தலபுராணம்



பின்னி மில்லின் கதை   

‘‘அந்தக் காலத்துல இந்த மில்லுல வேலை பார்க்குறதே பெரிய கவுரவம். ஏன்னா, அரசு வேலையை விட இங்க அதிக சம்பளம். தவிர, தீபாவளிக்கு ரெண்டு போனஸ் தருவாங்க. பொங்கலுக்கு ஒரு போனஸ் கிடைக்கும். அப்ப, தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமா வர்றதும் போறதுமா வடசென்னைப் பகுதியே களைகட்டி இருக்கும். கிட்டத்தட்ட 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுத்த மில்லு இது. ஆனா, இன்னைக்கு?’’ வெறிச்சோடி கிடக்கும் பிரதான நுழைவு வாயிலைப் பார்த்தபடி வருத்தம் பொங்கச் சொல்கிறார் பின்னி மில்லின் அலுவலக ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளரான சிவராமன்.

பாரிஸ் கார்னரில் இருக்கும் பாரி அண்ட் கோவிற்கு சமகால நிறுவனமாக வளர்ந்ததே பின்னி அண்ட் கோ. ஆனால், தாமஸ் பாரி இந்தியா வருவதற்கு முன்பே பின்னி குடும்பத்தின் வேர் மெட்ராஸில் ஊடுருவிவிட்டது.ஆம். பின்னி குடும்பம் இந்தியாவுடன் சுமார் முந்நூறு ஆண்டுகள் தொடர்புடையது! ‘‘தாமஸ் பின்னி என்பவருக்கும் எலிசபெத் ரோஸரியோ என்ற பெண்ணுக்கும் இங்கே 1682ம் வருடம் பிப்ரவரி 2ம் தேதி திருமணம் நடந்ததாக மெட்ராஸ் வர்த்தக சபையின் நூற்றாண்டு கையேடு தெரிவிக்கிறது...’’ என ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலின் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் மெட்ராஸ் பிரசிடென்ஸி கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரான வெங்கடராம ஐயர்.

இதன்பிறகு, 1769ம் வருடம் சார்லஸ் பின்னி என்பவர் உரிமம் ஏதும் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தார். இதனால், இங்கிலாந்திற்கே அவர் திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு, 1778ம் வருடம் மெட்ராஸ் கவர்னராக நியமிக்கப்பட்ட தாமஸ் ரம்போல்ட் உடன் அவரின் செயலாளர் என்ற பெயரில் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார் சார்லஸ் பின்னி. இங்கே, 1779 முதல் 1782 வரை நவாப் வாலாஜாவின் செயலாளராகப் பணியாற்றினார்.

இவரின் குடும்ப உறவினர்களான அலெக்சாண்டர் பின்னி என்பவர் நவாப்புக்குச் சொந்தமான கப்பல் ஒன்றுக்கு காசாளராக இருந்தார். ஜார்ஜ் பின்னி என்பவர் கஞ்சம் என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார்.  இதன்பிறகு வந்த ஜான் பின்னி என்பவரே பின்னி நிறுவனம் ஆரம்பிக்கக் காரணமானவர். 1797ம் வருடம் மெட்ராஸ் வந்த இவர் நவாப்புக்கு மருத்துவராகப் பணிபுரிந்தார்.

நான்காண்டுகள் இந்தப் பணியில் இருந்தவர், 1801ம் வருடம் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே 1799ம் வருடம் டென்னிசன் என்பவருடன் இணைந்து பின்னி நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இதனால், ஆரம்பத்தில் இந்நிறுவனம் பின்னி அண்ட் டென்னிசன் என்றே அழைக்கப்பட்டது. வட்டிக்குக் கடன் தருதல், வங்கி, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு லாபம் ஈட்டியது இந்நிறுவனம்.

இன்று ஸ்பென்சர் அண்ட் ேகாவும், கன்னிமாரா ஹோட்டலும் இருக்கும் இடத்தில்தான் ஜான் பின்னியின் வீடு இருந்தது! இந்த வீட்டில்தான் 1820ம் வருடம் வரை அவர் வசித்தார். அதனால்தான் இன்றும் அந்த இடம் பின்னி சாலை என்றே அழைக்கப்படுகிறது.1804ம் வருடம் இந்நிறுவனம் ஆர்மேனியன் தெருவில் ஒரு வீட்டை 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. 1812ம் வருடம் பின்னி அண்ட் டென்னிசன் நிறுவனம் இந்த இடத்திற்கு நிறுவனத்தை மாற்றியது. 1814ம் வருடம் முதல் பின்னி அண்ட் கோ என்றானது.

