எப்படி நடிக்கிறான் பாருனு ஆச்சர்யப்பட்டுட்டா நான் தோத்துட்டேன்..!



இன்றைக்கு தமிழ் சினிமாவின் தலைப்புச் செய்தி... விஜய் சேதுபதி! அடுத்தடுத்து வெற்றியை அடைந்திருப்பதில் அவரை புகழும் பொறாமையுமாகக் கொஞ்சுகிறது கோடம்பாக்கம். விறுவிறு துறுதுறு வளர்ச்சியில் சேதுபதி தொட்டிருப்பது பெரிய உயரம். தமிழ்ச் சமூகமோ ‘வித்தியாச நடிகன்’ என்று கொண்டாடுகிறது. ஷூட்டிங்கின் இடைவேளையில் தாய்லாந்திலிருந்து பேசினார் சேது.

‘சீதக்காதி’ டிரெய்லரே வித்தியாசம் காட்டுகிறது...

ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்தப்படத்தின் பெரும் உழைப்பு பாலாஜி தரணிதரனையே சாரும். தன்னடக்கத்தோடு சொல்லலை. படம் வந்தபிறகு இந்தப்படத்தை ஒருத்தன் எப்படிடா நினைச்சுப் பார்த்தான்னு உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். பாலாஜிகிட்டே எப்பவும் ஒரு இன்னொசென்ட் பிரில்லியன்ட் இருக்கும். ‘சும்மா ஒரு ஐடியா வந்தது...’ என எதையும் தாழ்மையாகத்தான் சொல்வார். இதை நான் உருவாக்கினேன்னு தம்பட்டம் அடிச்சதே இல்லை. எனக்கு அது பிடிக்கும்.

இருந்தாலும் உங்கள் உழைப்பு இதில் அதிகம்...

செய்கிற வேலைக்கு என்னை நம்பிப் போறதில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஒரு தப்பான ஃபுட்டேஜ் பாலாஜிகிட்டேயிருந்து வரவே வராது. இப்படி ஒரு டைரக்டரை நம்பி வேலை செய்யலாம். அவர் என்கிட்டே இருக்கிற தவறுகளை சரிபண்ணி சரிபண்ணி எடுத்து அப்படி ஒரு வேலை வாங்குவார். நான் எப்ப கிழவனானேன்னு தெரியாது. அதுவும் கண்டு, கேட்டு உணர்ந்ததுதான். நானும் அவரும் அங்கே இங்கே பார்த்து ஓர் அனுபவத்தை சேகரிச்சிட்டு வர்றோம். அந்த அனுபவம்தான் ‘சீதக்காதி’ அய்யாவோட வடிவம்.

கலையை அழிக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா..?

கலை என்றைக்கும் வாழும். ஆதியிலிருந்து மக்கள் சந்தோஷமாக இருக்கிறது கலைகளால் மட்டுமே. அதற்கு வேற வேற வடிவம். இன்னிக்கும் கூத்துக் கலைஞர்கள் அவ்வளவு இயல்பாக இருக்காங்க. நாடகம் போய், சினிமா வரைக்கும் கலைகள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வந்துகிட்டே இருக்கு. ஒரு கல்லூரியில் நடந்த மாணவியர் சந்திப்பில் இளையராஜாவிடம், ‘நீங்க எப்படி இங்கே வரணும்னு முடிவு எடுத்தீங்க...?’ன்னு ஒரு கேள்வி கேட்கிறாங்க. ‘‘‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’னு ஒரு பாட்டு கேட்டேன். அதில் ‘தெளிவும் அடையாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம், மயங்குது எதிர்காலம்...’னு ஒரு வரி வந்தது. அந்த வரிகள் என்னில் என்னமோ பண்ணுச்சு. வந்திட்டேன்...’’னு சொல்லியிருக்கார். ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் வருகிற மாற்றங்கள் எங்கே இருந்தெல்லாம் வருதுன்னு பாருங்க.

