காதலிக்கப்படுதல் இனிது“வாவ். ரொம்ப அழகா இருக்கு...”பரவசமாகக்  கூவினாள் சுபா. இரண்டு புறமும் குடை போல் கவிந்த மரங்கள் அடர்த்தியாக சாலையை மூடியிருந்தன. உதிர்ந்து கிடந்தன மஞ்சள் நிறப் பூக்கள். லேசான மழைமூட்டம் போட்டிருந்த வானத்தில் அவ்வப்போது ஒரு வெள்ளி இழை மின்னி மறைந்தது. சாலையை ஒட்டியிருந்த வறண்ட நிலத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியது தெவிட்டாத காட்சியாக இருந்தது. தன்னை மறந்து சுற்றுப்புறத்தை ரசித்தபடி வந்த அவளைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தான் கேசவன். அவ்வப்போது அவளைத் திரும்பிப் பார்த்தபடி கார் ஓட்டினாலும் பாதையில் கவனம் இருந்தது.

இன்னும் அரைமணி நேரத்தில் கோவை போய்விடலாம். “இப்போ இது அவசியமா? போகத்தான் வேண்டுமா?” சுபாவின் அப்பா அவனிடம் கேட்கக் கூடச் செய்தார். போகத்தான் வேண்டும். பின்னாடி அவள் மனதில் ஒரு குறை வந்துவிடக் கூடாது. ஏக்கம், வேதனை என்று வாழ்வை வலி மிகுந்ததாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் கேசவன் உறுதியாக இருந்தான். அவள் முகத்தில் மலர்ச்சி வர வேண்டும். அதுதான் அவனின் குறிக்கோள். இப்போதுதான் சுபா தன் வலிகளை மறந்திருக்கிறாள். புண் ஆறிவிட்டதா என்று தெரியாது.

ஆனாலும் மறந்திருக்கிறாள் என்று தெரியும். அதை ஏன் குத்திக் கிளற வேண்டும்? ஒரு புயல் அடித்து ஓய்ந்திருக்கிறது. அது அப்படியே கரை கடக்கட்டுமே என்றுதான் சுபாவின் அப்பாவும் நினைத்தார். மகளை அவனுடன் அனுப்பியும் வைத்தார். சுபா சம்மதித்தால் அவன்தானே அவளுக்கு தாலி கட்டப் போகிறான்? அவருடைய நண்பரின் பையன்தான் கேசவன். படித்துவிட்டு பெரிய டெக்ஸ்டைல் மில் ஒன்றில் நல்ல வேலை. கைநிறைய சம்பளம். ஒரே பையன். தெரிந்த குடும்பம் என்று நிச்சயம் செய்யலாமா என்று சுபாவிடம் கேட்ட மறுநாள் அவள் தன் காதலன் ஜெகனுடன் ஓடிப்போனாள்.

கல்லூரிக் காதல். இருவருமே கல்லூரியில் கடைசி வருஷம். படிப்பு, எதிர்காலம் என்று எல்லாவற்றையும் மறக்கடித்து காதல் அவர்களை ஓடிப் போக வைத்தது. ஆத்திரம், வெறி, என் பொண்ணே இல்லை என்று கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து அவர் ஓய்ந்த வேளை சுபா திரும்பி வந்தாள். படிப்பு முடியும் முன், நல்ல வேலையில் கால் ஊன்றும் முன், ஓடிப்போய்... கொண்டு போன நகை, பணம் தீர்ந்ததும், காதல் கசந்து விட்டது. வாழ்வை எதிர் கொள்ள முடியாமல் ஜெகன் அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டான். அவ்வளவுதான் காதல். இதுதான் காதல்.

சென்னையில் தங்கியிருந்த வீட்டு வாடகை இரண்டு மாதம் பாக்கி. சாப்பாடு இல்லாமல் தவித்த சுபா அப்பாவுக்குப் போன் செய்து கதற, கேசவனுடன்தான் போய் அவளை அழைத்து வந்தார். உருக்குலைந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவரது கோபம் எல்லாம் போய் விட்டது. அம்மா மகளைப் பார்த்து உருகிப் போனாள். மீண்டும் அவர்கள் நடுவில் குழந்தையாகிப் போனாள் சுபா. அன்பில் நிறைந்த மனது மகளின் எல்லாத் தவறுகளையும் மன்னித்தது. ஒரே மகளை எத்தனை நாள் வெறுக்க முடியும்?