இந்நேரம், அங்கே இடம் பெயர்ந்த ஆர்மேனிய வணிகர்களிடமிருந்து பின்னி நிறுவனம் பல இடங்களை வாங்கிப் போட்டது. பின்னர், பின்னி அண்ட் கோ பெரிதாக விரிவுபடுத்தப்பட்டது. இதுவே, பின்னி அண்ட் கோவின் தலைமை அலுவலகம். இப்போது இந்த அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டது.

ஜான் பின்னிக்குத் தாமஸ் பின்னி என்ற சகோதரர் இருந்தார். இவர், கல்கத்தாவில் பின்னி அண்ட் கோ என இதே பெயரில்நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரும் மெட்ராஸூக்கும் கல்கத்தாவிற்கும் சென்று வர ‘சக்சஸ் கேலே’, ‘சர்ப்பரைஸ் கேலே’ என்ற இரு கப்பல்கள் வைத்திருந்தனர். இந்தக் கப்பல்கள் நவாப்புக்குச் சொந்தமானவை. இப்படியாக பின்னி நிறுவனம் தனது பயணத்தைத் தொடர்ந்துவந்தது.மெட்ராஸில் இதைப்போல வர்த்தக நிறுவனங்கள் வந்ததே ஒழிய பெரிதாக ஒரு தொழிலும் வளரவில்லை. முன்னரே சொன்னபடி இங்கே நெசவுத் தொழில் மட்டும் பரவலாக இருந்தது.

பிறகு எப்படி பின்னி பஞ்சாலையை அமைத்தது? இதற்கு மெட்ராஸ் மாகாணத்தில் அபரிமிதமாகக் கிடைத்த பஞ்சும் ஒரு காரணம். 1861ம் வருடம் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அதுவரை இங்கிலாந்தின் லங்காஷயர் மாகாணத்தில் உள்ள பஞ்சாலைகளுக்கு அமெரிக்காவிலிருந்தே பஞ்சு கிடைத்து வந்தது. இந்தப் போரினால், லங்காஷயரின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது.

இதனால், பஞ்சின் விலை மூன்று மடங்காக உயர, பஞ்சு வியாபாரிகள் செல்வந்தர்களாயினர். ஆனால், சீக்கிரமே அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர லங்காஷயர் மீண்டும் தனது கவனத்தை அமெரிக்கப் பக்கம் திருப்பியது. இதனால், இந்திய வணிகர்களுக்கு அபரிமிதமான பஞ்சைக்கொண்டு இங்கேயே தொழிலில் முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது.

‘‘இப்படியாக பம்பாய், அகமதாபாத், நாக்பூர் போன்ற நகரங்களில் பருத்தித் துணி ஆலைகள் தொடங்கப்பட்டன. மெட்ராஸில் பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில், ‘சதர்ன் இந்தியா ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்’ என்ற நிறுவனத்தை 1874ம் வருடம் தொடங்கினார். யானைக் கவுனி பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் நிர்வாகத்தைப் பார்சி சமூகத்தினரும், தொழில்நுட்பப் பணிகளை ஐரோப்பியர்களும் பார்த்துக்கொண்டனர்.

சீனாவிற்கு நூல்களை ஏற்றுமதி செய்த இந்நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் 1892ம் வருடம் மூடப்பட்டது.
இந்நிறுவனத்தைத் தொடர்ந்து பின்னி அண்ட் கோ 1876ல் பக்கிங்ஹாம் மில் என்ற பெயரில் ஒரு பஞ்சு மில்லினைத் தொடங்க ஆயத்தமானது...’’ என்கிறார் ‘THE MAKING OF THE MADRAS WORKING CLASS’ நூலில் பேராசிரியர் டி.வீரராகவன்.

பின்னி அண்ட் கோ ஆரம்பிக்க இருந்த பக்கிங்ஹாம் மில்லின் நோக்கம் பஞ்சு, கம்பளி உள்ளிட்ட பொருட்களை நெய்து அதை சந்தையில் நேரடியாக விற்பனைக்குக் கொண்டு செல்வதே.ஆரம்பத்தில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இந்தத் தொகை ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் ஐந்நூறு பங்குகளாக சேர்க்கப்பட்டன. பின்னர், ஏழு லட்சம் ரூபாயாக முதலீடு உயர்ந்தது. இதைத் தொடர்ந்தே 1878ம் வருடம் பெரம்பூரில் பக்கிங்ஹாம் மில் செயல்பட ஆரம்பித்தது.

