ரத்த மகுடம்- 32பிரமாண்டமான சரித்திரத் தொடர்

புறச்சூழலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் தனி மனிதனுக்கு இல்லாதபோது வெறும் பார்வையாளனாக நிற்பதும், நடப்பதற்கு ஏற்ப தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தானே அழகு; நல்லது..?கரிகாலனும் அப்படித்தான் தன் இருப்பை தக்க வைக்க அப்போது முயற்சித்தான். நான்கு நயனங்கள் தன்னை அங்குலம் அங்குலமாக அலசுவதை அவனால் உணரமுடிந்தது. முகத்தைக் கல்லாக்கி எந்த அறிகுறியும் அதில் தெரியாதபடி சிலையாக நின்றான்.

நிலவிய அமைதியை ஸ்ரீராமபுண்ய வல்லபரே கிழித்தார். ‘‘அதென்ன உன் இடுப்பில் ஏதோ கட்டு இருக்கிறது..? உன் மனம் கவர்ந்த சிவகாமிக்காகக் கொண்டு வந்தாயா..? அதை நானும் உன் பெரிய தாயாரும்...’’‘‘தாயார்...’’ அழுத்தத்துடன் கரிகாலன் இடைமறித்தான்.கேட்ட அவன் பெரிய தாயாரின் கண்கள் கணத்துக்கும் குறைவான பொழுதில் கலங்கி சரியாகின.‘‘தவறி வந்துவிட்டது...

வயதில் பெரியவனாக இருந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் கரிகாலா!’’ கண்களில் விஷமம் பரவ பெயருக்கு தலைதாழ்த்திய சாளுக்கிய போர் அமைச்சர், ‘‘அந்தக் கட்டை நாங்களும் பார்க்கலாம் அல்லவா..?’’ என்றார். அதில் ‘எடு’ என்ற கட்டளை ஊடுருவி இருந்ததை கரிகாலனால் உணர முடிந்தது.

சீற்றத்துடன் அவரை ஏறிட்டவன், சட்டென்று தடுமாறினான். காரணம் அடுத்து ஒலித்த பெரிய தாயாரின் குரல்.‘‘அட... ஆமாம்... இப்போதுதான் கவனிக்கிறேன்... அது என்ன கரிகாலா..?’’ கட்டளையாக இல்லாமல், ‘கொஞ்சம் காட்டு... நானும் பார்க்கிறேன்...’ என்ற தொனியே அதில் நிரம்பி வழிந்தது.மறுக்கவே முடியாது. இதுவரை இப்படி ஆவல் பொங்க எதையுமே தன்னிடம் பெரிய தாயார் கேட்டதில்லை. எவ்வித உள்முக ஆலோசனைக்கும் செல்லாமல் உடனே தன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு பழையபடி பின்னோக்கி வந்து நின்றான்.

புருவங்கள் விரிய பெரிய தாயார் அதை இப்படியும் அப்படியுமாக புரட்டுவதையும், அதிசயத்தை கண்டாற் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு ராமபுண்ய வல்லபர் இருக்கையிலிருந்து தன் இடுப்பை சற்றே உயர்த்தி அதைப் பார்ப்பதையும் மனதுக்குள் குறித்துக்கொண்டான். குறிப்பாக சாளுக்கிய போர் அமைச்சரின் கண்களில் பரவிய எச்சரிக்கையை.  

கரிகாலனின் உள்ளுணர்வு கூர்மையடைந்தது. அதற்கு வலு சேர்ப்பது போல் ராமபுண்ய வல்லபர், சற்றே தன் உடலைச் சாய்த்து அமர்ந்தார். அவரது அந்த செய்கை பட்டவர்த்தனமாக அவனுக்கு எல்லாவற்றையும் உணர்த்தியது.அந்த இடம் அவனுக்கு பரீட்சயமான அறை. எனவே உள்ளறையின் கதவு தனக்குப் பின்னால் இருப்பதையும் அங்கிருந்து யாரோ இங்கு நடப்பவற்றை கவனிக்கிறார்கள் என்பதையும் அந்த நபரும் இந்த சுவடிக் கட்டுகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தன் உடலை வளைக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டான்.

போலவே அந்த நபர் யார் என்பதையும். சிவகாமி! அவளைத் தவிர வேறு யார் அங்கு இருக்கப்போகிறார்கள்..! ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கைப்பாவைதான் அவள் என்பதை இந்த மாளிகையின் கதவை அவர் திறந்தபோதே தெரிந்துவிட்டதே... என்றாலும் ஒரு விஷயம் மட்டும் கரிகாலனுக்குப் புரியவில்லை.

தன் இடுப்பில் இருப்பது சுவடிக்கட்டு என்பதை சிவகாமி நன்றாகவே அறிவாள். போலவே அதில் அவளைக் குறித்த ரகசியங்கள்தான் அடங்கியிருக்கின்றன என்பதையும். அப்படியிருந்தும் எதற்காக சாளுக்கிய போர் அமைச்சரும் சிவகாமியும் இந்த சுவடிக்கட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள்..? ஒருவேளை கடிகையில் அந்த பாலகன் தன்னிடம் உணர்த்த வந்தது வேறு ரகசியத்தையா..?

