சரிந்த மைக்ரோசாப்ட்டை நிமிர வைத்தவர்



உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது... தொழில் நுட்பத்தால் மனித வாழ்க்கையை  எப்படியெல்லாம் மாற்ற முடியும் என்கிற சாத்தியங்களில் ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய புத்தகம் இது! மைக்ரோசாப்ட் என்கிற நிறுவனத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. 30 வருடங்களுக்கும் மேலாக கணினி என்றாலும், கம்ப்யூட்டிங் என்றாலும் முதலில் நினைவுக்கு வருவது மைக்ரோசாப்ட் மற்றும் பில் கேட்ஸ். ஆனால், 30 வருட மைக்ரோசாப்ட் உச்சத்தில் பில் கேட்ஸ் தவிர இதுவரை இரண்டே பேர்தான் அதன் சி.இ.ஓவாக இருந்திருக்கிறார்கள். அதிலும் ஒருவர் இந்தியர்.

இப்போதைய மைக்ரோசாப்ட்டின் தலைவர் சத்யா நாதெள்ளா. 2016க்கு முன்பான சில வருடங்களில் மைக்ரோசாப்ட் கடுமையான சரிவினை சந்தித்தது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளுக்கு எதிரான விண்டோஸ் போன் எந்தவிதமான வரவேற்பையும் பெறவில்லை. உலகமெங்கும் கணினிகளின் பயன்பாடு குறைவாகவும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்கவும் செய்தது. மேக கணிமை என்கிற துறையில் அமேசான் தலையெடுத்தது. தேடுதல் மற்றும் ப்ரெளசரில் கூகிள் முதலிடத்தினை தட்டிப் பறித்தது.

எந்தப் பக்கம் திரும்பினாலும் புதிய நிறுவனங்களின் தலை எடுப்பில் மைக்ரோசாப்ட்டின் ஏகப்பட்ட கோட்டைகள் சரிய ஆரம்பித்தன. மைக்ரோசாப்ட் முன்னெடுத்த அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது. பில் கேட்ஸிற்கு அடுத்து பதவி ஏற்ற ஸ்டீவ் பால்மர் என்பவரால் இந்தச் சரிவினை தடுத்து நிறுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக பங்குச் சந்தையில் மூன்றில் ஒரு பங்காக மைக்ரோசாப்ட் கீழே போனது. அப்போதுதான் சத்யாவை தலைமை ஏற்கச் சொன்னார்கள். இந்த மாதிரியான சூழலில் யாரை தலைமை ஏற்கச் சொன்னாலும் அவர்களுக்கு இது முள் கிரீடம் என்று மறுத்திருப்பார்கள்.

சத்யா அந்த சவாலை ஏற்றார். மூன்றே வருடங்களில் மைக்ரோசாப்ட் எதையெல்லாம் இழந்ததோ, எங்கெல்லாம் காணாமல் போனதோ, எங்கெல்லாம் ஒதுக்கப்பட்டதோ அங்கெல்லாம் திரும்ப எழ ஆரம்பித்திருக்கிறது! யாரெல்லாம் மைக்ரோசாப்ட்டிற்கு எதிரிகள் என்று சொன்னார்களோ, அவர்களோடு சத்யா இணைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டார். ஆப்பிள் ஐபேடில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேலை செய்யும். மைக்ரோசாப்ட் அசூர் என்கிற மேக கணிமை துறை, உலகின் நம்பர் 2வாக இருக்கிறது. லினக்ஸ் என்கிற இயங்கு தளமே மைக்ரோசாப்ட்டிற்கு எதிராக 25 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.

சத்யா, லினக்ஸினை மைக்ரோ சாப்ட்டிற்குள் கொண்டு வந்து அதை மிக முக்கியமான சாத்தியமாக மாற்றி இருக்கிறார்! இதை எல்லாம் செய்ய ஆரம்பித்துக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு இன்னொரு வேலையும் உள்ளே வந்தது. சத்யாவின் முதல் மகன் பிறந்தபோதே அந்தக் குழந்தை செரிபரல் பால்சி என்கிற மூளைக் குறைபாடுடைய குழந்தையாகப் பிறந்தது. பின்னாளில் செயின் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு பார்வையும் போனது. சத்யாவும், அவர் மனைவி அனுவும் இந்நாள் வரை செயினுக்கு குறைபாடுகளே தெரியாமல் வளர்த்து வருகிறார்கள்.

இன்னொரு பெண்ணான திவ்யாவும் ஸ்பெஷல் குழந்தைதான். அதற்கான பள்ளி கனடாவில் இருப்பதால் சத்யாவும், அனுவும் திவ்யாவை காரில் கிட்டத்திட்ட எட்டு மணி நேரத்திற்கு மேல் ட்ரைவ் செய்து வாரா வாரம் போய் அழைத்து வருவார்கள். தான் உருவாக்கும் அத்தனை உயர் தொழில் நுட்பமும், அதிவேக நுட்ப சாத்தியங்களும் மக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே என்பதை சத்யா சாதித்திருக்கிறார். வழக்கமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்கள் லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்; நுகர்வோர் நலனை கண்டுகொள்வதில்லை என்பது.

கேப்பிடலிச வட்டத்துக்குள் இருந்து கொண்டே, மக்களின் நலனை முன்னிலைப் படுத்தியும் லாபம் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருப்பதுதான் சத்யாவின் சாதனை. ஒரு பெருநிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களால் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க முடியும், தனி ஜெட் விமானங்களில் பறக்க முடியும், உலகின் முக்கியமான மேடைகளில் பேசமுடியும், எது கேட்டாலும், எது வேண்டுமென்றாலும் கிடைக்கும் என்பதுதான் சாமான்யர்களின் பார்வை. ஆனால், அன்பும், தயாள குணமும், இரக்கமும் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் சத்யாவின் வாழ்க்கை சொல்லும் பாடம்.

இந்த அனுபவங்கள், எப்படி மைக்ரோசாப்ட்டினை அவர் மூன்றே வருடங்களில் தலைகீழாக மாற்றி இருக்கிறார், உயர் தொழில்நுட்பங்களிலும், கணினியின் அடுத்த கட்ட சாத்தியங்களிலும் எப்படி மைக்ரோசாப்ட் பயணிக்கிறது, தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் தங்களுக்கு கிடைத்த சிறப்புக் குழந்தைகளின் வாயிலாக எப்படி தன் உலகம் பற்றிய பார்வை மாறியிருக்கிறது என்பது வரைக்கும் சத்யா ‘Hit Refresh: The Quest to Rediscover Microsoft’s Soul and Imagine a Better Future for Everyone’ என்றொரு புத்தகமாக எழுதியிருக்கிறார்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது, தொழில் நுட்பத்தால் மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்ற முடியும் என்கிற சாத்தியங்களில் ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது. பில் கேட்ஸ் தன்னுடைய முன்னுரையில் இப்படி எழுதி முடித்து இருப்பார்... “சத்யா மாதிரியான நபர்கள்தான் தொழில் நுட்பத்தையும், மானுட நேயத்தையும் எப்படி சரியாகக் கையாள்வது என்பதைப் புரிந்துகொண்டு, அதை நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்...”இதைவிட வேறென்ன காரணம் வேண்டும், இந்தப் புத்தகத்தைப் படிக்க!                       


- செனகா