உயிர் பறிக்கும் காற்று மாசு…ரெட் அலெர்ட் ரிப்போர்ட்!



சமூக வளர்ச்சி என்ற பெயரில் கடந்த இரு நூற்றாண்டுகளாக நாம் கபளீகரம் செய்துவரும் விஷயங்களில் சுற்றுச்சூழலும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால் வேறு எதனை விடவும் நாம் மோசமாகச் சீரழித்துவைத்திருப்பது சுற்றுச்சூழலையும் இயற்கையையும்தான்!
இதில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற பாகுபாடே இல்லை. எல்லோருமே அவரவர் பங்குக்கு ஆளுக்குக் கொஞ்சம் கெடுத்துவைத்திருக்கிறோம்.

உலகம் முழுதும் சுற்றுச் சூழலைச் சீரழிக்கும் நாடுகள் பட்டியலில் நமக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. குறிப்பாக, கார்பன் எனப்படும் கரியை உமிழும் நாடுகள் பட்டியலில் மிக வேகமாக நாமும் சீனாவும் முதலிடத்துக்குப் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரே ஆறுதல், நாம் தொட முடியாத வேகத்தில் சீனா இதில் நான்கு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான்.

சில வாரங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபையின் சீதோஷ்ண நிலை மாறுபாடு தொடர்பான மாநாடு போலந்தில் நடைபெற்றது. சுமார் நூற்று தொண்ணூறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் கார்பன் மாசு தொடர்பான கவலை தரும் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா, தெற்கு கொரியா, கனடா ஆகிய நாடுகள் இந்தக் காற்று மாசில் டாப் டென் இடங்கள் வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் முப்பத்தேழு பில்லியன் டன் கார்பன் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இதில் அதிகபட்சமாக சீனா மொத்த கார்பன் மாசில் இருபத்தேழு சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.

இது இந்த ஆண்டு மேலும் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கும் என்று வேறு அச்சுறுத்துகிறார்கள். உலக கார்பன் மாசில் பதினைந்து சதவீதத்தை பெருக்கித்தள்ளும் அமெரிக்காவில் இது இன்னமும் இரண்டரை சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். உலக கார்பன் மாசில் ஏழு சதவீதத்தை உற்பத்தி செய்து மூன்றாம் இடத்தை வகிக்கும் நாமோ 6.3 சதவீதம் வளர்ச்சியோடு அமெரிக்காவை முந்தத் துடித்துகொண்டிருக்கிறோம்.

கார்பன் துகள்கள், சிமெண்ட் மாசு, எண்ணெய்ப் பிசுக்குகள், மரத்தூள்கள், பலவிதமான வாயுக்கள் ஆகிய பல விஷயங்கள் சேர்ந்ததே காற்று மாசு.
இதில், நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, கந்தக டை ஆக்சைடு, பி.எம்.2.5, பி.எம்.10 ஆகிய பல்வேறு நுண்ணிய பொருட்கள் இருக்கும். பி.எம் என்பது Particulate matter எனும் மிக நுண்ணிய துகள்.

ஒரு பி.எம்.2.5 துகள் என்பது 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதற்கும் குறைவான அளவுடையது. நம் தலைமுடியின் நுனி என்பது நூறு மைக்ரோ மீட்டர் விட்டமுடையது. இதில், சுமார் நாற்பது பி.எம்.2.5 துகள்களை வைக்க முடியும். சர்வதேச காற்று மாசு தர நிர்ணயத்தின்படி இந்தத் துகள்கள் ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு உள்ளன என்பதைப் பொறுத்து காற்று மாசு தீர்மானிக்கபடுகிறது.

பொதுவாக, ஐம்பது மைக்ரோ கிராம்  துகள்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதம். இதுவே ஆரோக்கியமும்கூட. 50 முதல் நூறு வரை இருந்தால் திருப்தியான விகிதம். நூறு முதல் இருநூறு வரை இருப்பது கொஞ்சம் அதிகமான விகிதம். இருநூறு முதல் முன்னூறு வரை இருப்பது மோசமான நிலை. முன்னூறு முதல் நானூறு வரை இருப்பது மிகவும் மோசமான நிலை. நானூறுக்கு மேல் இருந்தால் அது ஆபத்தான மனிதர் வாழத் தகுதியற்ற காற்று மாசு.

இந்த அளவுகோலின்படி இன்று இந்தியாவின் அத்தனை முக்கியமான பெருநகரங்களும் காற்று மாசு நிறைந்தவையாக அறியப்படுகின்றன. ஒருகாலத்தில் தொழிற்சாலைகளில் வெளிப்படும் புகை மட்டுமே காற்று மாசுக்குக் காராணமாக இருந்தது. இன்று அதிகரித்துவரும் வாகனப் புகை இன்னொரு முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்கள், குண்டு குழியுமான பராமரிப்பு இல்லாத சாலைகள் ஆகியவையும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம்.