வேர்விட்ட வினாக்களை பெரிய தாயாரின் குரல் தடுத்து நிறுத்தியது. ‘‘இவை அர்த்த சாஸ்திரத்தின் பகுதிகள் அல்லவா..? இதையா சிவகாமிக்காக எடுத்து வந்தாய்..?’’கரிகாலன் புன்னகைத்தான். தனக்குச் சாதகமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். எனவே ஸ்ரீராமபுண்ய வல்லபர் உரையாடலில் கலக்க அவன் இடம்தரவில்லை.  

‘‘தாயே! இதை சிவகாமிக்காக எடுத்து வந்ததாக நான் சொல்லவில்லையே... சாளுக்கிய போர் அமைச்சராகத்தானே அப்படியொரு முடிவுக்கு வந்தார்...’’ சொன்னதுடன் நிற்காமல் இரண்டடி முன்னால் நகர்ந்து பெரிய தாயாரிடம் இருந்து அந்த சுவடிக் கட்டை திரும்பப் பெற்று தன் இடுப்பில் பழையபடி வைத்துக்கொண்டான்!

‘‘ஒருவேளை அப்படியிருக்குமோ என்று நினைத்துக் கேட்டேன்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்‘‘நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்பதை இப்பொழுது புரிந்துகொண்டிருப்பீர்களே..!’’ கரிகாலன் தலைதாழ்த்தி கண்களால் சிரித்தான்.‘‘நினைப்பதை நடத்திக் காட்டுவதுதானே வீரனுக்கு அழகு!’’ தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

‘‘எனில் நடத்திக் காட்டலாமே..!’’‘‘அதுதானே அரங்கேறிக்கொண்டிருக்கிறது!’’ வாய்விட்டு சிரித்த சாளுக்கிய போர் அமைச்சர், தன் கண்களால் கரிகாலனின் பெரிய தாயார் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை அவனுக்குச் சுட்டிக் காட்டினார். ‘என் இழுப்புக்கு ஏற்றபடிதான் இங்கு ஒவ்வொரு அணுவும் அசைகிறது... புரிகிறதல்லவா..?’ புருவத்தை மேலும் கீழும் இறக்கியபடி வினவினார்.

கரிகாலன் இமைக்காமல் அவரைப் பார்த்தான். இழுக்கும் கயிற்றை எப்படி, எந்த இடத்தில் அறுக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது. அதற்கு முன்னால் எதற்காக தன் பெரிய தாயார் காஞ்சிக்கு வந்திருக்கிறார்... வந்தவர் ஏன் இந்த மாளிகையில் அதுவும் சாளுக்கியப் போர் அமைச்சருடன் தங்கியிருக்கிறார் என்பதை அறியவேண்டும். மனதுக்குள் திட்டமிட்டவன் அதன் ஒரு பகுதியாக இழுப்புக்கு ஏற்றபடி அசைய முடிவு செய்தான். வாய்விட்டு சிரிக்கவும் செய்தான்.

‘‘எதற்காக சிரிக்கிறாய் கரிகாலா..?’’
‘‘தாயாரின் காஞ்சி வருகையைக் கூட உங்கள் அரங்கேற்ற காதையில் இணைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!’’
இப்படி திடுதிடுப்பென்று வெளிப்படையாக கேட்டுவிடுவான் என்பதை ராமபுண்ய வல்லபர் மட்டுமல்ல... அவனது பெரிய தாயாரும் எதிர்பார்க்கவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அவர்களை யோசிக்க இடம் தராமல் கரிகாலன் தொடர்ந்தான். ‘‘காஞ்சியும் எங்கள் ஊர்தான் சாளுக்கிய போர் அமைச்சரே! இங்கு நானோ என் தாயோ வருவது பெரிய விஷயமல்ல... எனவே நாடக இலக்கணப்படி இது உங்கள் அரங்கேற்ற காதையில் இடம்பெறாது!’’
‘‘அப்படியா சொல்கிறாய்..?’’

‘‘அப்படி மட்டும்தான் சொல்கிறேன் ராமபுண்ய வல்லபரே!’’‘‘இந்த மாளிகைக்கு உன் தாய் வருகைபுரிந்ததைக் கூடவா..?’’
‘‘இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது..? பல்லவ நாட்டின் பெரு வணிகருக்கு சொந்தமான மாளிகை இது... வணிகத்தின் பொருட்டு அவரைச் சந்திக்க தாயார் வந்திருக்கலாம்...’’‘‘உறையூரில் இப்போதும் வணிகம் நடைபெறுகிறதா..?’’‘‘எப்போதும் நடைபெறுகிறது!’’

