ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 29

மனதின் தீர்மானத்தை உடல் எதிரொலிக்கிறதா அல்லது உடல் வெளிப்படுத்தும் உணர்ச்சியை உள்ளம் பிரதிபலிக்கிறதா..? கல்தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டே மனிதர்களை அலைக்கழிக்கும் இக்கேள்வியின் பிடியில்தான் அன்று கரிகாலனும் சிக்கியிருந்தான். இந்த வினாவுக்கு விடை தேடிப் புறப்பட்டவர்கள் ஒன்று ஞானியாவார்கள் அல்லது பித்துப் பிடித்துத் திரிவார்கள். இவ்விரண்டில் எந்த நிலைக்குச் செல்வது என்று தெரியாமல் கரிகாலன் ஊசலாடிக் கொண்டிருந்தான். காரணம், சிவகாமி.

யாரைப் பற்றிய ரகசியத்தை அறிய கடிகையின் நிலவறையிலிருந்து சுவடிக் கட்டைக் கைப்பற்றிக் கொண்டு தன்னைத் துரத்துபவர்களிடம் பிடிபடாமல் ஓடி வருகிறானோ அந்தப் பெண்ணே அவனைக் காப்பாற்ற கையைப் பிடித்து இழுக்கிறாள்! வாழ்க்கையை விட இலக்கியங்களும் காவியங்களும் சுவை மிகுந்ததில்லை என்று சும்மாவா பெரியவர்கள் சொல்கிறார்கள்..? பிரமை தட்டிய கண்களுடன் தன்னை ஏறிட்டவனைப் பார்த்து கண்களால் சிரித்த சிவகாமியின் பார்வை ஒரு கணம் அவன் இடுப்பில் பதிந்தது.

அது உண்மையா என்று அவன் தெளிவதற்குள் அவனை இழுத்துக் கொண்டு அந்த மாளிகையை ஒட்டி இருந்த நந்தவனத்துக்குள் நுழைந்தாள். ‘‘சிவகாமி...’’ கரிகாலன் பேச முற்பட்டான்.‘‘உஷ்... கொஞ்சம் பொறுங்கள்...’’ சொன்னவள் நந்தியாவட்டை செடிகளுக்குள் புகுந்தாள். புதர் போன்று அடர்த்தியில்லை. இடைவெளிகள் நன்றாகவே இருந்தன. மறைவிடம் மருந்துக்கும் இல்லை. துரத்தி வருபவர்கள் நந்தவனத்துக்குள் நுழைந்தால் சுலபமாகப் பிடித்து விடுவார்கள்.

அப்படியிருக்க, இதற்குள் எதற்காகக் குனிந்து குனிந்து, அதுவும் தன் கரங்களைப் பிடித்தபடி செல்கிறாள்..? இந்த மாளிகைக்கு சொந்தக்காரரோ அவரது குடும்பத்தினரோ அல்லது அவர்களது பாதுகாவலர்களோ எட்டிப் பார்த்தால் கூட தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமே... ‘யார் நீங்கள்..? இங்கென்ன செய்கிறீர்கள்..?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? உடை வேறு வணிகருடையதாக இருக்கிறது. இல்லையெனில் பூப்பறிக்க வந்ததாகச் சொல்லலாம்..!‘‘மறைவதற்கு இங்கு இடம் ஏதுமில்லை...’’ அவள் காதருகில் கரிகாலன் கிசுகிசுத்தான்.

சிவகாமி பதிலேதும் கூறவில்லை. மாறாக, அக்கம்பக்கம் பார்த்தபடியே கரிகாலனின் கரங்களைப் பற்றியபடி நந்தியாவட்டை செடிகளைக் கடந்து அங்கிருந்த மாமரங்களுக்குள் நுழைந்தாள். ஓரளவு அடர்த்தி சூழ ஆரம்பித்தது. நிழல்களில் பதுங்கியபடியே நடுவில் இருந்த மாமரத்தை அடைந்தவள் கரிகாலனின் கரங்களை விடுவித்தாள். கண்ணால் அவனிடம் ஜாடை காட்டிவிட்டு சட்டென அம்மரத்தின் மீது ஏறினாள். தரையிலிருந்து ஆறடி உயரத்தில் இருந்த கிளைகளில் அமர்ந்தவள் கைகளால் அவனையும் ஏறச் சொன்னாள்.

