பகவான்



கேள்வியின் நாயகன் - 5

மிகப்பெரிய சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், பெரும் தலைவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான ஒரு சம்பவம், அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது நடந்திருக்கும். ஆம். நச்சென்று கேள்வி கேட்டிருப்பார்கள். அவர்கள் வயதுக்கு மீறிய அறிவோடு, வயதில் மூத்தோரிடம், ‘நான் ஏன் உன்னை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும்?’ என்று நடுமண்டையில் அடித்தமாதிரி கேட்டிருப்பார்கள். கேட்கத் தொடங்கும்போதுதான் ஞானம் பிறக்கிறது. பகுத்தறிவின் அடிப்படையே கேள்விதான். ரஜனீஷும் சிறுவயதில் கேள்வியின் நாயகனாகவே இருந்தார்.

எல்லாவற்றையுமே கேள்வி கேட்டார். அவருடைய தாத்தாவுக்கு தர்மசங்கடமாகி விடும். ஆனால், பாட்டியோ பேரனை ரசித்தார். தன்னால் முடிந்த பதில்களை சொன்னார். தனக்குத் தெரியாத கேள்விகளை சாய்ஸில் அவர் விடவில்லை. ‘நீயே முயற்சித்து பதில் கண்டுபிடி’ என்று ஊக்குவித்தார். குச்வாடா ஊரின் பெரிய மனிதர் என்பதால், ஊருக்கு விசிட் செய்யும் அந்தக்கால விஐபிகள் ரஜனீஷின் தாத்தா வீட்டுக்கு வந்துதான் சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். அம்மாதிரி ஒருமுறை வந்த ஜைனத்துறவி ஒருவர், சிறுவன் ரஜனீஷின் கேள்விமழையில் நனைந்து தர்மசங்கடப்பட்டார்.

“எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன…” என்று ரஜனீஷ் ஆரம்பித்ததுமே தாத்தா பதறினார்.“அவர் ஓய்வெடுக்கட்டும். நீ போய் விளையாடு!” என்று பேரனைத் துரத்த முயன்றார் தாத்தா. துறவியோ மந்தகாசப் புன்னகையுடன், “குழந்தைதானே, ஏதோ என்னை கேட்க விரும்புகிறான். கேட்கட்டுமே...” என்றார் பெருந்தன்மையுடன்.“இவன் சாதாரண குழந்தை இல்லை சாமி. அதனால்தான் தயங்குகிறேன்!”“ஓ. ஞானக்குழந்தையோ!” துறவியின் முகத்தில் இளக்காரம் தென்பட்டது.

‘இவருக்கு வேண்டும்’ என்று மனசுக்குள்ளே கருதிக்கொண்டு, “ரஜனீஷ், சாமியிடம் என்ன கேட்கணுமோ, கேள்...” என்று அனுமதி அளித்தார் தாத்தா. ஊரே, அவர்கள் வீட்டில் கூடியிருந்தது. எடுத்ததுமே ரஜனீஷ் வீசியது கண்ணீர்ப்புகைக் குண்டு. “ஜைன மதம் ஏன் முக்தியை வலியுறுத்துகிறது? நான் மறுபிறவி எடுப்பதை மதம் ஏன் தடுக்க வேண்டும்?”ஏழெட்டு வயது சிறுவனிடம் இவ்வளவு அர்த்தம் பொதிந்த கேள்வியை சத்தியமாக துறவி எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அந்தக் கேள்வியில்தான் ஜைன மதத்தின் அடிப்படையே கட்டி எழுப்பப்பட்டது.

முக்தி பெறுவதுதான் மனிதவாழ்வின் இலக்காக ஜைனம் உபதேசிக்கிறது. “இந்தப் பிறவியில்தான் துன்பப்படுகிறோம். இன்னொரு பிறவி எடுத்து அதிலும் துன்பப்பட வேண்டுமா என்பதால்தான், இந்தப் பிறவியிலேயே முக்தி அடைந்துவிடலாம் என்று மக்களுக்கு உபதேசிக்கிறோம்...” என்றார். தன்னுடைய பதில் சிறுவனை மட்டுமல்ல, கூடியிருந்த ஊரையே கன்வின்ஸ் செய்யும் என்றுதான் துறவி நம்பினார். ஆனால் - “நாம் ஏன் துன்பப்பட்டு உயிர் வாழவேண்டும்? நீங்கள் மறுபிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை.

