ்.ஏ.சி. சார்கிட்ட அசிஸ்டென்ட்டாக இருந்த காலத்துல இருந்தே அவரைத் தெரியும். அப்ப அவர் நடிக்க வாய்ப்பு தேடிட்டிருந்தார். தினமும் மாலை சாலிக்கிராமம் ஏரியாவுல சந்திச்சு அரட்டை அடிப்போம்.நாம படம் பண்றப்ப சூரி அண்ணனுக்கு ஒரு ரோல் கொடுக்கணும்னு அப்பவே மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஆனா, அவர் நான் படம் தொடங்கறதுக்கு முன்னாடியே நல்ல நகைச்சுவை நடிகரா தன்னை நிரூபிச்சுட்டார்.

இப்ப வரை சூரி வீட்ல எல்லாருக்கும் எங்க ஃபேமிலியைத் தெரியும். ‘ரஜினிமுருகன்’ முடிச்சதும் எனக்கு ஒரு சின்ன தொய்வு வந்தது. ‘என்ன பிரதர், அடுத்த படம் எப்போ பிரதர்?’னு அவர் விசாரிச்சுக்கிட்டே இருப்பார். எனக்கும் சிவாவுக்கும் இடைல பாலமா இருக்கறதே சூரி அண்ணன்தான். ‘சீமராஜா’லயும் செமத்தியா ஸ்கோர் செய்திருக்கார்.  

மை.பாரதிராஜா