இதுதான் இந்தியா வல்லரசாக மாறாததற்கு காரணம்!யெஸ் பாஸ். ‘இந்தியா ஸ்பெண்ட்’ ஆய்வும், ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ ஆய்வு பத்திரிகையும் இதைத்தான் செவிட்டில் அறைந்து அறிவிக்கின்றன!

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்று, இந்தியப் பொருளாதாரம். இத்தனை ஆண்டு கால சுதந்திரப் பயணத்தில் நாம் வளரும் நாடுகளிலேயே மிக முக்கியமானவர்களாக முன்னேறியுள்ளோம். ஆனாலும் நாம் பின்தங்கியே இருக்கிறோம். ஏன்?

இந்தக் கேள்விக்கு அந்நியப் படையெடுப்பு என்பார்கள் சிலர். இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அதைவிட முக்கியமானது பாரம்பரியம், பெருமிதம் என்று கொண்டாடும் நமது மரபுதான். இதுவேதான் நமது சுமையாகவும் மாறிவிட்டது. ஆதிகாலம்தொட்டே பலவிதமான இனக்குழுக்கள் இங்கு வசித்துவருகின்றன. காலப் போக்கில் இவை சாதிகளாக தொகுக்கப்பட்டன.

அதுபோல வேதான் இந்நிலத்தில் பலவிதமான மதங்கள் தோன்றியுள்ளன. இந்த பலவிதமான சாதி, மதங்களுக்கு இடையிலான பூசல் என்பது நமது நிலத்தில் ஆதிகாலம்தொட்டே இருந்து வரும் பிரச்னைகளில் ஒன்று. நவீன சமூகமாக மலர்ந்த பிறகும் நாம் இந்தப் பூசல்களை எல்லாம் கைவிடாது இருப்பதும் நமது பின்னடைவுக்கு ஒரு காரணம்.

சமீபத்தில் ‘இந்தியா ஸ்பெண்ட்’ ஓர் ஆய்வை நடத்தி, அறிக்கை வெளியிட்டது. இதில், நாம் மட்டும் சாதி, மதம், பால் பாகுபாடு ஆகிய சமத்துவமற்ற கொள்கைகளைத்  தளர்த்தியிருந்தால் கடந்த அறுபது வருடங்களில் வளர்ந்திருப்பதைப் போல இரு மடங்கு வளர்ந்திருப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற ஆய்விதழ் நடத்திய ஆய்வு ஒன்று மதங்கள் பற்றிய மக்களின் பார்வையில் ஏற்படும் மாற்றம் எப்படி பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதைப் பற்றியதாக இருந்தது.

இதில், மதச்சார்பின்மை என்பது பொருளாதார முன்னேற்றத்துக்கு வித்திடுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, 20ம் நூற்றாண்டில் மதங்களின் முக்கியத்துவம் மற்றும் அதில் ஏற்படும் மனநிலைகளின் மாற்றம் ஆகியவை தொடர்பான உலக விழுமியங்களின் சர்வேயிலிருந்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.

இதன்படி, உலகில் உள்ள 109 நாடுகளில் இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை அணுகுமுறைக்கு 66வது இடம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் நாம் மதச்சார்பற்ற நாடு என்று சட்டரீதியாக அறிவித்துக்கொண்டவர்கள்!

இந்தப் பட்டியலில் நம் பங்காளி பாகிஸ்தான் நம்மை விடவும் பின்தங்கி 99ம் இடம் வகிக்கிறார்! சீனாவோ இந்தப் பட்டியலில் முதல் இடம். பங்களாதேஷ் 104வது இடம். இந்தப் பட்டியலில் கடைசி இடம், அதாவது மதச்சகிப்புத்தன்மை மிகக் குறைந்த நாடு உலகிலேயே கானாதான்.

ஒரு நாட்டின் சராசரியான தனி நபர் வருமானத்தை per capita GDP என்பார்கள். இது கடந்த அறுபது ஆண்டுகளில் சிறப்பாக வளர்ந்துள்ளது. 1958 உடன் ஒப்பிடும்போது 2018ல் இது இருபத்தாறு மடங்கு உயர்ந்துள்ளது.

‘இந்தியர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் மதாபிமானம், சாதியபிமானம், குலாபிமானம், இனாபிமானம், பெண் அடிமைத்தனம் ஆகிய தீய குணங்களைக் குறைத்துக்கொண்டால் பொருளாதாரம் இன்னும் சிறப்பாக முன்னேறியிருக்கும்’ என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆய்வறிஞர் டாமியன் ருக்.

