இந்தியாவை பின்பற்றும் மலேசியா



நலத்திட்டங்கள், நிதி பரிமாற்றங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க மலேசிய அரசு இந்திய அரசின் ஆதார் கார்டுகளின் மாடலைப் பின்பற்றவிருக்கிறது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி மலேசியா சென்றபோது அவருடன் அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமது, மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன் ஆகியோர் ஆதார் குறித்து உரையாடினர். மத்திய வங்கி அதிகாரிகள், வணிகத்துறை ஆகியோரை அழைத்துக்கொண்டு குலசேகரன் ஆதார் ஆணைய தலைவரான அஜய் பூஷன் பாண்டேவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

“ஆதார் மாடலில் ‘Mykad’ என்ற கார்டுகளை மலேசியாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். நிதிபரிமாற்ற முறைகேடுகளைத் தடுக்கவே இம்முயற்சி...” எனும் குலசேகரன், ஆதார் முறைகளை மலேசியாவுக்கு ஏற்றபடி மாற்றும் முயற்சியில் உள்ளார். 3,990 ரிங்கெட்டுகளுக்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு மலேசிய அரசு Mykad கார்டு மூலம் எரிபொருள், விதவைகள் மானியம் உள்ளிட்ட உதவிகளை வழங்கவிருக்கிறது.