இப்போதே உயிர் துறந்து முக்தி அடையலாமே?” என்று இம்முறை ரஜனீஷ் வீசியது ஹைட்ரஜன் அணுகுண்டு. தாத்தாவும், ஊர்ப்பெரியவர்களும் பதறிப்போனார்கள்.“இப்படியெல்லாம் ஞானிகளிடம் பேசக்கூடாது” என்று கண்டிக்க முற்பட்டார்கள். துறவிக்கோ மனசுக்குள் கொஞ்சம் திகிலடித்தாலும், தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டுவதற்காக, “சின்னப்பையன்தானே, விவரம் தெரியாமல் கேட்கிறான்...” என்று அவர்களை சமாதானப்படுத்தி விட்டு, பதில் யோசிக்கத் தொடங்கினார். “கேள்வி புரியவில்லையா, திரும்ப கேட்கட்டுமா?” என்று ரஜனீஷ் மிரட்ட,

ஏதோ ஒரு பதிலைச் சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று சலிப்பாக பதில் சொல்லத் தொடங்கினார் துறவி.“நம் உயிரை நாமே துறப்பது பாவம். எதன்மீதும் பற்றற்று வாழ்வதின் மூலமாக மட்டுமே முக்தியை எட்ட முடியும்...”“உயிர் மீது உங்களுக்கு பற்றில்லையெனில் அதைத் துறப்பது எப்படி பாவம் ஆகும்? உங்களுக்கு உயிர் துறப்பது எப்படியென்று தெரியவில்லை. என்னுடன் ஏரிக்கு வாருங்கள். நான் சொல்லிக் கொடுக்கிறேன்..!” என்று ரஜனீஷ் இம்முறை ஒட்டுமொத்தமாக துறவியை நிலைகுலைய வைத்தார். துறவி வாயடைத்துப் போனார்.

“ஏரியின் ஆழமான பகுதியில் நாம் இருவரும் குதிப்போம். நீங்கள் உங்கள் உயிர் மீதான பற்றைத் துறந்து நீந்தாமல் இருங்கள். நான் கரையேறி, நீங்கள் முக்தி பெற்றுவிட்டதை உறுதி செய்து கொள்கிறேன்!” ரஜனீஷின் பேச்சு, விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த தாத்தா, உடனே பாட்டியை அழைத்து, “அவனை உள்ளே அழைத்துச் செல்...” என்று ஆணையிட்டார். கண்மூடி யோசனையில் ஆழ்ந்துவிட்டார் துறவி. “இந்தக் குழந்தைக்கு கல்வி போதிப்பது யார்?” என்று தாத்தாவிடம் கேட்டார். “இன்னும் பள்ளியிலே சேர்க்கவில்லை. தனியாகவும் குருவை நியமித்து கற்பிக்கவில்லை...” என்று தாத்தா சொன்னதை, துறவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதற்குள்ளாக பாட்டியுடன் அறைக்குள் சென்ற ரஜனீஷ், “எனக்கு இன்னமும் கேள்விகள் இருக்கிறது பாட்டி!” என்றார். “நீ கேட்பதில் தவறில்லை. ஆனால், உன் கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களிடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்று புன்னகையோடு பாட்டி சொன்னார். எந்த வெளியுலக அனுபவமும் பெறாமல் வீட்டுக்குள்ளேயே சமையல்கட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பாட்டிக்கு எப்படி இவ்வளவு ஞானமென்று ரஜனீஷ் அதிசயித்துப் போய்விட்டார். “பாட்டி, அவரிடம் நான் கேள்விகள் கேட்பதின் மூலம் எனக்கு தெளிவு வருகிறதோ இல்லையோ... அவர் தெளிவடைவார் என்று கருதுகிறேன்.

இந்த கேள்விகளுக்கான விடையை நாடி இனியாவது அவர் செல்வார் இல்லையா?” அறிவுபூர்வமான இந்த பதிலைக் கேட்டதுமே, பேரனை அணைத்து உச்சி முகர்ந்தார் பாட்டி. “போய்க் கேள் ரஜனீஷ். நீ கேட்கப் பிறந்தவன். இனி உன் கேள்விகள், உலகம் முழுக்க எதிரொலிக்கட்டும். கண்ணை மூடிக்கொண்டு யாரும் எதையும் முன்னோர் சொன்னார்கள் என்று அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இனியாவது வாழ்க்கையின் அர்த்தம் அனைவருக்கும் விளங்கட்டும்!”தில்லிக்கே ராஜாவானாலும், பாட்டி சொல்லைத் தட்டலாமா? மீண்டும் துறவியிடம் வந்தார் ரஜனீஷ்.