மிகக் குறிப்பாக, ஒடுக்கப்பட்டோர், பெண்கள் ஆகியோர் நடத்தப்படுவதில் இன்னமும் கொஞ்சம் சமத்துவத்தன்மை இருந்தால், அவர்களும் நமது பொருளாதார நடவடிக்கையில் சுதந்திரமாக ஈடுபடுவார்கள். இதனால், நமது பொருளாதாரம் நன்கு முன்னேற்றமடையும் என்பது அவர் தரப்பு.

ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய அளவிலேயே பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார அமைச்சகத்தின் சர்வே ஒன்றின்படி தலித்துகள் மற்றும் பழங்குடிகள் 9.7% என்ற நிலையில் பொருளாதார வளத்தில் இருக்கிறார்கள். பிற சாதியினருக்கோ இது 26.6% ஆக உள்ளது. அதாவது, ஒடுக்கப்பட்ட மக்களைவிடவும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு செல்வ வளத்தோடு பிற சாதியினர் உள்ளனர்.

அதுபோலவே பெண்களின் நிலையும் மோசம்தான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி உள்ள பெண்களை நாம் பொருளாதார நடவடிக்கையில் மிகச் சொற்பமாகவே ஈடுபடுத்துகிறோம்.

இந்தியப் பெண்களில் வெறும் 27% பேர்தான் வீட்டை விட்டு வெளியேறி வேலை பார்க்கிறார்களாம். இது தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த விகிதம் என்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் சுமார் இரண்டு கோடிப் பெண்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர் அல்லது கைவிட்டுள்ளனர் என்று உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

‘இந்தியாவின் ஓர் ஆண்டுக்கான தனி நபர் வருமானம் இப்போது ரூ.1,15,000மாக உள்ளது. ஆனால், எங்களது ஆய்வின்படி இது நிஜத்தில் 5,72,000மாக இருந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு விஷயம் இதில் உதைக்கிறது. அதை இந்திய சமூகவியல் நிபுணர்கள்தான் கண்டறிய வேண்டும்’ என்கிறார் ருக். 

மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால் முன்பைவிடவும் இப்போது நமது மதச்சார்பின்மை, பிற சாதி ஏற்பு, பெண் விடுதலைப் புரிதல்கள் மேம்பட்டுள்ளன என்பதுதான். பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் கணிசமான முன்னேற்றங்களே இதற்கு சாட்சி.

ஒருவேளை ஐரோப்பிய நாடுகளின் அளவுக்கு இதில் முன்னேற்றம் ஏற்படும் என்றால், அடுத்த பத்து வருடங்களில்கூட தனி நபர் சராசரி வருமானம் 70,175 ஆகவும், இருபது வருடங்களில் 1,96,490 ஆகவும், முப்பது வருடங்களில் 3,50,875 ஆகவும் உயரக்கூடும் என்றும் சொல்கிறார் ருக்.

சீனாவைப் போல் நாம் உலக அரங்கில் உயரவேண்டும் என்றால் அவர்களைப் போலவே மதம், சாதி, இனம் போன்ற விவகாரங்களை ஓரம் வைத்துவிட்டு முன்னேற்றத்தை நோக்கி ஓட வேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடேகூட இந்த வெறுப்புப் பட்டியலில் 57வது இடம்தான் வகிக்கிறது. கடந்த பத்து வருடங்களில் மட்டும் இங்குள்ள பத்து பெரு நகரங்களில் வெறுப்பரசியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதே இதன் காரணம். இதனோடு ஒப்பிடும்போது சீனா சிறப்பாக உள்ளது.

மதச்சார்பின்மை பெருகினால் தானாகவே முன்னேற்றம் பெருகும் என்று குறுக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. அதே சமயம், உயர்ந்து வரும் பொருளாதார முன்னேற்றம் ஒரு மதத்தின் செல்வாக்கை எப்போதும் குறைத்துவிடவும் செய்யாது என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் 90% இந்தியர்கள் மதம் என்பதை மிகவும் முக்கியமானது என்றோ, முக்கியமானது என்றோதான் குறித்துள்ளார்கள். இந்தியாவும் கைர்கஸ்தானும் மட்டுமே ஒருவரின் வாழ்வுக்கு மதம் மிகவும் முக்கியம் என்று குறிப்பிடும் நாடுகளாக இருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சாதி, மதம், இனம், குலம், பண்பாடு என்பவை எல்லாம் நம் நாட்டின் ஆணிவேர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், எந்த ஒரு பற்றுமே மனிதனுக்கு வெறியாக மாறுவது ஆபத்து. நம் முன்னேற்றத்துக்கு ஒரு கருத்துநிலை முட்டுக்கட்டை என்பது தெரிந்தால் அதை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு முன்னே போவதுதான் அறிவுடமையான ஒரு சமூகத்துக்கு எப்போதுமே நல்லது. பார்த்து பண்ணுங்க மக்கா!  

இளங்கோ கிருஷ்ணன்