கட்டுப்பட்டு ஏறியவன் தன் பின்னால் அமர்வதற்கு இடம் கொடுக்கும் விதமாக முன்னோக்கி நகர்ந்தாள். அதை ஏற்று இயல்பாக அமர்ந்தவன் எப்படிப்பட்ட தவற்றை, தான் செய்திருக்கிறோம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்துவிட்டது! கிளைகள் அழுத்தியது போக எஞ்சியிருந்த அவளது இடைப்பகுதி அவனது இடுப்பை உரசியது! மின்னலால் தாக்கப்பட்டவன் நிலைகுலைந்து பின்னால் நகர முற்பட்டான்! கிளைகளின் பிடிமானம் அதற்கு இடம் அளிக்கவில்லை! சங்கடத்துடன் அசைந்தவனுக்கு மேலும் இம்சையை ஏற்படுத்தும் விதமாக அவன் மார்பில் தன் முதுகை சிவகாமி சாய்த்தாள்!

நிலைகுலைந்து போனான்! உணர்ச்சிகள் ஊசி முனையில் தாண்டவமாடின. அவனை விட சிவகாமி உயரம் குறைந்தவள் என்பதாலும் அவன் மீது ஏறக்குறைய அவள் சாய்ந்துவிட்டதாலும் அவளது முன்னெழுச்சிகள் அவன் பார்வையில் பட்டன. ஊசியாகக் குத்தின. சிவகாமியின் நிலையும் வார்த்தைகளுக்குள் சிக்காமல் அலைகளில் தடுமாறும் படகானது. தன்னை மறந்த நிலையில் பெருமூச்சு விட்டாள். இதனால் கச்சையை மீறி வெளிப்பட்ட பிறைகள் அதிகரிப்பதும் குறைவதுமாக மாயாஜாலம் நிகழ்த்தின.

அதிர்ந்த உடல் கரிகாலனைக் கீழே விழவைக்க முற்பட்டது. சமாளித்துக்கொள்ள தன் இரு கரங்களாலும் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்தான். சிவகாமியின் இடுப்பில் இருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்தன. தன்னை மறந்து தன் இடக்கையை உயர்த்தி அவன் கேசத்தை கொத்தாகப் பிடித்தாள். கணங்கள் யுகங்களாயின. கரிகாலனின் விரல்கள் அவள் இடுப்பைச் சுற்றிலும் கோலமிட்டன. தடுக்கும் விதமாக ‘‘உம்...’’ கொட்டி அசைந்தாள்.‘‘எதற்காக அசைகிறாய் சிவகாமி..? பூச்சி ஏதாவது கடிக்கிறதா..?’’ என்றபடி தன் கரங்களை அவள் பின்னெழுச்சி பக்கமாக நகர்த்தினான்.

‘‘சும்மா இருங்கள்...’’ கொஞ்சியபடி அவன் கையைத் தட்டிவிட்டாள்.‘‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை...’’ என்றபடி அவள் கழுத்தில் தன் முகத்தைப் பதித்தான். வெளியேறிய அவன் சுவாசம் அவள் சருமத்தைச் சுட்டது! வெந்து தணிந்தவள் நிலைகொள்ளாமல் அசைந்தாள். அசைவில் அவள் இடுப்புப் பகுதி அவன் இடுப்பின் முடிச்சிலிருந்த ஓலைச் சுவடிகளின் மேல் பட்டது! ‘‘மறைவான இடம் கிடைத்தால் போதுமே... மடத்தைப் பிடித்து விடுவீர்களே..!’’ உருட்டிவிட்ட நவரத்தினங்களாகச் சிரித்தாள்.  

