நான் மனதளவில் கம்யூனிஸ்ட்!



அறிவிக்கிறார் சத்யராஜின் மகள்

பெரும் நடிகர்கள் அடுத்தடுத்து தம் வாரிசுகளை சினிமாவில் களம் இறக்க, சத்யராஜின் மகள் திவ்யாவோ புகழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணராக வலம் வருகிறார். ஒபாமா பாராட்டிய ‘அக்‌ஷய பாத்ரா’ என்ற தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக இருக்கும் திவ்யா சத்யராஜ் தமிழ்ப்பெண்களுக்கு ஒரு நிஜமான முன்னுதாரணம். ஏழ்மையின் திண்ணையில் வளர்ந்து, சாதனைக் கனவுகள் கண்ணில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல்பலத்திற்குக்கூட சரியான உணவு இல்லாத நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. அதற்கு மாற்றாக ‘அக்‌ஷய பாத்ரா’வோடு இணைந்து வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசை அணுகியிருக்கிறார் திவ்யா.

‘‘ஊட்டச்சத்து நிபுணர் ஆகவேண்டும் என்பதே என் கனவு. உடலை நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் இருந்தது. சின்ன வயதிலிருந்து இப்போது வரை சின்ன உபாதைகள் கூட எனக்கு வந்ததில்லை. பர்கர், பீட்ஸா, அடைத்து வைக்கப்பட்ட பானங்கள் என எதையும் நான் ருசித்ததில்லை. நண்பர்களிடமும், தோழிகளிடமும், குடும்பத்திலும் உணவு சம்பந்தமாக எச்சரிக்கை அளித்துக்கொண்டே இருப்பேன். வாழ்க்கையில் ரொம்ப ப்ராப்ளம் இருக்கிறது என்பார்கள். ஆனால், அப்படி ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. நடப்பது எல்லாமே நமது கன்ட்ரோலில்தான் இருக்கிறது.

உடல் நலம் மட்டும்தான் நமது கன்ட்ரோலில் இல்லை. சமீபத்தில் வசதி குறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்தேன். அவர்களுக்கு பொதுவாக வரும் நோய்கள், அதைத் தாங்குவதற்கான உடல்தகுதி பற்றியெல்லாம் நிறைய தகவல்கள் கிடைத்தன. அவர்களிடம் சளி, இருமல் போன்றவை ஆண்டுக்கணக்கில் நீடித்திருக்கக் கண்டேன். வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லை, அவர்களுக்கு உணவு கிடைத்தும் அதில் போதுமான ஊட்டச்சத்து இல்லை. அதனால் குழந்தைகளுக்கு வருகிற நோய்களுக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு இன்னும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஊட்டச்சத்தைத் தருவது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருடன் பேசினேன். இந்த மாதிரி சூழலில்தான் ‘அக்‌ஷய பாத்ரா’ அமைப்பு தொடர்புகொண்டு அவர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பரத் தூதராக இருக்க சம்மதமா எனக் கேட்டது. அதன் முந்தைய சாதனைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் லாப நோக்கில்லாத இயல்பான அக்கறையை மனதில் வைத்து உடனே சரியென்றேன். ஒபாமா போன்றவர்களே இதை ஆராதிக்கும்போது எனக்கு இதில் மற்றொரு கருத்து எழவில்லை.

இந்த மதிய உணவுத்திட்டத்தை தமிழக குழந்தைகளுக்கு மேம்படுத்தி எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன். இப்போது சத்து மாவு, முட்டை, வாழைப்பழம் தருகிறார்கள். இதில் முழுமையடைய பால் அவசியமாகிறது. அதே மாதிரி தயிரும் முக்கியமானதுதான். ஆனால், இவை சீக்கிரம் கெட்டுப்போய் விடுகிற உணவு என்பதாகச் சொல்லி மறுக்கப்படுகிறது. இதற்கான பிரத்யேகமான மாற்று ஏற்பாடுகளை செய்து அமைச்சர் செங்கோட்டையன் மூலமாக முதல்வருக்கு தகவல் போயிருக்கிறது. நல்லதே விளையும் என்பது நம்பிக்கை. பொதுவான நமது உணவுப் பழக்க வழக்கங்களையே குழந்தைகள் கைக்கொள்கின்றன.

நாம் அவர்களுக்கு எதிரில் பர்கர் சாப்பிட்டுவிட்டு, அவர்களைச் சாப்பிடக்கூடாது எனச் சொன்னால் குழந்தைகள் சிரித்துவிடுகிறார்கள். நாம் எந்தத்துறையில் இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதற்காக தயங்கக்கூடாது என எனக்குப் புரியவைத்தவர் அப்பா. இந்தியாவில் பசியினால் தினமும் 6000 குழந்தைகள் இன்னமும் இறக்கிறார்கள். பல லட்சம் குழந்தைகள் தங்களின் இன்றைய நாளிற்காகவும், அடுத்த நாளைக்காகவும் நம்மை வேண்டி நிற்கிறார்கள். பசியால் குழந்தைகள் வழி தவறவும், பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிடவும், குழந்தைத் தொழிலாளர் ஆகிவிடவும் அனுமதிக்கக்கூடாது. ‘அக்‌ஷய பாத்ரா’வின் சேவை குழந்தைகளுக்கு ஒரு நாளின் உணவுக்கும் பள்ளியில் தொடர்ந்து பயிலவும் வழிவகை செய்கிறது.

உடம்பு இளைக்க, பெருக்க இரண்டிற்கும் உணவைத்தான் முன்வைக்கிறோம். ஆம், மருந்தே உணவுதான்! நான் மனதளவில் கம்யூனிஸ்ட். மக்களின் பிரச்னைகளை அவர்கள் தெளிவாக முன்னெடுக்கிறார்கள். நானே அந்த மாதிரியான மன அமைப்பிலிருந்து வந்தவள்தான். எனக்கு நல்லக்கண்ணு ஐயா போன்ற அருமையான தலைவர்களைப் பிடிக்கிறது. ஒரு பத்திரிகையில் அவரின் மேன்மை பற்றி மனப்பூர்வமாக பேசிவிட்டேன். என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். நான் புன்னகைத்துவிட்டுப் போய்விட்டேன்...’’ என்கிறார் திவ்யா சத்யராஜ். அடுத்த வீட்டில் பிரச்னை என்றாலே ஜன்னல் சாத்துகிற உலகில், திவ்யா செய்வது மகத்தான மனிதம்.

- நா.கதிர்வேலன்