முதலில், 15 ஆயிரம் நூற்புக் கதிர்களுடன் (spindles) தொடங்கிய இந்த மில் பத்தாண்டுகளில் 35 ஆயிரம் நூற்புக் கதிர்கள் கொண்ட ஆலையானது. பின்னர், 1893ம் வருடம் முதல்முதலாக துணிகளை நெய்வதற்கு அறுநூறு விசைத்தறிகளை நிறுவியது பின்னி நிறுவனம்.இதற்கிடையே 1884ம் வருடம் பக்கிங்ஹாம் மில்லுக்கு அருகிலேயே ஓட்டேரி நுல்லா பகுதியில் துணை நிறுவனமாக இன்னொரு மில்லை ‘கர்நாடிக் மில்’ என்ற பெயரில் தொடங்கியது.

இந்த மில்லில் 16 ஆயிரத்து 500 நூற்புக் கதிர்களும், 129 தறிகளும் போடப்பட்டன. பின்னர், 491 தறிகளாக உயர்ந்தது. நூற்புக் கதிர்களும் 29 ஆயிரமாக அதிகரித்தது. இந்த இரண்டு மில்களிலும் அன்று ஆயிரத்து 200 தொழிலாளர்கள் பணியாற்றினர். இந்நேரம் இங்கே ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு துணி நிறுவனம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

ஏனெனில், பின்னிக்கு முன்பு 1875ம் வருடமே சூன்தர்தாஸ் மூல்ஜி என்பவர் ‘மெட்ராஸ் யுனெடட் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி லிமிடெட்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இதுவே ‘சூளை மில்’ என எல்லாராலும் அழைக்கப்பட்டது. இதில், அன்று 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர்.

1918ம் வருடம் பி.பி.வாடியா, திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்கள் சேர்ந்து பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடிக் மில்களில் மெட்ராஸ் லேபர் யூனியனைத் தொடங்கினர். இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சங்கம்! மட்டுமல்ல, இந்தச் சங்கத்தால்தான் தொழிற்சங்கச் சட்டமே இந்தியாவில் உருவானது.

பின்னர், 1920ம் வருடம் பின்னி நிறுவனத்தின் இரண்டு மில்களும் ஒன்றாக இணைந்து ‘பக்கிங்ஹாம் அண்ட் கர்நாடிக் மில்ஸ்’ என்றானது. சுருக்கமாக அன்று ‘பி.அண்ட்.சி. மில்ஸ்’. மூலமாக இங்கிருந்தே இந்திய ராணுவத்திற்கு முப்பது சதவீத துணிகள் அனுப்பப்பட்டன.அப்போது இரண்டு மில்களிலும் 8 ஆயிரத்து 976 பேர் பணியாற்றிவந்தனர். தவிர, பின்னி நிறுவனம் பெங்களூரில் காட்டன், உல்லன் மில் ஒன்றும், மீனம்பாக்கத்தில் எஞ்சினியரிங் யூனிட்டும், மெட்ராஸ் துறைமுகத்தில் ஷிப்பிங் யார்டும் நடத்தியது.

இதனுடன் சாயமிடலில் உலகின் மிகச் சிறந்த நிறுவனமாக விளங்கியது பின்னி அண்ட் கோ. ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளும் பின்னி வழங்கியது. அன்று வெளியூரிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்கு சிரமப்படுவார்கள் என்றெண்ணி தொழிலாளர்களுக்கு ஐந்து கோர்ட்டர்ஸ் கட்டிக் கொடுத்தது. ஒவ்வொரு கோர்ட்டர்ஸிலும் ஒரு சிறிய மருத்துவமனை இருந்தது.

தவிர, மில்லுக்கு உள்ளே தொழிலாளர்கள் பொருட்கள் வாங்க ஒரு பண்டகசாலையும் அமைத்திருந்தனர். குழந்தைகளுக்காகப் பின்னி உயர்நிலைப் பள்ளியும் மில்லின் அருகே நடத்தப்பட்டது. இப்படி இருந்த பின்னி அண்ட் கோ சுதந்திரத்திற்குப் பிறகு என்ன ஆனது? இதன் பி.அண்ட்.சி.மில் ஏன் மூடப்பட்டது?

(தொடரும்)