அந்தப் புன்னகை கரிகாலனைச் சுண்டிவிட்டது. மறைத்திருந்த மாயத்திரையும் அகன்றது. காஞ்சியை அறியாதவள் அல்லவா இவள்..? அப்படித்தானே பல்லவர்களின் புரவிப்படைத் தளபதியான வல்லபன் தன்னிடம் மல்லைக் கடற்கரையில் கூறினான்..? இவளானால் இந்த மாநகரத்தையே நன்கு அறிந்தவள் போல் பேசுகிறாளே..? எந்த சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அளவுக்கு மீறி குழைந்தான். ‘‘இது மறைவான இடமா சிவகாமி..?’’‘‘இதுதான் மறைவான இடம்!’’ சிவகாமி கண்களைச் சிமிட்டினாள்.

‘‘அப்படியா..?’’‘‘ஆம். காஞ்சியின் பெருவணிகர் மாளிகைக்குள் நுழையும் தைரியம் யாருக்கு இருக்கிறது..?’’‘‘இது பெருவணிகரின் மாளிகையா..?’’‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்..? காஞ்சியை அறிந்த உங்களுக்குத் தெரியாதா..?’’‘‘என்னைவிட நீ அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாய் சிவகாமி...’’‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை. சத்திரத்தில்தான் இப்படிச்  சொல்லி வழிகாட்டி அனுப்பினார்கள்!’’ ‘‘யார்..?’’‘‘பெயரெல்லாம் கூறவில்லை. கடிகையில் படிக்கும் மாணவன் என்று சொன்னால் போதும் என்றார். பார்ப்பதற்கு பாலகன் போல் இருந்தார். உங்கள் நண்பராமே..!’’

கரிகாலன் முழுமையாக சுயநினைவுக்கு வந்தான். ‘‘நடந்ததைச் சொல்...’’‘‘நீங்கள் கட்டளையிட்டபடி சத்திரத்தில் பணிப்பெண் போல் நடமாடினேன்...’’‘‘ம்...’’‘‘ஒரு நாழிகைக்கு முன் அந்த பாலகன் வந்தான்...’’‘‘ம்...’’‘‘நீங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், பலர் உங்களைத் துரத்துவதாகவும் சொன்னான்...’’‘‘ம்...’’‘‘என்ன ‘ம்?’... பதறிவிட்டேன் தெரியுமா..? என் நிலையைப் பார்த்து அந்த பாலகன் சிரித்தான்! அவமானத்தில் அப்படியே கூனிக்குறுகி விட்டேன்!’’‘‘...’’‘‘உங்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கேட்டேன்.

அந்த பாலகன்தான் இந்த வணிகர் வீதிக்குச் செல்லும் வழியைச் சொல்லி, இந்தப் பக்கமாகத்தான் நீங்கள் வருவீர்கள் என்றும், உங்களை இந்த மாளிகையின் நந்தவனத்துக்குள் இருக்கும் மாமரங்கள் பக்கமாக அழைத்து வரும்படியும் சொன்னான்...’’‘‘அவன் சொன்னால் அப்படியே கேட்டு விடுவாயா..? சந்தேகப்பட மாட்டாயா..?’’‘‘எதற்காக ஐயம் கொள்ள வேண்டும்..? பால் வடியும் முகம் கொண்ட பாலகன் ஏன் பொய் சொல்ல வேண்டும்..? தவிர...’’‘‘தவிர..?’’‘‘நான் வந்ததால்தானே உங்களைக் காப்பாற்ற முடிந்தது..?

அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானே!’’ கரிகாலன் மவுனம் சாதித்தான்.‘‘ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்..?’’‘‘நினைத்துப் பார்க்கிறேன்... பெருமையாக இருக்கிறது...’’‘‘உங்களை நான் காப்பாற்றியதுதானே..?’’‘‘இல்லை, அவமதித்ததற்கு!’’அதிர்ந்து போய் தன் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள். ‘‘என்ன சொல்கிறீர்கள்..? உங்களை நான் அவமதித்தேனா..?’’‘‘ஆம். இல்லையெனில் என்னைக் காப்பாற்ற வந்திருப்பாயா..’’‘‘வந்தது தவறா..?’’‘‘ஆம்! என்னால் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருந்திருக்க வேண்டும்!’’

