லைலா இப்போது..!



எத்தனை நாளாச்சு லைலாவைப் பார்த்து! புன்சிரிப்பும் பூங்கொத்தும் எப்போதும் அழகுதானே! திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகினாலும் அதே லைலா. ஒரு ஃபேஷன் ஷோவிற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்புறம் எப்படி இருக்கீங்க... என்று ஆரம்பித்ததுமே மத்தாப்பாக புன்னகைத்தார்.‘‘ஜாலியா இருக்கேம்ப்பா. இன்னமும் மும்பைதான். வீட்டிலேயே ரொம்ப பிஸி. கிளாரியன், கியான்னு ரெண்டு பசங்க. இப்போ நல்லா வளர்ந்திட்டாங்க. அம்மா போலவே அவங்களும் ரொம்பக் குறும்பு. நான் துளித் துளியா அவங்களைப் பார்த்து ரசிச்சுக்கிட்டே இருக்கேன்.

அவங்க இரண்டு பேரையும் வளர்த்து ஆளாக்கியது பெரிய வேலை. அவங்க தூங்குகிற அழகு, தூக்கத்திலேயே சிரிக்கிறது, தத்தித் தத்தி நடக்கிறது, கைகள் இரண்டையும் தூக்கி பேலன்ஸ் பண்ணிட்டே ஓடுறது... இதெல்லாம் இன்னும் ஞாபகத்திலேயே நிற்குது. நல்லவிதமாக சினிமாவில் இருக்கும்போதே கல்யாணம் செய்துகிட்டு போயிட்டேன். மெஹதி நல்ல மனிதர். இரண்டு வீட்டிலும் எங்களை ஏத்துக்கிட்ட பிறகும் நாலு வருஷத்திற்கு மேலே காதலிச்சிட்டே இருந்தோம். ஏன்னா காதலின் சந்தோஷம் அப்படி இருக்கிறதிலும் இருக்கு. கல்யாணம் ஆனபிறகு குடும்பம், குழந்தைன்னு தனி ஃபீலிங்.

அவருக்கு இங்கேதான் பிசினஸ். காதலைச் சொன்ன மறுநிமிஷமே சம்மதிச்சேன். ஏன்னா நானும் அதைச் சொல்ல தவிச்சுக்கிட்டே இருந்தேன். எப்பவும் என்னை நல்லா பார்த்துப்பார். உங்களுக்குத் தெரியுமா... நான் ‘Inspiring Women’னு ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன். பெண்களின் வலி, பிரச்னைகள், அதை தீர்க்க வேண்டிய விதம்னு புத்தகம் அடுத்தடுத்து சொல்லிட்டுப் போகும். எனக்கு அறிமுகமான, பார்த்த, கேட்ட சம்பவங்களின் அசல் தொகுப்பு இது. அந்தப் புத்தகம் வந்தால் இன்னும் பெண்களின் பிரச்னைகள் வெளியே தெரியவரும். அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கேன்.

வரும் ஜனவரியில் புத்தகத்தை நிறைவாக கொண்டு வந்துவிடுவேன். என்ன விசேஷம் என்றாலும் நண்பர்கள் அழைத்தால் சென்னைக்கு வந்துவிடுவேன். என்னால் மனப்பூர்வமாக தமிழ்நாட்டைப் பிரிஞ்சு இருக்க முடியாது. என்னையும் ஒரு நடிகையாக இங்கே கொண்டாடி இருக்காங்க. அது எனக்கு தமிழ் மக்கள் கொடுத்த கிஃப்ட். கொஞ்ச நேரம் கிடைச்சாலும் சிட்டிக்குள்ள போய் தமிழ்ப் படங்கள் பார்த்துவிடுவேன். இப்போ பார்த்த படங்கள் ‘அறம்’, ‘நாச்சியார்’. இப்ப தமிழ் சினிமா புது வடிவத்துக்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

சீரியல் எல்லாம் நடிக்க கூப்பிட்டாங்க. மறுத்திட்டேன். ஆனால், சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கேன். நல்ல கேரக்டர் கிடைக்கணும். லைலாவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கணும். அதற்கு இடம் தருகிற மாதிரி வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தமிழ் மக்களோடு தொடர்பில் இருக்கணும்னு இப்பவும் நினைக்கிறேன்...’’ எனச் சொல்லிச் சிரிக்கிற லைலாவின் கன்னங்களில் வழிகிறது அதே குழி. அதே வெட்கம்.                     

- நா.கதிர்வேலன்