இந்த மூன்று மாதமாக வாழ்க்கை அவளைச் சுற்றியே நகர்கிறது. சின்னக் குழந்தையின் சிரிப்பாய், அவள் முகம் மலர்வது மட்டுமே கருத்தில் இருந்தாலும், அவளுக்கு வேறு கல்யாணம் செய்ய வேண்டும் என்று வீட்டில் நினைக்கிறார்கள். அவளிடம் சொன்னபோது அழுகைதான் பதில். மனசு கம்பி கட்டிய வேலியாய் குத்தியது. யார் முகத்தையும் ஏறிடக் கூசியது. நெருப்பில் எரிந்து விடலாமா என்று கொந்தளித்தது. “அவளை வற்புறுத்த வேண்டாம்...” என்றான் கேசவன். “அவ சம்மதிச்சா பாக்கலாம்...”கேசவனுக்கு அவள் மனசுதான் முக்கியம்.

அவளை மனசில் ஆராதிப்பவன் அல்லவா அவன்! அதற்குள் இந்தச் செய்தி - ஜெகன் கார் விபத்தில் அடிபட்டு கால் எலும்பு உடைந்து கோவை மருத்துவமனையில் இருப்பதாக. கேசவன் சுபாவிடம் விஷயத்தைச் சொல்லவில்லை. அப்பாவிடம் சொன்னபோது அவர் தயங்கினார். “இப்போ கூட்டிட்டுப் போகணுமா? உறவை புதுப்பிக்கவா?”“விஷயம் தெரிஞ்சு சொல்லலைன்னு வருத்தம் ஆயிட்டா? காதலிச்ச மனசு, அவனுக்கு ஒரு கஷ்டம்னா பொறுக்காது. கூட்டிட்டுப் போறேன்...”அரை மனதாகச் சம்மதித்தார் அப்பா. அவன் கூடப் போக சுபா தயங்கினாள்.

ஆனால், அவள் அப்பா ‘‘அத்தை வீடு அங்க இருக்கு. ஒரு வாரம் இருந்துட்டு வா. வீட்டிலேயே இருந்தா மனசு கண்டதையும் நினைச்சு ஏங்கும். போயிட்டு வா. நான் அடுத்த வாரம் வந்து அழைச்சுகிட்டு வரேன். கேசவன் வேலையா கோவை போறார். உன்னைக் கொண்டு போய் விட்டுடுவார்...” என்றார். மீற முடியவில்லை. மலைப் பகுதி, பசுமையான சூழல் எல்லாமே மனதைப் பரவசப்படுத்தின. லேசாய் மழைத் தூறல். கார் கண்ணாடியை இறக்கிவிட்டு சாரல் முகத்தில் படும்படி அமர்ந்திருந்தாள்.

மெல்லிசாய் வழிந்து இறங்கும் இளையராஜாவின் பாடல்கள் என்று அவளின் அன்றைய தினம் இனிமையாக மாறி விட்டது. இசை, இலக்கியம் என்று ரசனையான மனசு அவளுக்கு. ஒத்த ரசனை என்பதால் ஜெகன் மீது ஈர்ப்பு. இது ஆத்மார்த்தமான காதல் இல்லை. கவர்ச்சி, காமம். அதனால்தான் கைக்காசு தீர்ந்து வாழ்வின் மறுபக்கம் தன் முகத்தைக் காட்டியதும் ஜெகன் பயந்து ஓடிவிட்டான். இதுவா காதல். அவளுக்கு ஒரு அவமானம், அசிங்கம் என்று எல்லாம் தந்த ஜெகனைப் பார்த்தால் அவளின் நிலை எப்படி இருக்கும்? மனசு ஒரு சமுத்திரம் போல்தான்.

மேலே அலைகள் புரண்டாலும், உள்ளுக்குள் ஆழத்தில் அமைதியாகத்தான் இருக்கும். காதலின் நேசமும் அப்படித்தான். அவன் மீதான காதல் இருக்கிறதா? ஹாஸ்பிட்டல் வந்துவிட்டது. இறங்கும்போது சுபா தயங்கினாள்.“இங்க எதுக்கு?”கேசவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். “சுபா, பார்க்கப் போறது ஜெகனை. ஒரு விபத்துல அவனுக்கு இடுப்புல நல்ல அடி. வலது காலை எடுத்துட்டாங்க. உன்னைப் பாக்க விரும்பறதா சொல்லி விட்டான். அதான் நான் உன்னைக் கூட்டிக் கிட்டு வந்தேன்...”சுபா பேசாமல் தலை குனிந்திருந்தாள்.

“வாழ்க்கைங்கறது பழி வாங்கல் இல்லை சுபா. அதுவும் ஒரு அழகான ரசனை...” சுபா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அமைதியும், எதிர்பார்ப்பும் நிறைந்த அவன் முகத்தைக் கண்டு காரை விட்டு இறங்கினாள். ஜெகன் பொது வார்டுக்கு வந்திருந்தான். அவன் அம்மா சுபாவைப் பார்த்ததும் ஓவென்று கத்தி அழுதாள். “உனக்கு  செஞ்ச துரோகம்...’’ என்று புலம்பினாள். “வலது காலை எடுத்துட்டாங்க. செயற்கை கால் வைக்க ரெண்டு லட்சம் ஆகும்கறாங்க. நாங்க கூலி வேலை செய்யறவங்க. அவ்வளவு காசுக்கு எங்க போவோம்?” என்று கதறினாள்.

