சித்து விளையாட்டு



கடந்த வாரம் வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மேலும் இந்த விவகாரம் குறித்து திரும்பத் திரும்பப் பேச வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தவறான சித்த மருந்துகளின் காரணமாக கல்லீரலும் சிறுநீரகமும் கெட்டு இறந்து போன ஒருத்தரின் மனைவி பேசினார். “எங்களுக்கு ஆரம்பத்தில இருந்து அவர் சாப்பிடற மருந்துகள் மேல சந்தேகமாத்தான் இருந்துச்சு. ஆனா, எங்க வீட்டுக்காரர்ட்ட இதையெல்லாம் சொல்லவே முடியலை. கண்மூடித்தனமான மூட நம்பிக்கையிலும் பக்தியிலும் இருந்தார் அவர். முன்னோர்களை சந்தேகப்படறது தாயைப் பழிக்கிறதுக்கு சமம் என்பார்.

யார் கருத்தையும் கேட்கக்கூடாதுங்கற அளவிற்கு அதிலேயே மயங்கி மூழ்கிப் போயிருந்தார்” என்றார் அவருடைய மனைவி. எதையும் கேள்வி கேட்டுப் பழகு என்று வரலாற்றில் ஏறக்குறைய எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். சித்தர்களேகூட உண்மையை பல்வேறு நுணுக்கமான செதில்களாக செதுக்கிச் செதுக்கித்தான் தங்கபஸ்பமாகச் செய்தார்கள். தங்கமேயானாலும் உரசிப் பார்த்தால்தான் அதற்கு மதிப்பு. இந்த உரசல்கூட மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பதன் அடிப்படையில் அமைந்ததே. ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

“நீங்கள் உரசுவதற்கு எங்கள் வீட்டுச் சுவர்தான் கிடைத்ததா? ஏன், உங்கள் வீட்டுச் சுவரைப் பற்றிப் பேசலாமே?” என்றெல்லாம் கேட்டு விடக்கூடாது. உரசுவது என்று முடிவெடுத்துவிட்டால் வெள்ளையாய் தெரிகிற எல்லாமே சுவர்தான். சுவருக்குள் கூடு கட்டி வாழ்கிற மனித உயிர்களே எதற்கும் அளவுகோல். அதை மிஞ்சித்தான் எதுவும் இங்கே. அதனடிப்படையில் அலோபதி மருத்துவத்தின் திருட்டுத் தனங்கள் இல்லையே இதில் என அங்கலாய்க்கக் கூடாது. அதுபற்றி இணையத்தில் துழாவினால், உடனடியாகவே ஓராயிரம் பக்கங்கள் வந்து விழும்.

தனிப்பட்ட முறையில் எனக்கேகூட அந்த வகை மருத்துவ முறையால் சில மோசமான அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. சமீபத்தில் நண்பர்களைச் சந்திப்பதற்காகக் கோவை சென்றிருந்தேன். அலோபதியில் ஆர்த்தோ படித்து முடித்த கையோடு மருத்துவ நண்பர் ஒருத்தர் வந்து சந்தித்து, மருத்துவமனை துவங்குவதற்குத் தனக்கு ஒரு முதலீட்டாளர் பிடித்துத் தர முடியுமா என்று கேட்டார். முதலீட்டாளரிடம் என்ன சொல்வது எனக் கேட்ட போது, “தயங்காம பணத்தைப் போடச் சொல்லுங்கள். இரண்டே வருடத்தில் போட்ட பணத்தை விட மும்மடங்கு எடுத்துக் கொடுத்து விடுகிறேன்.

நகரத்தில் இருக்கிற 108 ஆம்புலன்ஸ்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஒருத்தரையும் பார்ட்னராக சேர்த்துக் கொள்வோம். எங்கே விபத்து நடந்தாலும் கொண்டு வந்து நம்மிடத்தில் போட்டு விடுவார்கள். உடனடியாக கத்தியை உடலில் வைத்து விடலாம். விபத்து விஷயங்களில் மக்கள் எதிர்க்கேள்வி கேட்கவே மாட்டார்கள். தவிர உடனடியாக வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்குண்டான பணத்தைத் தந்துவிட்டு இன்ஷூரன்ஸில் க்ளைம் பண்ணிக் கொள்வார்கள். ஆபரேஷன் பண்ண ஆறு ரூபாய் விலை இருக்கிற நரம்புதான் நமக்குச் செலவு.

அனஸ்தீஸியாவிற்கு ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆனால், குறைந்தது சின்னதாய் சுண்டு விரல் உடைந்திருந்தால்கூட நாற்பதாயிரம் வசூலித்து விடலாம்!” என விவரமாக, போட்ட பணத்தை உடனடியாகத் திருப்பி எடுக்கும் வித்தைகளை அடுக்கினார். வியாபாரமாகப் பார்த்தால் சிறப்பாய்த்தான் இருக்கிறது. ஆனால், எதிலெல்லாம் இழுத்துப் பிடித்து நைச்சியமாய் வியாபாரம் செய்ய வேண்டும் என ஒரு வரைமுறை இல்லையா? விபத்து மட்டுமல்லாமல், பல்வேறு நோய்க்கூறுகளுக்கும் எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என திறந்த மனதோடு வகுப்பு எடுத்தார்.

