சித்து விளையாட்டு



தலைமுடி எண்ணெயில் நடக்கும் தடுக்கினத்தோம்! - 6

தமிழகம் முழுக்க இருக்கும் அரசு ஆயுர்வேத, சித்த மருத்துவ மையங்களுக்கு அதிக சதவீதம் மருந்துகளை பெரிய நிறுவனம் ஒன்று சப்ளை செய்து கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்திடம் முழுமையான வசதிகளைக் கொண்ட தயாரிப்பு மையமே கிடையாது! அரசுக்கு சப்ளை செய்யும் மருந்துகளில் பெரும்பாலானவற்றை அந்த நிறுவனம் பிற சின்ன நிறுவனங்களிடமே அவுட்சோர்சிங் செய்து கொண்டிருக்கிறது என்பது எத்தனை அயோக்கியத்தனம்? தயாரிக்கும் ஒவ்வொரு மருந்தையும் லேப் டெஸ்ட்டிங் செய்திருக்க வேண்டும். பி.எம்.ஆர் ரிப்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

இதெல்லாம் அரசாங்கத்திற்கு சப்ளை செய்யும் பல நிறுவனங்களிடம் இல்லவே இல்லை. டெண்டரை லட்டாகக் கருதித் தட்டிக் கொண்டு வரும் அரசியல் தொடர்பிருக்கும்போது இதெல்லாம் தேவையா என்ன? பொன்விழா கண்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நட்பு வட்டத்தின் வழியாகச் சந்தித்தேன். “அதெல்லாம் யாரும் ஒண்ணும் பண்ண மாட்டாங்க சார்!” என்று சொல்லிவிட்டு அதன் உரிமையாளர் லைசென்ஸை தூக்கி மேஜையில் போட்டார். செல்லரித்துப் போயிருந்தது அது. அவருடைய லைசென்ஸை பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கவே இல்லை அவர்.

அந்த லைசென்ஸில் மருந்து தயாரிப்பது குறித்த மாஸ்டர் பார்முலாவும் இல்லை. மாஸ்டர் பார்முலா என்பது வைத்திருக்கும் சொத்தின் தாய்ப் பத்திரம் போல. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசின் பங்கு என்ன இதில்? அதைத் தட்டிக் கேட்க வேண்டிய சித்தா மெடிக்கல் கவுன்சில் என்ன செய்கிறது? மாநில சித்த மருந்து கட்டுப்பாட்டு மையம் தூங்குகிறதா? இவர்களெல்லாம் நன்றாகவே இருக்கமாட்டார்கள் எனத் துணிந்து சாபம் விடலாம் என்றார் நான் சந்தித்த நேர்மையான சித்த மருத்துவர் ஒருத்தர்.

போலியான ஆந்திர முகவரியில் இருந்து ஆயுர்வேத தலைமுடி எண்ணெயைத் தயாரித்து விற்பவர் ஒருத்தரோடு இணைந்து இந்தத் துறையில் கோலோச்சும் முதலை ஒருத்தரைப் பார்ப்பதற்காக தென்மாவட்ட நகரம் ஒன்றுக்குப் போனேன். போலியானது அது என எப்படிக் கண்டுபிடித்தார்கள்? ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்து ஆய்வாளர்கள் என ஒரு மதிப்புமிக்க பதவியை அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. உதாரணமாக, அதில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருந்து ஆய்வாளரும் அந்தப் பக்கத்தில் இருக்கிற ஊரொன்றைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருத்தரும் தினமும் அதிமுக்கியமான  வேலையொன்றில் ஈடுபடுவார்கள்.

மெடிக்கல்களுக்கு போய் புதிதாக வந்திருக்கும் சித்த ஆயுர்வேத மருந்துகளை எடுப்பார்கள். அதில் உள்ள முகவரியை வைத்து நேரே அங்கே போய்விடுவார்கள். உன்னுடையதை டெஸ்ட்டிற்கு கொடுக்கவா என மிரட்டுவார்கள். போலியானவர்கள் சரணடைந்து விடுவார்கள். நான் சொல்கிற, எனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களின் மருந்துகளை மட்டுமே விற்க வேண்டும். இல்லாவிட்டால் போலி மருந்துகளை விற்றதாக நடவடிக்கை எடுப்பேன் என மருந்துக் கடைகளையும் அவர்கள் மிரட்டுவதுமுண்டு. அப்படித்தான் அந்த தலைமுடி எண்ணெய்க்காரரும் மாட்டிக்கொண்டார்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ராசிக்கல் பெயரைக் கொண்ட அந்த நபர், மாவட்டத்தில் இருக்கிற எல்லா மருந்து ஆய்வாளர்களையும் கைக்குள் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். அவரும்கூட ஆரம்பத்தில் இந்த மாதிரி போலி கம்பெனியொன்றை நடத்தியவர்தான். வியாபாரம் சரியாகப் போகவில்லை என்பதால் இந்தத் தொழிலில் குதித்துவிட்டார். அவரிடம் போனால் முடியாத காரியங்கள்கூட கைகூடி விடும் என்றார்கள். நடக்க முடியாத போலி மருந்துகளை மந்திரத்தால் நடக்கச் செய்துவிடுவார் அவர் என்றார்கள்.