‘‘அதை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் கரிகாலா...’’ அதுவரை அமைதியாக இருந்த கரிகாலனின் பெரிய தாயார் வாய் திறந்தார்.
கரிகாலன் மேலும் நிதானத்துக்கு வந்தான். கயிற்றை அறுக்க வேண்டிய தருணம். சொற்களைக் கவனமாகப் பயன்படுத்தினான். ‘‘நல்ல விஷயம்தான் தாயே... இதற்கு சாளுக்கிய போர் அமைச்சர் எந்த வகையில் உதவப்போகிறார்..?’’

‘‘இந்த வகையில்தான்...’’ தோளைக் குலுக்கிய ஸ்ரீராமபுண்ய வல்லபர், பெரிய தாயார் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை தன் கரங்களால் சுட்டிக் காட்டினார்.சந்தேகம் விலகியபோதும் அவர் உதடுகளில் இருந்தே உண்மை வெளிப்பட வேண்டும் என கரிகாலன் நினைத்தான். ‘‘ஆசனமா..?’’
‘‘சிம்மாசனம்!’’ தலையை உயர்த்தி கம்பீரமாக அறிவித்தார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘பல்லவ நாட்டின் சிம்மாசனத்தில் இனி உங்கள் வம்சாவளியினர் அமரலாம் கரிகாலா..!’’

‘‘அப்படியா..?’’
‘‘ஆம். சாளுக்கியர்களின் படை உங்களுக்கு அரணாக நிற்கும்...’’‘‘அதாவது சிற்றரசர் என்ற தகுதியுடன்!’’‘‘அப்படியும் சொல்லலாம். இப்போது பல்லவர்களுக்கு கட்டுப்பட்டு உறையூரில் நீங்கள் இருப்பதுபோல் சாளுக்கியர்களுக்கு கட்டுப்பட்டு இனி காஞ்சியில் வசிக்கலாம் என அதையே விரிவு
படுத்தவும் செய்யலாம்!’’

எதிர்பார்த்த உண்மைதான். என்றாலும் அது வெளிப்பட்டபோது முகத்தில் அறைந்தது போலிருந்தது. சமாளிப்பதற்கு கரிகாலனுக்கு சில கணங்கள் தேவைப்பட்டன.இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு காய்களை நகர்த்த ஆரம்பித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘இதில் யோசிப்பதற்கோ திகைப்படையவோ எதுவும் இல்லை கரிகாலா... நேரடியாக இல்லாவிட்டாலும் சோழப் பேரரசின் கிளை என உங்களைச் சொல்லலாம். அதனால்தான் பல்லவ மன்னர்கள் உங்களை மதிப்பதுபோல் நடிக்கிறார்கள்!’’

‘‘அப்படியா..?’’
‘‘அப்படியேதான்! யோசித்துப் பார்... ஒரு காலத்தில் இப்பிரதேசத்தையே உன் மூதாதையர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். காட்டை அழித்து இப்பகுதியை உருவாக்கியதே நீங்கள்தான். எனவேதான் உங்களை பகைத்துக்கொள்ள பல்லவ மன்னர் விரும்பவில்லை...’’
‘‘சாளுக்கியர்களும்!’’ இடையில் வெட்டினான்.

‘‘மறுக்கவில்லையே... என்றாலும் நாங்கள் பல்லவர்களை விட பல படிகள் மேலானவர்கள்!’’‘‘எப்படியோ..?’’‘‘எந்தப் பகுதி உங்களால் உருவாக்கப்பட்டதோ அந்தப் பகுதியை மீண்டும் உங்களுக்கே வழங்க சாளுக்கிய மன்னர் முடிவு செய்திருக்
கிறார்..! இனி காஞ்சி மாநகரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து நீங்களே ஆட்சி செலுத்தலாம்!’’

‘‘பதிலுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘பல்லவர்களுடனான உறவைத் துண்டிக்க வேண்டும்!’’
‘‘அதாவது ராஜ துரோகம் செய்யச் சொல்கிறீர்கள்...’’

‘‘இல்லை. ராஜ தந்திரத்தை பயன்படுத்தச் சொல்கிறேன். வாய்ப்பு வந்து கதவைத் தட்டும்போது அதை வரவேற்பதுதான் முறை. உன் தாயாரிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவைச் சொல்...’’ எழுந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஒரு கணம் அவன் இடுப்பில் இருந்த சுவடிக் கட்டைப் பார்த்தார். பின் பெரிய தாயாரை வணங்கிவிட்டு வாயில்புறமாக வெளியேறினார்.

அவர் செல்வதையே பார்த்துவிட்டு தன் பெரிய தாயாரின் பக்கம் திரும்பினான். ‘‘தாயே...’’‘‘கரிகாலா..!’’ அழைத்தவரின் உதடுகள் துடித்தன.பதற்றத்துடன் அவர் அருகில் சென்றான்.அவன் கரங்களில் தன் முகத்தைப் புதைத்தார். அவர் காலடியில் மண்டியிட்டான்.உள்ளறையிலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு முதுகு பளிச்சென்று தெரிந்தது.அது கரிகாலனின் பெரிய தாயார் முதுகு!தன் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த குறுவாளை எடுத்தாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்