துப்பாக்கி முனை



அருமை பெருமையாக வளர்த்த மகள் வன்புணர்வுக்கு ஆளாகி, கொலையாகி, கடலில் கிடக்க, அதற்குப் பழிவாங்க அப்பா எம்.எஸ்.பாஸ்கர் புறப்படுவதும், அதை துப்பறிந்து பின்தொடரும் அதிகாரியாய் விக்ரம் பிரபு... அதற்குப்பிறகு என்ன நடந்தது என்பதுவே ‘துப்பாக்கி முனை’.
ஒட்டு மொத்த பிரியத்தின் அடையாளமாக இருக்கிற மகள் பள்ளிக்குப் போகும் வழியில் நான்குபேர் கொண்ட இளைஞர்களால் மோசம் செய்யப்படுகிறாள். குற்றவாளிகளில் ஒருவன் செல்வாக்கில் இருக்கும் வேலராமமூர்த்தியின் மகன். உண்மையான குற்றவாளிகளை மறைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்த குற்றத்தை வடநாட்டு இளைஞர் செய்ததாக பழி சுமத்தப்பட்டு என்கவுன்டர் செய்ய சிறப்பு அதிகாரி விக்ரம் பிரபு வருகிறார். பாஸ்கருடனான யதார்த்த சந்திப்பில் இந்த உண்மையெல்லாம் விக்ரம் பிரபுவிற்குத் தெரிய வர, அவர் எவ்விதம் முடிவெடுக்கிறார். எதிர்ப்பவர்களை எகிறியடிக்கும் அதிகாரியாக எப்படி மாறுகிறார் என்பதே மீதிக்கதை. வித்தியாசப்படுத்தும் கதையை எடுத்த வகையில் ஈர்க்கிறார் டைரக்டர் தினேஷ் செல்வராஜ்.

கமர்ஷியல் களத்தில் இறங்கி அடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அதிகம் பேசாமல், இறுகிய முகத்தோடு, கண்களில் கருணையற்று வரும் அவர், பிற்பாடு சூழல் அறிந்து, கருணையின் வாசல் திறப்பது அருமையான மாற்றம். ஆரம்பத்திலிருந்து அவர் செய்யும் என்கவுன்டர்களில் வெறுப்படைகிற அம்மாவை சமாதானப்படுத்தும் இடங்களில் கனிவு. ஆனாலும் உணர்ச்சிகள் கொந்தளிக்க வேண்டிய இடங்களில் வெறும் இறுக்கம் மட்டும் ஏன் பிரபு!கொஞ்ச நேரமே வந்தாலும் மனசில் நிற்கிறார் ஹன்சிகா.  

சவரத்தொழிலாளியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்திலேயே அருமையான பாத்திரத்தேர்வு. பெண் குழந்தைகளின் ஒட்டுமொத்த துயரங்களைச் சொல்லி வேதனையில் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் கன்னங்களை நனைக்கிறது.

அவர் எளிதாக குற்றவாளிகளின் இடம் புகுவதெல்லாம் காதில் பூ!பாசம் கண்ணை மறைக்க, மகனின் குற்றத்தை மறைக்க முயலும் தந்தையாக வேலராமமூர்த்தி கச்சிதம். ஏர்போர்ட்டில் அவர் இறங்கி பவனி வருவதெல்லாம் அசத்தல். முக்கியமான மெசேஜ், மாஸ் ஹீரோ பில்டப், ஓ.கே.வான ப்ளாஷ் பேக், ஓங்கி அடிக்கும் இடைவேளை என எல்லாமே பக்கா.

தில்லியின் காட்சிகள், ராமேஸ்வரத்தின் நிலப்பரப்பு.... என என மொத்த கேன்வாஸையும் அழகாகக் காட்டும் ராசாமதியின் ஒளிப்பதிவு... ஆக்‌ஷன் காட்சிகளில் எக்ஸ்ட்ரா துல்லியம். முத்துகணேஷ் பின்னணி இசை படத்திற்கு ஏகமாக பரபரப்பு ஊட்டுகிறது.

இன்னும் பரபரப்பாகச் சொல்ல வேண்டிய கதையை ஆரம்பத்தில் வேகத்தை குறைத்திருப்பது ஏன் - என்கவுன்டர் செய்யும் அதிகாரியாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை குடும்பம் உணர முடியாதது எப்படி? கடைசியில் ஹீரோ செய்ய வேண்டிய வேலையை எல்லாம் பாஸ்கரை செய்ய விடலாமா ப்ரோ?திரைக்கதையை இறுக்கியிருந்தால் ‘துப்பாக்கி முனை’ இன்னும் கவர்ந்திருக்கும்.

குங்குமம் விமர்சனக் குழு