தலைமை தபால் நிலையம்



‘சார் போஸ்ட்....’ என நாம் அன்றாடம் கேட்ட குரல் இன்று அத்தனை சுருதியாக இல்லை. காரணம், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் எனத் தகவல் தொடர்பின் வளர்ச்சி. ஆனால், இருபது வருடங்களுக்கு முன்பு வரை தபால் சேவை மகத்தானதாகப் போற்றப்பட்டது. குறிப்பாக, கிராமங்களில் தபால்காரர்களைக் கடவுளாகவே பார்த்தனர். மெட்ராஸில் இந்தத் தபால் சேவையை முதல்முதலாகக் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். 1712ம் வருடம் அன்றைய மெட்ராஸ் கவர்னர் எட்வார்டு ஹாரிசன், மெட்ராஸிற்கும் வங்காளத்திற்கும் இடையே சாலைத் தொடர்புக்கு வழிவகுத்தார். அதன்பின் போக்குவரத்து எளிதானது.

இதையடுத்து, 1727ம் வருடம், முதல் தபால் நிலையத்தை கல்கத்தாவில் வெள்ளையர் வாழ்ந்த பகுதியில் அமைத்தனர். அது இன்றும் கல்கத்தாவின் ஜெனரல் போஸ்ட் ஆபீஸுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பொதுமக்களுக்கான சேவை என்றில்லாமல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கடிதங்கள் மட்டும் அலுவலக ஊழியர்கள் வழியே கொண்டு சேர்க்கப்பட்டன. இந்தத் தபால்கள் குதிரை வண்டிகளிலும், நடையாகவும் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால், உண்மையில் தபால் முறையைத் தொடங்கியவர்கள் ஆங்கிலேய வணிகர்கள்தான். தங்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளுக்காக ஆரம்பத்தில் தனியாகக் கூரியர் சேவை நடத்தியவர்கள் அவர்களே!

பின்னர், கிழக்கிந்தியக் கம்பெனி சாலைகளைச் சீரமைக்க, தபால் சேவையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தப்பட்டதுடன் வேகப்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு, கடலூர் புனித டேவிட் கோட்டையிலிருந்து மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டைக்குக் கடிதங்கள் 40 மணி நேரத்தில் சேர்க்கப்பட்டன. 1720ம் வருடம் மெட்ராஸ், கல்கத்தா, பம்பாய், சூரத், விசாகப்பட்டினம் மற்றும் கேரளாவிலுள்ள அஞ்சுதெங்கு ஆகிய இடங்களுக்கு தினசரி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில், மெட்ராஸில் இருந்து கல்கத்தாவிற்குச் செல்லும் கூரியர் சேவைக்கு மட்டும் ஆறு ஃபணம் (fanam) வசூலிக்கப்பட்டது. மற்ற ஏரியாவிற்கு நான்கு ஃபணம்தான்.

இந்நிலையில், 1736ம் வருடக் குறிப்பு ஒன்றை, ‘The Madras Tercentenary Commemoration Volume’ என்ற நூலின் ஒரு கட்டுரையில் சிம்சன் நிறுவனத்தின் இயக்குநர் ஹெச்.ஹெச்.சாப்மன் நமக்கு தருகிறார். அதன்மூலம், அன்றைய தபால் சேவை எப்படி இருந்தது என்பதை அறியலாம். ‘‘மெட்ராஸிலிருந்து அனுப்பப்படும் பண்டல் கட்டுகளும், அதேபோல் மெட்ராஸிற்கு வந்து சேரும் பண்டல் கட்டுகளும் அடிக்கடி காணாமல் போய்விடுகின்றன. அவை எந்த இடத்தில் காணாமல் போகிறது என்று தெரியவில்லை. எனவே, கம்பெனிகள் தாங்கள் அனுப்பும் அல்லது பெறும் பண்டல்கள் பற்றிய தகவல்களை மெட்ராஸ் மாகாண அலுவலகத்திற்கு அவசியம் அனுப்ப வேண்டுமென்று தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் அனுப்பப்பட்ட நாள், நேரம் போன்றவற்றை ஒரு சீட்டில் எழுதி பண்டல் கட்டின் மீது ஒட்ட வேண்டும். ஓர் இடத்தில் இந்த பண்டல்களைப் பெறும் அலுவலர் அதை அடுத்த கட்டத்திற்கு அனுப்பும்போதும் பெறப்பட்ட தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். தவிர, பண்டல்களைப் பெற்றதும் அதை அனுப்பிய அலுவலருக்கு சேர்ந்துவிட்ட விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை பண்டல்கள் தொலைந்துபோனால் அனுப்பிய அலுவலரும், பெறும் அலுவலரும் பண்டல்களை எடுத்து வந்த ஊழியர்களை விசாரிக்க வேண்டும்.