இந்தியாவில் வீடுகளுமேகூட காற்று மாசை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவே உள்ளன. நம் நாட்டில் இன்னமும் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் பேர் சமையலுக்கு விறகு அடுப்பையும், சாணத்தையுமே நெருப்புக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் உருவாகும் கார்பன் காற்றைக் கற்
பழிப்பதில் கணிசமான சேதாரம் ஏற்படுகிறது.

நகரங்களில் ஓரளவு இத்தகைய அடுப்புப் புகை இல்லை என்றாலும் ஆங்காங்கே பெரிய பெரிய குப்பைக்கூளங்களை எரிய விடுவதும் போகிக்குக் கொளுத்தப்படும் டயர்களும், தீபாவளிக்குக் கொளுத்தும் பட்டாசுகளும் கிராமங்களைவிட நகரங்களிலேயே காற்று மாசை அதிகமாக உருவாக்குகின்றன. அதிலும், தென்னிந்திய நகரங்கள் பட்டாசால் புகைமூட்டமாகவே மாறிவிடுகின்றன.

சமீபத்தில் உலக சுகதார நிறுவனம் வெளியிட்ட அதிகப்படியான காற்று மாசு நகரங்கள் பட்டியலில் பதினான்கு இந்திய நகரங்களை அது குறிப்பிட்டுள்ளது. இதில் கான்பூர்தான் முதலிடம் வகிக்கிறது. பரிதாபாத், காசி, கயா, தில்லி, பாட்னா, ஆக்ரா, முஜார்பர்பூர், நகர், குர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகிய மாநகரங்களும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தென்னிந்தியா இந்தப் பட்டியலில் இல்லை என ஆறுதல் அடைய முடியாது. ஒப்பீட்டளவில் அளவு குறைவு என்றாலும் சென்னை, கோவை, ஹைதராபாத், பெங்களூர், மைசூர், கொச்சின், திருவனந்தபுரம் ஆகிய மாநகரங்களும் இந்த காற்று மாசில் விதிவிலக்கில்லை. சென்னையில் அதிகபட்சமாக முன்னூற்று நாலுக்கு செல்லும் காற்று மாசின் சராசரி நூற்று ஒன்பதில் இருக்கிறது.

இது, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகம். கோவை, சேலம், மதுரை போன்ற பெரிய நகரங்களில் என்ன நிலவரம் என்பதற்கு போதுமான தகவல்கள் இல்லை என்றாலும் நிலைமை நாம் சந்தோஷப்படும்படியாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

சரி  இந்தக் காற்று மாசு என்ன செய்யும்? இதன் விளைவுகளை அறிந்தால் அதிர்ந்துவிடுவீர்கள். இந்தியாவில் நிகழும் மரணங்களில் சுமார் எட்டில் ஒன்று இந்தக் காற்று மாசால் ஏற்படும் நோய்களால் நிகழ்கிறது என்கிறது ஆய்வு ஒன்று. உலக அளவில் நிகழும் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் கருக்கலைப்புகளில் சுமார் பதினெட்டு சதவீதம் இந்தியாவிலேயே நிகழ்கின்றன. அப்படி இறக்கும் குழந்தைகளில் நான்கில் ஒருவர் இந்த காற்று மாசாலேயே இறக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், இந்திய மக்கள் நல நிறுவனம், இந்திய மருத்துவக் கணக்கீட்டு நிறுவனம் ஆகியவையுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து நடத்திய ஆய்வில்தான் இந்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் பன்னிரண்டரை லட்சம் பேர் காற்று மாசால் மரணமடைந்திருக்கிறார்கள். இதில் 6.7 லட்சம் பேர் வீட்டுக்கு வெளியே உற்பத்தியாகும் காற்று மாசாலும் மற்றவர்கள் வீட்டுக்கு உள்ளே உருவாகும் புகைகளாலும் மரணமடைந்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் நம் மக்கள் தொகையில் சுமார் எழுபத்து ஏழு சதவீதம் பேர் ஒப்புக்கொள்ளப்பட்ட சதவீதத்தைக் காட்டிலும் அதிகப்படியான காற்று மாசை சுவாசித்திருக்கிறார்கள்.

கிராமம் முதல் நகரம் வரை எந்த நிலமும் இதற்கு விதிவிலக்கில்லை.நாம் வாழும் இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல. நம்மைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் நம் எதிர்கால சந்ததிக்கும்கூட சொந்தமானது. இந்த உண்மையை நாம் மறக்கலாம். இயற்கை மறக்காது. அதற்கான விளைவை வெளிப்படுத்தியே தீரும். இந்த உண்மையை நாம் மறந்தால் நஷ்டம் என்றுமே நமக்குத்தான்.

இளங்கோ கிருஷ்ணன்