சீதக்காதி



தமிழ் சினிமா தன்னை ஆய்வு செய்துகொள்ள மறுபடியும் தயாராகியிருக்கிறது. ‘சீதக்காதி’ அப்படியொரு படம்.கலையும், அதன் தீவிரத்தையும் தோள் மீது ஏந்தி எடுத்துச்செல்லும் நாடகக்கலைஞனின் கதை. வரையறுக்கப்பட்ட கமர்ஷியல் களத்தில் பரிசோதனை முயற்சிகளை அழகாக வைத்துக் கொள்ளலாம் என்பதை சிறந்த செயல் நேர்த்தியுடன் நேர்மையாகச் சொல்லிய விதத்தில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் கவனம் ஈர்க்கிறார்.

திரைப்படங்களில் புத்திசாலித்தனமும், அறிவார்த்தமும் எப்போதாவதுதான் வெளிப்படும். அப்படிப்பட்ட வகையிலும் ‘சீதக்காதி’ முக்கியமானவர்.

படம் ஆரம்பிக்கும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது நாடகம். அதன் வளர்ச்சியும், அமைப்பும், ேகாடிட்டு காட்டப்பட்டு துலங்க க்கப்பட்டிருக்கின்றன.

நாலைந்து ஷாட்டில் கடந்துபோயிருக்கலாம். சினிமாவின் இப்போது வேண்டப்படும் துரிதத்தன்மைக்கு எதிர்மாறாக நாடகக்காட்சிகள் விரிகின்றன. அநேகமாக 45 நிமிடங்கள் சினிமாவின் புத்துயிரை நேசிக்கும் இதயங்களுக்கு புத்தம் புதிய சுகானுபவம். விஜய் சேதுபதி நின்று ஜெயித்திருக்கிறார்.

இதன் பிறகு சினிமாவின் பாதிப்படையாத அய்யாவின் சீடர்கள் அடுத்து திரையில் களமிறங்குவதும், அவர்களின் நடிப்பும் செம காமெடி. அய்யாவின் ஆன்மாவின் ‘ஆசி’க்கு ஆட்பட்டவர்களாக ராஜ்குமார், சுனில் என இருவருமே அட்டகாசம். காட்சிக்குப் பொருத்தமில்லாத ரியாக்‌ஷன் தரும் ஒவ்வொரு இடமும் ‘கலகல’.

இயக்குநர்கள் மகேந்திரனும், பாரதிராஜாவும் வந்துபோவது படத்திற்கு துணை. அர்ச்சனாவிற்கு இன்னும் இடங்கள் தந்திருக்கலாம். மௌலியின் கேரக்டர் உயிர்த்தன்மை. பகவதிபெருமாள், ஜி.எம்.சுந்தர், டி.கே. கேரக்டர்களில் சாலப்பொருத்தம்.காயத்ரி, பார்வதி நாயர், ரம்யா நம்பீசன் வந்து போனாலும் அவசியப்படுகிறார்கள். முன்பகுதியில் வாழ்வைக்காட்டும் திரைக்கதை பின்பகுதியில் இணைந்த நகைச்சுவையை நம்புகிறது.

விஸ்வரூபம் எடுக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா. ஒற்றை வயலினும், புல்லாங்குழலும் பரவி படம் முழுவதும் இழைகிறது. சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம், கலகலப்பு என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது அவர் ஏரியா. தியாகராஜன் குமாரராஜாவின் ‘அய்யா’ பாட்டு துள்ளாட்டம்.மொத்த ஏரியாவையும் தூக்கி நிறுத்துவதில் அசராமல் உழைக்கிறது சரஸ்காந்தின் கேமரா.

குத்துப்பாட்டும், வெத்துவேட்டும், ரத்தக்களறியும், விடலைக்காதலும் மலிந்த தமிழ் சினிமாவில் நாடகக்கலைஞனின் அசல் சித்திரத்தைக் கொண்டு வந்த அழகிய, துணிச்சலான முயற்சிக்காகவே இயக்குநருக்கு ஒரு பெரிய பூங்கொத்து. கனமான பின்புலத்தை வணிகக் காரணங்களுக்காக சமரசம் செய்யாமல் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு நல்வரவு!                               
            
குங்குமம் விமர்சனக்குழு