‘‘அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா..?’’‘‘என் மீதுதானே... இருக்கிறது!’’‘‘நான் கேட்க வந்தது வேறு...’’‘‘என்ன..?’’‘‘உங்களை நான் நம்பியிருக்க வேண்டும் என்கிறீர்கள்...’’‘‘ஆம்...’’‘‘அதாவது இத்தனை நாட்களாக நாம் பழகியதை வைத்து...’’‘‘ம்...’’‘‘இதையே நானும் கேட்கலாம் அல்லவா..?’’கரிகாலன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை உற்றுப் பார்த்தான். ‘‘என்ன சொல்கிறாய்..?’’‘‘என்னை...’’ தன் மார்பில் கை வைத்தாள். ‘‘நீங்கள் நம்பியிருக்க வேண்டுமல்லவா..?’’‘‘ந..ம்..ப..வி..ல்..லை... என்கிறாயா..?’’

‘‘இல்லாவிட்டால் இதை எதற்கு கைப்பற்றி தலைதெறிக்க ஓடி வந்தீர்கள்..?’’ என்றபடி தன் கைகளைப் பின்னால் கொண்டு வந்து அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டுகளைத் தொட்டுக் காட்டினாள்! செய்வதறியாமல் கரிகாலன் திகைத்து நின்றான்.‘‘‘நீயாக சொல்லும்வரை நீ யாரென்று கேட்கவும் மாட்டேன்... ஆராயவும் மாட்டேன்...’ என்றெல்லாம் வனத்தில் கூறிவிட்டு இப்போது மட்டும் எதற்காக என் பூர்வீகத்தை அறிய சுவடிகளை நாடுகிறீர்கள்..? அப்படியானால் என் மீது நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்...?’

’ சிவகாமியின் குரல் தழுதழுத்தது. ‘‘சிவகாமி...’’‘‘போதும். என்ன இருந்தாலும் நீங்கள் ஆண்தானே..? அதனால்தான் சந்தேகக் குணம் உங்கள் நாடி நரம்புகளில் பாய்கிறது...’’‘‘அப்படியல்ல சிவகாமி...’’‘‘எதற்காக இல்லாத விளக்கத்தை விவரிக்க முற்படுகிறீர்கள்..? அதுதான் பளிங்கு போல் பளிச்சென்று தெரிகிறதே...’’ கண்களைத் துடைத்தபடி அவன் அணைப்பிலிருந்து விடுபட்டு தரையில் குதித்தாள். ‘‘அந்த பாலகன் சொன்னபோது கூட நான் நம்பவில்லை. ஆனால்... ஆனால்... உங்கள் இடுப்பின் முடிச்சுக்குள் சுவடிக் கட்டைப் பார்த்ததும்...’’ பேச முடியாமல் முகம் பொத்தி அழுதாள்.

பதறிய கரிகாலன் கிளையிலிருந்து கீழே குதித்து அநிச்சையாக அவளை அணைத்தான். ‘‘அப்படியல்ல சிவகாமி...’’‘‘அப்படியோ இப்படியோ எப்படியோ... என்மீது உங்களுக்கு ஐயம் இருக்கிறது. அது மட்டும் நிச்சயம்...’’ அவன் கரங்களை விலக்கினாள். ‘‘வாருங்கள்... காஞ்சிக்கு உங்களை வரச் சொன்ன புலவர் தண்டியைச் சந்திக்கலாம்! அவரைப் பார்த்துவிட்டு உடனே நாம் வெளியேற வேண்டும். பல்லவ இளவலைச் சந்திக்க வேண்டும்...’’ பதிலை எதிர்பார்க்காமல் மாளிகையை நோக்கி நடந்தாள்.

‘‘இந்த மாளிகைக்குள்ளா புலவர் இருக்கிறார்..?’’‘‘அப்படித்தான் அந்த பாலகன் சொன்னான்...’’ என்றபடி திரும்பினாள். ‘‘அதுவும் பாதுகாப்பாக இருக்கிறதல்லவா..?’’‘‘எது..?’’‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் உங்களிடம் கொடுத்த முத்திரை மோதிரம்!’’ கரிகாலனின் கண்கள் சுருங்கின. இமைக்கும் பொழுதில் அதை உள்வாங்கிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.‘‘அந்த பாலகன்தான் சொன்னான். அவனுக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது...’’ சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்தாள்.

(தொடரும்)

- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்