அவருடைய அதிமுக்கியமான வேலையே இதுபோல் சந்தைக்கு வரும் புதிய மருந்து நிறுவனங்களைக் கண்டறிந்து மிரட்டிப் பணம் பறிப்பதுதான். பல இடங்களுக்கு வரச் சொல்லி அலைக்கழித்து விட்டு இறுதியாக அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துப் போனார். மொபைல் போன்களை எல்லாம் பறித்துவிட்டு, ரகசிய கேமரா இருக்கிறதா என உடைகளைத் தடவி சோதனை செய்துவிட்டு உள்ளே அழைத்துப் போனார். முடி வளர்கிற எண்ணெயின் பங்குதாரராக உள்ளே போய் அமர்ந்து விட்டேன்.

போலியான ஆந்திர முகவரியிடம், “ஐஞ்சு லட்ச ரூபாய் கொடுத்திட்டு என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள். ஆபீசர்களுக்கு நான் பிரித்துக் கொடுத்து விடுவேன். தொந்தரவு வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்...” என்றார். வெளியே வந்தபோது, “இந்தத் தொகை உங்களுக்குக் கட்டுப்படியாகுமா?” எனக் கேட்டேன். “தலைமுடி வளரும்னு எதைக் கொடுத்தாலும் வாங்கித் தேய்த்துக்கொள்ள ஆட்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள். இந்தக் காசு என்னுடைய ஒருமாத வியாபாரம். இவரிடம் கேட்ட தொகையைக் கொடுத்து விட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்!” என்றார்.

உங்களுடைய பொருளின் தயாரிப்புச் செலவு எவ்வளவு என்றபோது, “விலையில் ஐந்து சதவீதம்!” என முகப் பழக்கத்தின் பொருட்டு நேர்மையாக ஒப்புக் கொண்டார். மதுரையைச் சேர்ந்த இன்னொரு மருந்துத் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொள்முதல் செய்கிறவர்கள் போலப் போய் விசாரித்தோம். அந்தக் காலத்தில் சின்ன வயதில் டவுன் ஹால் ரோட்டில் எதை எடுத்தாலும் இன்னொன்று இலவசம் என்று விற்பதைப் பார்த்திருக்கிறேன். அதைப்போலத்தான் அந்த நிறுவனம்,  நூறு மருந்து பாட்டில்களை வாங்கினால் நூறு பாட்டில்கள் இலவசம் என்றது! கூடவே அயர்ன் பாக்ஸ்,  இல்லாவிட்டால் மின்விசிறி இலவசம் என்றது!

உயிர் காக்கும் மருந்துகளை இப்படியா கூவிக் கூவி விற்பார்கள்? அந்த நிறுவனத்தை நோட்டம் விட்டபோது கள்ளச்சாராயம் காய்ச்சுவதைப் போல ஈயச்சட்டி பானைகளில் சித்த மருந்துகளைக் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். பாரம்பரியம் என்பதற்கு மதிப்பளித்து சுட்ட மண்பானைகளிலாவது காய்ச்சியிருக்கலாம்! இதுதான் இந்தத் துறையில் எழுபது சதவீதம் நடக்கிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருதடவை மருந்து ஆய்வாளர் தனது பகுதியில் இருக்கும் மருந்துகளை எடுத்து, டிரக் அண்ட் காஸ்மெட்டிக் ஆக்ட்படி சாம்பிளுக்கு அனுப்பி பரிசோதித்து அறிக்கை தரவேண்டும்.

அதனடிப்படையிலேயே மருந்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும். அப்படியே மருந்தை சாம்பிளுக்கு அனுப்பினாலும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு விட்டுவிடுவதும் நடக்கிறது. அதிகம் போனால் ஒருசில மருந்துகளை மட்டும் தரம் சரியில்லை என்று சொல்லி ஒரு ஆறுமாதம் மட்டும் சஸ்பெண்ட் செய்து வைத்திருப்பார்கள். அந்தக் காலத்தில் கொடுப்பதைக் கொடுத்து விட்டுத் தங்கு தடையில்லாமல் உற்பத்தி பண்ணி விற்றுக் கொள்ளலாம். ஆறு மாதத்திற்குப் பிறகு சத்தமில்லாமல் மீண்டும் அவற்றிற்கு லைசென்ஸ் தந்து விடுவார்கள்.

மாவட்ட மருந்து ஆய்வாளர்களும் மெடிக்கல் கவுன்சிலும் சித்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் நினைத்தால் தமிழகத்தில் நீக்கமற உலவும் போலிச் சித்தர்களை ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்தி விட முடியும். நிறைந்து கிடக்கும் கற்களைப் பொறுக்கி விட்டு அசலான தூய்மையான அரிசியை மக்களுக்கு வழங்கி விட முடியும். உள்ளே நுழைந்து வெளியே வரும்போதுதான் இது ஒரு மிகப்பெரிய மாஃபியா வலைப்பின்னல் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அது எப்படிப் பின்னிப் படர்ந்திருக்கிறது தெரியுமா?

(போலிகளை துகிலுரிப்போம்)

- சரவணன் சந்திரன்