“உள்ள போய் ஜெகனைப் பாத்துட்டு வா...” மெல்ல கிசுகிசுத்தான் கேசவன். தயங்கினாலும் உள்ளே சென்றாள் சுபா. கேசவன் வெளியில் வந்து கார் அருகில் நின்றான். மனசு திருப்தியாக இருந்தது. மெல்லிய மயிலிறகால் தடவியது போல். அன்பும், கருணையும், மன்னிப்புமே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. சுபா என்ன செய்யப் போகிறாள்? அவளுக்கு ஒரு சந்தோஷம் என்றால் எதுவும் செய்யத் தயார். எதிர்பார்ப்புடன் அமைதியாக நின்றிருந்தான். சுபா வெளியில் வரும்போது முகம் அமைதியாக இருந்தது. மௌனமாக வந்து காரில் அமர்ந்தாள்.

“போலாமா?” தயக்கத்துடன் கேட்டான்.“ம். போலாம். ஒரு சின்ன உதவி...”“சொல்லு சுபா...” எது காதல்னு எனக்குப் புரியலை. அன்னைக்கு என்னை நிர்க்கதியா நிக்க வச்சிட்டு ஓடிப் போனான். இன்னிக்கு நீதான் என் உயிர், உன்னை மறக்க முடியலைன்னு சொல்றான். எது உண்மை? காரிய சாதகத்துக்காக வருவதா காதல்? ஆனா, மனிதர்களைப் புரிஞ்சுக்க வச்சிருக்கான். அதுக்கு நான் அவனுக்கு நன்றி சொல்லணும்...”கேசவன் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தான்.“அவனுக்கு வைத்திய உதவி செய்யணும். அப்பாகிட்ட சொல்லி...”செஞ்சிடலாம்...”

“என் முகத்தையும், உடம்பையும் பார்த்து காதலிக்கறவனை விட என் உள்ளத்துக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கணும்னு நினைக்கறவர் உசத்தி இல்லையா? காதலிக்கறதை விட, காதலிக்கப்படுவது சுகம்...”அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தது. புன்னகைத்தான். புன்னகைத்தாள். புன்னகைத்தார்கள்.‘கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லணும்...’ மனதுக்குள் கேசவன் சொல்லிக் கொண்டான். வண்டி உற்சாகமாகக் கிளம்பியது.                                    

சோளத்தில் சாதனை!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நூலகத்தில் பல்குத்தும் குச்சியில் 241 உதிர்த்த சோளங்களை மூன்றே நிமிடத்தில் குத்தித் தின்று கின்னஸ் சாதனை செய்திருக்கிறார் டேவிட் ரஷ். முன்னரே 83 கின்னஸ் சாதனைகளைச் செய்துள்ள ரஷ், அறிவியல் படிப்புகளை பிரசாரம் செய்ய இச்சாதனையைச் செய்துள்ளார்.

ஆமைக்கு வலை!

குவாத்தமாலாவில் ஜாலியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது கேரி சென் நண்பர்கள் குழு. அப்போது நீரில் பிளாஸ்டிக் பை அசைவதைப் பார்த்து அருகில் சென்றபோது ஆமை பிளாஸ்டிக் பையில் சிக்கி உயிருக்குப் போராடுவதைப் பார்த்தனர். உடனே சைட்டிஷ் உணவாக்கும் நோக்கமின்றி அதனை விடுவித்த கேரிசென்னின் சூழல் நேய வீடியோ இணையத்தில் பாராட்டுக்களோடு பகிரப்பட்டு வருகிறது.

ஹைவேயில் பாட்டுக்குப் பாட்டு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாகச ஓட்டுநர், கார் ஓட்டிச்செல்லும்போது ட்ரம்பெட் வாசித்து சக பயணிகளை பீதியூட்டியுள்ளார். குயின்லாந்தின் எம்1 நெடுஞ்சாலையில் பயணி ஒருவர் எடுத்த வீடியோவில், எழுபது கி.மீ. வேகத்தில் பாயும் காரில் ஓட்டுநர் ரசித்து ட்ரம்பெட் வாசிப்பது பதிவாகியுள்ளது. சாலைவிபத்துக்கு இதுபோன்ற ஆட்கள்தான் காரணம் என அந்த வீடியோ உலகெங்கும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

- ஜி.ஏ.பிரபா