‘இதென்ன வம்பாப் போச்சி, இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேனோ’ என்று நொந்து போனார் துறவி. “சாமி, எந்தவொரு உண்மையையும் சொந்த அனுபவத்தில்தான் உணர்ந்து சொல்ல வேண்டும். சரியா?” ரஜனீஷ் வீசிய தூண்டிலுக்கு, ‘ஆம்’ என்கிற முக அசைப்பின் மூலமாக துறவி மீண்டும் மாட்டினார். “அப்படியெனில், துறவிகள் பலரும் ஏழு மலை பற்றி மக்களிடம் பேசுகிறீர்கள். ஆறு மலைகளை அடைந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். ஏழாவது மலை முடிவற்றது. அங்கு சென்றவர்கள் திரும்பவே முடியாது என்கிறீர்கள்…”

“ஆமாம்…”“நீங்கள் ஏழாவது மலையைச் சென்றடைந்திருக்கிறீர்களா?” “இல்லை. போயிருந்தால் திரும்பியிருக்க மாட்டேனே. உன்னிடம் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டேனே?” “அப்படியெனில் ஏழாவது மலைக்குப் போகாமலேயே, அங்கு போனால் திரும்ப முடியாது என்று கற்பனை செய்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?” துறவி மவுனமாக இருந்தார். பரிதாபமாக ரஜனீஷின் தாத்தாவைப் பார்த்தார். “இனியும் உங்களிடம் கேள்விகள் கேட்கப் போவதில்லை. உங்களுக்கு என்ன சொல்லித் தந்தார்களோ, அதையே நீங்களும் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். கற்கும் நிலையில் என்னைப் போல நீங்களும் கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்.

உங்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் பதில்களைப் பெற்றிருந்தால் மட்டுமே, அதை நீங்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். மதவாதி என்பவன் புரட்சியாளனாகவும் இருக்க வேண்டும். அவனிடம் புரட்சிக்கான குணங்கள் இல்லையென்றால், மக்களுக்கு அவனால் யாது பயன்?” முடிவாக ரஜனீஷ் போட்ட இந்த போடு, துறவியை நிலைகுலைய வைத்துவிட்டது. அமைதியாக எழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் அவர் குச்வாடாவுக்கு வரவே இல்லை! அனேகமாக துறவுத்தன்மையைக் கூட அவர் துறந்திருக்கலாம். ஞானம் தேடி மீண்டும் குருவைத் தேடி அலைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? பிறக்கும்போதே, இயல்பிலேயே ஞானத்தோடு பிறக்க, எல்லாருமே பகவானா என்ன?

(தரிசனம் தருவார்)

ஞானம் என்பது என்ன?

கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கும் கலைஞன் ஒருவனை தினமும் ஓஷோ கவனிக்கிறார். தினமும் அவன் கடற்கரைக்கு வருகிறான்.
புத்தர், மகாவீரர் இருவரையும் சிற்பமாக உருவாக்குகிறான். அவன் பாட்டுக்கும் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கிறான். மறுநாள், முந்தைய நாள் உருவாக்கிய சிற்பத்தைவிட அழகாகச் செய்ய வேண்டும் என்று மெனக்கெடுகிறான். இவனையும், இவனது சிற்பங்களையும் ஓஷோவைப் போலவே பலரும் கவனிக்கிறார்கள். மிகச்சிறந்த கலைஞன் என்று உணரும் சிலர், அவனது சிற்பக்கலையைப் பாராட்டும் வகையில் சிற்பங்கள் மீது காசுகளை வீசுகிறார்கள்.

ஒருநாள் கூட அவன் அந்தக் காசுகளை எடுத்ததில்லை. சில நேரங்களில் கடற்கரையில் விளையாடும் குழந்தைகள் அந்தச் சிற்பங்களின் மீது விழுந்து கலைத்து விடுவதுண்டு. அவன் ஒரு குழந்தையிடமும் கோபித்துக்கொண்டதில்லை. கலைந்த சிற்பங்களை மீண்டும் சரிசெய்வான். சில நேரங்களில் அலைகள் பொங்கி அவன் சிற்பங்களை அழித்ததுண்டு. அப்போதெல்லாம் அலுத்துக் கொள்ளாமல் மீண்டும் புதியதாக சிற்பங்களைச் செய்வான்.

அவன் யார், என்ன பின்னணி எதுவுமே ஓஷோவுக்குத் தெரியாது. ஆனால் இவனுக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்கிறார் ஓஷோ. ஞானம் என்பது என்னவென்று புரிகிறது இல்லையா? எதனால் நாம் மகிழ்ச்சி அடைகிறோமோ, எது நம்முடைய மனதை அலையற்ற நீர்நிலை போல அமைதியில் ஆற்றுப்படுத்துகிறதோ அதைக் கண்டுகொள்வதே ஞானம். அவன், கடற்கரைச் சிற்பங்களில் தன்னுடைய ஞானத்தை எட்டினான். நம்முடைய ஞானம் எங்கே இருக்கிறது என்பதை நாம்தான் தேடிக்கண்டடைய வேண்டும்.

- யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்