நல்ல நடிகன்னு நிரூபிச்சிட்டீங்க...

அப்படி ஒண்ணும் இல்லை. நல்ல நடிகன்னு ஒருத்தன் இல்லவே இல்லை. ‘96’னு ஒரு படம் நடிச்சேன். உங்களுக்கு பிடி்ச்சிருந்தா சந்தோஷம். அடுத்து ‘சீதக்காதி’. மக்களுக்கு பிடிச்சிருந்தா இன்னும் சந்தோஷம். நான் நல்லா நடிப்பேன்னு எழுதித்தர முடியாது. நல்ல நடிகன்னு ஒரு விஷயமே கிடையாது. அந்த கதாபாத்திரத்தை, இருக்கிற அறிவை வைச்சு பண்றதுக்கு முயற்சி பண்றேன். முயற்சிதான் எடுக்கிறேன்.

 அதுல ஓரளவு வருது. அதுதான் மக்களுக்குப் போய்ச் சேருது. இதுல பல கருத்து வரும். பாதிப்பேர் நல்லாயிருக்குன்னு சொல்வாங்க. மீதிப்பேர் நல்லாயில்லைன்னு சொல்வாங்க. நல்லாயில்லைன்னு சொல்றதும் உண்மைதான். இதில் விஜய் சேதுபதி நடிச்சிருக்கான், ஏதோ இருக்கும்னு நம்பி வர்றாங்க இல்லையா, எனக்கு அதுவே போதுமானது. ஓரளவு அதை நீடிக்க வைச்சு காப்பாத்தினால் போதும். யதார்த்த நடிகன், நல்ல நடிகன், அபூர்வ நடிகன்னு இப்படி எதுவுமே வேண்டாம். அது ஒரு மாயை. எனக்கு ஒரு படத்தில் பயங்கரமாக நடிக்க வாய்ப்பிருக்குன்னா நடிக்கவே மாட்டேன்.

என்னால் அதை சுமக்க முடியுமா, டைரக்டரை நம்பிப் போகலாமான்னு மட்டும்தான் பார்ப்பேன். என்னைப் பார்த்து ‘எப்படி நடிக்கிறான் பாரு’னு ஆச்சர்யப்பட்டுட்டா நான் தோத்துட்டேன். கதையோட ஒட்டிப்போயிட்டால் எனக்குப் பிரச்னையே இல்லை. நான் எப்பவும் கதையோட இருக்கவே விரும்புறேன். கத்தரிக்காய்க்கு ஒரு வாசனை இருக்கு. முருங்கைக்காய்க்கு ஒரு வாசனை உண்டு. மஞ்சள் தூளுக்கு ஒரு வாசனை, உப்புக்குக்கூட ஒரு வாசனை. ஆனால், எல்லாம் சேர்த்து சாம்பார் செய்தபிறகு சாம்பார் வாசனை ஒண்ணுதான் இருக்கணும். தனியாகத் தெரியவே கூடாது!

சரியான படங்களை செலக்ட் பண்றதுதான் உங்க சாதனையோ...

ஒரு ராஜா இருந்தாருன்னு சொல்லும்போதே கதை ஆரம்பித்துவிடுகிறது. அப்புறம் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தாங்க. அவங்களுக்கு பிரச்னை... அதுக்கான காரணம் உங்களுக்கு நம்பும்படியாக இருக்கா, அல்லது அதை நம்புற மாதிரி எடுக்க முடியுமா... இப்படி அடுத்தடுத்து போகும். ஷங்கர் சார் படத்தைப்பாருங்க, எந்தப்படத்தையும் அவர் நம்புற மாதிரி எடுத்திடுவார்னு நம்பிக்கை இருக்கு. ‘சீதக்காதி’யை ஒரு கதையாக உருவெடுக்க வைத்ததே ஒரு சாதனை. முன்னாடி எனக்கிருந்த அறிவை வைச்சு என் கேரக்டரை அணுகிட்டு இருந்தேன்.