திருப்தியான பதில் கிடைக்கவில்லையெனில் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்...’’1766ம் வருடம் கவர்னர் லார்டு கிளைவ் மெட்ராஸில் முதல் தபால் நிலையத்தைப் பரீட்சார்த்த முறையில் அமைத்தாக தன்னுடைய, ‘INDIAN POSTAL HISTORY focus on Tamilnadu’ என்ற நூலில் குறிப்பிடுகிறார் முன்னாள் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலான கே.ராமச்சந்திரன். அப்போது கம்பெனி அதிகாரிகள் இதன் வழியே கட்டணமின்றி தபால் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டதாம்! இதன்பிறகு, வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவின் கவர்னராக வந்து சேர்ந்ததும் தபால் சேவையில் சில சீர்திருத்தங்கள் செய்தார்.

அதன்படி, நூறு மைல்களுக்கு எடுத்துச் செல்லப்படும் கடிதங்களில் இரண்டு அணாவிற்கு செம்பாலான சீட்டு ஒன்றை ஒட்ட வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இத்துடன் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்பட்டு தனியார் கடிதங்களுக்கு தூரத்தைப் ெபாறுத்து கட்டணம் வசூலிக்கும் முறையும் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் ஹெச்.ஹெச்.சாப்மன். ஆனால், மெட்ராஸில் நிரந்தரமான ஒரு தபால் முறை என்பது 1785ம் வருடமே அறிமுகப்படுத்தப்பட்டது. மெட்ராஸ் கம்பெனியின் சிவில் சர்வீஸில் இருந்த ஜான் பிலிப் பர்ல்டன் என்பவர் முதல்முதலாக தபால்நிலையம் வேண்டி ஒரு திட்ட வரைவை அரசுக்கு அளித்தார்.

அதில், ஒழுங்கான ஒரு தபால்நிலையம் கோட்டைச் சதுக்கத்தில் அமைத்து, கடிதங்கள் அனுப்புவதும், பெறுவதுமான பணிகளைச் செய்ய வேண்டும். பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் இந்த நிலையம் வழியே தபால் அனுப்ப வேண்டும். தபால் சேவைக்கு ஆகின்ற செலவுகளை அந்தத் துறை மூலம் வருகின்ற வருவாயைக் கொண்டு செய்துகொள்ள வேண்டும். போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் இருந்தன. பின்னர் அடுத்த வருடமே தாமஸ் லெவின் என்கிற சிவில் அதிகாரி கல்கத்தா போல இங்கும் தபால் நிலையம் வேண்டி இரண்டாவதாக ஒரு திட்ட வரைவை அளித்தார்.

இதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றன. அதில் முக்கியமானது, மெட்ராஸ் வடக்கு முதல் ஒரிசாவிலுள்ள கஞ்சம் வரையிலும்; மெட்ராஸ் தெற்கு முதல் கேரளாவின் அஞ்சு தெங்கு வரையிலும்; மெட்ராஸ் மேற்கு முதல் வேலூர் வரையிலும் மாகாணத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, குறிப்பிட்ட இடங்களில் செய்திக்கான தூதுவர்களை (தபால்காரர்) நியமிக்க வேண்டும் என்பது. இப்படியாக, இந்த இரு அதிகாரிகளின் திட்ட வரைவுகளால் 1786ம் வருடம் ஜூன் 1ம் தேதி மெட்ராஸில் முதல் தலைமை தபால் நிலையம் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே மெட்ராஸிலிருந்து கல்கத்தாவிற்கும், பம்பாய்க்கும் மெயில் சர்வீஸ் ஆரம்பமானது.

பம்பாய்க்கான கடிதங்கள் வாரம் ஒரு முறை மசூலிப்பட்டினம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து பம்பாய் போய்ச் சேரும். இதற்கு 17 நாட்களாகின. இதேபோல் கல்கத்தாவிற்கு 19 நாட்கள். ஆரம்பத்தில் கோட்டையிலிருந்த கடல் வாயிலின் வெளிப்புறத்தில் இந்த தபால் நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது கவர்னராக இருந்த சர் ஆர்க்கிபால்ட் கேம்பெல்லின் தனிச் செயலராக இருந்த ஆர்க்கிபால்ட் மான்ட்கோமரி கேம்பெல் என்பவர் முதல் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். பின்னர், 1837ம் வருடம் இந்தத் தலைமை தபால் நிலையம் கோட்டையின் உள்ளே இருந்த எக்ஸ்சேஞ்ச் கட்டடம் (இன்றைய கோட்டை மியூசியம்) அருகே மாற்றப்பட்டது.

