தேர்தல் 2019-வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு 2 பூட்டு!



வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன. சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு பரிந்துரை செய்த வரைமுறைகளுக்கு ஏற்ப இவை தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இந்த இயந்திரங்களை இப்பொதுத்துறை நிறுவனப் பொறியாளர்களே சோதனையிட்டு ஒப்புதல் வழங்குகிறார்கள்.

இவை அந்தந்த மாவட்டத் தலைமையகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இப்பகுதிகளுக்கு யாரையும் எளிதாக அனுமதிப்பதில்லை. பதிவேடுகளில் அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்த பின்பே ஒருவர் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார். தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டைப் பொருத்தி தேர்தலுக்காக இந்த இயந்திரங்களைத் தயாராக்கியவுடன் தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையிலேயே அவை பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அவ்வறைகளுக்கு இரட்டைப்பூட்டு முறையில் பூட்டு போடப்படுகிறது. அதன்மீது வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் தங்களது முத்திரைகளைப் பதிப்பர். இந்த நடைமுறை அனைத்தும் வீடியோ எடுக்கப்படுகிறது. வாக்குப்பதிவிற்குப் பின்பும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்டப்படுகிறது. இவ்வறைகளை மூன்றடுக்கு முறையில் பாதுகாப்புப் படையினர் பாதுகாத்து வருவர். வேட்பாளர்களோ அல்லது அவர்களது பிரதிநிதிகளோ ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து இந்த அறைகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்படுவர்.

நெட்டிசன்