இப்ப என்னை என் கதாபாத்திரத்திடம் ஒப்படைக்கிறேன். ‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பா, ‘சீதக்காதி’ அய்யா, ‘96’ ராம் எல்லோரும் இப்படித்தான். முன்பு விஜய்சேதுபதி சொல்றதை கதாபாத்திரம் கேட்டது. இப்ப கதாபாத்திரம் சொல்றதை சேதுபதி கேட்டுட்டு இருக்கான். இது ஒரு நிலை. இப்ப என் கதாபாத்திரத்தை வாத்தியாராக்கி, நான் மாணவன் ஆகிறேன். அவ்வளவுதான். ஷில்பாவாக ஆனபோது ஆடிப்போயிட்டேன். பெண்மையை உணர்ந்து பார்க்கிறது சாதாரண விஷயம் இல்லை.

அது உங்களை டாமினேட் பண்ணப் பார்க்கும். அந்த நளினமும், பார்வையும், உணர்வும் அப்படியே என்னை உள்ளே இழுக்குது. நான் ஒரு சமயம் ஷில்பா சொல்றதைக் கேட்டு நடந்த வினோதம் நிகழ்ந்தது. எல்லோரும் என்னை ரசிக்கலாம். அதுகூட அன்புப் பரிமாற்றம்தான். ‘96’ல் கடலுக்கு அடியில் போட்டோ எடுக்கிற மாதிரி சில காட்சிகள் வரும். அதற்காகப் போயிருந்தேன். எனக்கு கடலே தீராத ஆச்சரியமாக இருக்கு.

எனக்கு பயிற்சிக்கு வந்தவன், ‘அண்ணா, எனக்கு பல கடல்களுக்கு போய்ப்பார்க்கணும்...’னு சொன்னான். ‘இந்தக் கடல் பத்தாதா...’னு கேட்டேன். ‘இல்லண்ணே,  ஒவ்வொரு கடலுக்கும் ஒரு தன்மை இருக்கு, கடலுக்குள் போறதே போதை...’னு சொன்னான். புரியுதா உங்களுக்கு! ஒரு கதாபாத்திரத்திற்கு ஒரு தன்மை இருக்கும். அதை Explore பண்றேன் சார். அதை வெளிப்படுத்தி அப்படியே பிஹேவ் பண்றேன். சிலசமயம் Depression மாதிரி ஆகியிருக்கு. இது யாருக்குப் புரியணுமோ புரியும்... இல்லாட்டி இது உளறல்தான்.

உங்களை பாதிச்ச படம் எது?

‘பரியேறும் பெருமாள்’. அதனோட க்ளைமாக்ஸ் என்னை ஆட்டம் காண வைச்சிடுச்சு. பாருங்க, இப்ப நாம பேசிகிட்டு இருக்கும்போதே ஓசூரில் ஆணவக்கொலை. ஆனால், செய்திட்டு நடமாடுகிறார்கள். அவர்களை கொடிய மிருகங்களாக நினைச்சு கட்டுப்படுத்தணும். படிச்ச முட்டாள்களும் இதில் சேர்த்திதான். கடவுள் என்பவர் மனிதனுக்கு உள்ளே இருந்துதான் வெளியே வரமுடியும். கடவுள் மனிதனைப் படைச்சிட்டு, மனுஷனுக்கு உள்ளே போய் பல கோடி வருஷமாச்சு. ஆனால், இன்னமும் இங்கே கடவுளைக் காப்பாத்த போராட்டமெல்லாம் நடந்துகிட்டே இருக்கு. ஆணவக்கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாமே நிதானமா இருக்கு. நமக்கான எந்தக் கதவும் திறக்கலை. வருத்தமாக இருக்கு.       

- நா.கதிர்வேலன்