இப்படியும் நாட்டைத் திருத்தலாம்



செய்தி: ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு அறிவுரை கூற, எமராஜன் வேடத்தில் நடிகரை களத்தில் இறக்கியது கர்நாடக காவல் துறை!இந்த மாதிரி அறிவுரைகளை எந்தெந்த மாறுவேடங்களில் யார் யாருக்கு வழங்கலாம்..?  

ஜாக்சன் துரை  

எவ்வளவு நோட்டீஸ் அனுப்பியும் வரி கட்டாதவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி கேட்ட ‘ஜாக்ஸன் துரை’ வேடத்தில் இருப்பவர் வரி கட்டுவதன் அவசியம் பற்றி அறிவுரை வழங்கலாம்!

அதற்கு எதிராக வரி கட்டாதவர் நவீன கட்டபொம்மனாக மாறி, ‘வரி... வட்டி... நான் ஏன் வருமான வரியும் கட்டி, ஜிஎஸ்டி வரியும் கட்ட வேண்டும்? எனக்கு இஎம்ஐ கட்டினாயா... பள்ளங்கள் இல்லாத ரோடு போட்டாயா... பெட்ரோல் விலையை இறக்கினாயா...’ என திரும்ப வசனம் பேசாமல் இருக்க தடை போட வேண்டியது அவசியம்!

ரஜினி
 
பொது இடங்களில் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பவர்களிடம் ரஜினி வேடத்தில் இருப்பவர் அறிவுரை கூறலாம். ‘கண்ணா... சிகரெட்டை மேலே போட்டு முழுசா வாயால் பிடிக்கலாம். ஆனால், மூக்கால் புகையை விட்டா நீதான் மேலே போகணும்...’ என்பது போன்ற மொக்கை பஞ்ச் டயலாக்குகளை உதிர்த்து அவர்களை மயக்கமடைய வைக்கலாம்!

இராவணன்  

பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பெண்களை ஈவ் டீஸிங் செய்யும் ரோமியோக்களுக்கு இராவணன் வேடத்தில் இருப்பவர் புஷ்பக விமானத்திற்கு பதிலாக ஹெலிகாப்டரிலிருந்து கீழே குதித்து அறிவுரை செய்யலாம்.

ஈவ் டீஸிங்கால் தன் இதிகாச வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்களை எடுத்துக் காட்டி, ஒரு கதாகாலட்ஷேப நிகழ்ச்சி நடத்தலாம்! ‘கட்டிப்புடி, கண்ணடி’ ஆகிய உடல் அசைவுகள் ஈவ் டீஸிங்கில் சேராதுஎன்று ரோமியாக்கள் வாதாடினால் அவர்களை குண்டுக்கட்டாக ஹெலிகாப்டரில் ஏற்றி பெண்களே இல்லாத தீவில் இறக்கி விடலாம்!

சித்ரகுப்தன்  

வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிக் கட்டாமல் ஆடி காரில் பயணம் செய்பவர்களை மடக்கி எமனுடைய செகரட்டரியும், பாவ, புண்ணிய கணக்குகளைப் பராமரிக்கும் சீஃப் அக்கௌண்டன்டுமான சித்திர குப்தன் வேடம் தரித்தவர் அறிவுரை வழங்கலாம்.

‘புண்ணியம் என்பது டெபிட் கார்டு போல. முதலில் சேமித்து வைத்துவிட்டு, பிறகு அதற்கான நன்மைகளை அனுபவிக்கலாம். பாவம் என்பது கிரெடிட் கார்டு போல. முதலில் தவறை சேமித்துவிட்டு, பிறகு அதற்கான தண்டனையை அனுபவிக்கலாம்...’ என்ற வாட்ஸ்அப் மொக்கை ஷேர்களைப் பகிரலாம்.

‘வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டாமல், மொபைலை சுவிட்ச் ஆஃப் மோடிலியே வைத்திருப்பது பெரிய பாவம். இந்த பாவத்திற்கு தண்டனை அடுத்த ஜென்மத்தில்(!) நீங்கள் வங்கி மேனேஜராகப் பிறந்து, கொடுத்த கடனை வசூலிக்க தெருத் தெருவாக அலைவீர்கள்..!’ என்று தத்துவம் பேசலாம்.

எமகிங்கரன்  

எமதர்மனின் எக்ஸிக்யூட்டிவ் அஸிஸ்டென்ட்டான கிங்கரன் வேடம் தரித்தவர் சரக்கு வாங்க டாஸ்மாக் வரிசையில் நிற்பவர்களுக்கு அறிவுரை வழங்கலாம். ‘இத்த குடிச்சா உயிர் படிப்படியா புட்டுக்கினு பூடும்.

அப்பாலே எனக்கு வேலை சுளுவு...’ எனப் பேசினால் சுலபமாக குடிமகனோடு கனெக்ட் ஆகலாம். ஆனால் உள்ளே தள்ளும் சரக்குக்கு ஏற்ப குடிமகன் பேசும் மொழியும் மாறுபடும். பெரும்பாலும் மப்பாளர்களின் பொது ‘பாஷை’ ஆங்கிலம் என்பதால் கிங்கரன் தன் கையில் கதாயுதத்துடன் ஓர் ஆங்கில அகராதியையும் வைத்திருப்பது நல்லது!            

எஸ்.ராமன்