இதே வருடம் தபால் நிலைய சட்டமும் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து 1856ல் பிராட்வேயில் இருந்த அரசு தோட்ட இல்லத்திற்கு தபால் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இந்நேரம் மெட்ராஸில் ரயில்வே தொடங்கப்பட தபால் சேவை இன்னும் வேகமெடுத்தது. இதற்கிடையே தந்தித் துறையும் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்து வந்தது. கூடவே, தபால் நிலையத்தை சொந்தக் கட்டடத்தில் அமைக்கும் கோரிக்கைகளும் எழுந்தன. இதனால், 1873ல் இதற்கான இடம் வடக்கு கடற்கரைச் சாலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் அரசின் கட்டடக்கலை ஆலோசகராக விளங்கிய ராபர்ட் சிஸ்ஹோல்ம் புதிய கட்டடத்திற்கான வடிவமைப்பை செய்தார்.

இந்தோ சாராசெனிக் பாணியில் கோதிக் கட்டடக்கலையையும் சேர்த்து. 325 அடி நீளமும், 162 அடி அகலமும், 125 அடி உயரமும் கொண்டு மூன்று தளங்களுடன், இரண்டு டவர்களையும் அமைத்து அழகாகக் கட்டப்பட்டது இந்தக் கட்டடம். 1884ம் வருடம் மார்ச் 1ம் தேதி திறக்கப்பட்ட இந்தக் கட்டடமே இன்றும் தலைமை தபால் நிலையமாக செயல்பட்டு வருகிறது. மொத்தம் சுமார் 55 ஆயிரம் சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கட்டடம் கட்ட அன்றைக்கு ஆறு முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை செலவானது. 1918ம் வருடம் மோட்டார் போக்குவரத்து துவங்கும் வரை தபால்கள் கொண்டு செல்ல ஜட்கா வண்டிகளே (குதிரை வண்டி) பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அஞ்சல் சேவை நகர்ப்புறம், கிராமப்புறம் என விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு தபால் நிலையங்கள் அதிகப்படுத்தப்பட்டன. மாநில வாரியாகப் பிரிந்ததும் 1961ல் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உருவானது. 2000ல் இந்தப் பாரம்பரிய தலைமை தபால் நிலையக் கட்டடம் தீ விபத்தில் சேதமடைய சுமார் 3.6 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. பிறகு, 2011ல் தொடர் மழையால் மீண்டும் சேதமடைந்தது. இந்தாண்டு முதல்கட்டமாக 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த 134 வருட கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருவதாகத் தகவல்!  

பழங்காலம்

பழங்கால தகவல் பரிமாற்றம் மற்றும் தபால் முறை பற்றி INDIAN POSTAL HISTORY focus on Tamilnadu என்ற நூலில் முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலான டாக்டர் கே.ராமச்சந்திரன் தந்திருக்கும் சில தகவல்கள்...

* முகமது பின் துக்ளக் ஆட்சியில் ஒவ்வொரு மூன்று மைல் தூரத்திற்கும் ஒரு கிராமமும் ஊர் எல்லையில் ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் ஃபுட் ரன்னர் எனப்படும் ஒரு ஓட்ட வீரர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார். இடுப்பில் பெல்ட்டும், கையில் இரண்டு அடி தடியுடன் மணியும் பொருத்தப்பட்டிருக்கும்.
* தபால் பையை ஒரு கையிலும், தடியை மறுகையிலும் பிடித்தபடி வேகமாக அடுத்த கிராமம் உள்ள மூன்று மைல் தூரத்துக்கு ஓட வேண்டும். அந்தக் கிராமத்தின் எல்லையில் இதேபோல் உள்ள ஃபுட் ரன்னரிடம் கொடுக்க வேண்டும். அந்த ஃபுட் ரன்னர் இவரின் மணிச் சத்தத்தைக் கேட்டுத் தயாராக இருக்க வேண்டும்.
* பாபர் காலத்தில் தகவல்தொடர்பை இன்னும் மேம்படுத்தினார். ஆக்ராவிலிருந்து காபூல் வரை சாலையை நன்கு அமைத்தவர், ஒவ்வொரு 36 மைல்களுக்கும் ஆறு குதிரைகளை தகவலுக்காகவே நிறுத்தியிருந்தார்.
* அக்பர் நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் ஒவ்வொரு ஐந்து மைல் இடைவெளியிலும் துருக்கி குதிரைகளை நிறுத்தி செய்திகளைப் பெற்றார். இதற்கு ‘டக் சவுக்கிஸ்’ என்று பெயர்.
* இதே முகலாயர்கள் காலத்தில் வணிகர்கள் தனிப்பட்ட முறையில் சம்பளத்திற்கு ஆட்களை நியமித்து சொந்தமாக கூரியர் சேவையும் வைத்திருந்தனர்.
* 1627ல் மன்னர் ஷாஜகான் தக்காணப் பகுதியில் ஜுன்னார் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது காஷ்மீரில் அவரின் தந்தை ஜஹாங்கீர் இறந்த தகவல் பன்சாரி என்ற குதிரைக் கூரியர் வழியே 1600 கிமீ கடந்து சுமார் 20 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்டது.

- பேராச்சி கண்ணன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால், ராஜா