இத்தனைக்கும் அவர் படித்தேயிராத துறைகளில் புகுந்துகூட மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் கம்பு சுற்றினார். கைவசம் ஊசி இருந்திருந்தால், அவரது மூக்கிற்குள் விட்டு ஆட்டியிருப்பேன். அந்தளவிற்கு அவர் சொன்ன விஷயங்கள் மன அழுத்தத்தைக் கொடுத்தன. எனக்கேகூட இப்படி நடக்கலாம் அல்லவா? ஒருதடவை நடந்தும் இருக்கிறது. இன்ஸூரன்ஸ் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக என்னை அவசர சிகிச்சை அறையில் வேண்டுமென்றே கூடுதலாக ஏழு நாட்கள் வைத்திருந்த நாள்பட்ட கோபமும் கூட இருக்கிறது. நியாயமான பயிற்சி மருத்துவர் ஒருத்தர் இந்த விஷயத்தை என்னிடம் ரகசியமாகச் சொன்னபிறகு,

பத்திரிகையாளர் என்றெல்லாம் மிரட்டிய பின்னர், ஒரு தீபாவளிக்கு முதல் நாள் வெளியே விட்டார்கள். நான் இந்தியாவில் இல்லாத போது, தலைவலி, தலைசுற்றல் என்று போன என் அப்பாவிற்கு இரண்டு தடவை சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கச் சொன்னார்கள். எங்களூரைச் சேர்ந்த அண்ணன் ஒருத்தர் ஓடி வந்து தடுத்தார். அவர் தமிழ்நாடு முழுக்க இருக்கிற புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். “எடுக்கிற ஒவ்வொரு ஸ்கேனுக்கும் குறைந்தது 3500 ரூபாயை டாக்டர் கமிஷனாகத் தந்துவிடுவோம்...” என்றார்.

இங்கேயும் எனக்கு இப்போது சிகிச்சை அளித்து வரும் மருத்துவரைப் போல தெய்வங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். “ஸ்கேன் எடுத்துப் பாத்திடலாமா சார்?” என ஒரு தடவை கேட்டபோது, “நீ டாக்டரா? நான் டாக்டரா? துட்டு கொளுத்துப் போயிருச்சா...” என்று சொல்லிவிட்டு ஸ்டெதஸ்கோப்பை கொண்டு அடிக்க வந்த குடும்ப மருத்துவ தெய்வம் அவர். அதில்லை விஷயம் இங்கே. ஏமாற்று வேலைகளையெல்லாம் தாண்டி அலோபதி மருத்துவத்தில் மருத்துவர் கொடுக்கிற மாத்திரைகளின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இரத்த அழுத்தத்திற்குத் தரப்படுகிற அட்டிகார்ட் ஏயெம் தடை செய்யப்பட்ட மாத்திரை என்பதை இணையத்தில் தேடினாலே தெரிந்து கொள்ள முடியும். இந்த நிமிடத்தில் இந்தியாவில் புழங்குகிற எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்கிற விவரங்களை எளிதாக எடுத்துவிடலாம். சந்தேகத்தோடு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு எந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் போகத் தேவையில்லை. தரமற்ற மருந்துகள் இருக்கலாமே ஒழிய, தவறான மருந்துகள் இருப்பதற்கு வாய்ப்புகள் கொஞ்சம் குறைவே. நேர்மையான மருத்துவர்கள் இந்தத் துறையில் நடக்கும் அட்டூழியங்களைத் தொடர்ந்து பொதுவெளியில் பதிவு செய்தும் வருகின்றனர் என்பதால்,

இங்கே திருடனைக் கண்டுபிடிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அலோபதி மருத்துவத்தில் அல்லல்பட்டு விட்டதாய்க் கருதி மாற்று மருத்துவங்களை நோக்கி நகரும் மக்களை அங்கிருக்கும் போலிகள் ஏமாற்றும் வித்தையைக் கவனத்தில் கொண்டு வருவதே என் நோக்கம். அதிலும் குறிப்பாக சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறையில் ஊடுருவியிருக்கிற போலிகளை அடையாளம் காட்டுவது இந்தச் சூழ்நிலையில் மிக முக்கியமான கடமையாகக் கருதுகிறேன்.

அக்குபங்க்ச்சர், வர்மம், தொடு சிகிச்சை போன்றவற்றைப் பற்றி இந்த மினி தொடரில் ஆராயவில்லை. அவை அள்ள அள்ளக் குறையாத தனிக் கடல் என்பதும் ஒரு காரணம். இந்த இடத்தில் தெளிவாகக் கோடு கிழித்து வித்தியாசத்தை உணர்த்த விரும்புகிறேன். இதிலும்கூட நியாயமான, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கூடவே பயிற்சி பெற்ற புதிய பட்டதாரி மருத்துவர்களையும் இந்தக் கணக்கில் சேர்க்கவே இல்லை. முழுக்க முழுக்க தாடியை வளர்த்துக் கொண்டு வயிறை வளர்க்கும் அக்மார்க் போலிகளே இந்தத் தொடரின் குறி!

(போலிகளை துகிலுரிப்போம்)

- சரவணன் சந்திரன்