டிரம்ப் ஒரு திருடர்..! நியாயம் கேட்ட வார்னர் பிரதர்ஸ்ம்க்கும். பெரிய அண்ணனாகவே இருந்தால்தான் என்ன..? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம்தானே..?
அதுதான் இப்போது அரங்கேறியிருக்கிறது.காப்பிரைட் என்கிற சமாச்சாரம் பொதுத்தளத்ைத விட சமூக வலைத்தளங்களில் பக்காவாகச் செயல்படுகிறது. டுவிட்டோ ஃபேஸ்புக்கோ... எந்த நிலைத்தகவலை அல்லது டுவீட்டை யார் எழுதினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக புகைப்படங்கள் அல்லது வீடியோவைப் பதியும்போது.

யாருக்கு என்ன தெரியப் போகிறது... என அலட்சியமாக இருந்தால் டிரவுசர் கிழிந்து அசிங்கப்பட நேரிடும்.அப்படித்தான், அசிங்கப்பட்டான்டா குமாரு கணக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது அசடு வழிகிறார்.அடுத்த வருடம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதை ஒட்டி இப்போதே அங்கு பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இதனை ஒட்டி சென்ற வாரம் தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இரண்டு நிமிட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘MAKE AMERICA GREAT AGAIN!’ எனக் குறிப்பிட்டு டுவீட் செய்தார் டொனால்ட் ட்ரம்ப். சும்மா சொல்லக் கூடாது. வரவேற்பு என்றால் அப்படியொரு வரவேற்பு. மூன்றே மணி நேரங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவைக் கண்டுகளித்தார்கள்.

பிரச்னையும் இங்குதான் ஆரம்பித்தது!
வீடியோவைப் பார்த்த பெரும்பாலானவர்களுக்கு அதில் ஒலித்த பின்னணி இசை இம்சைப்படுத்தியது. ‘எங்கோ கேட்ட மாதிரி இருக்கே...’ என பட்ஸால் காதைக் குடைந்தவர்கள் சட்டென ஷாக் அடித்து நிமிர்ந்தார்கள்!யெஸ். 2012ம் ஆண்டு வெளியான `தி டார்க் நைட் ரைசஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றிருந்த ரீரெக்கார்டிங் அது!உடனே டிரம்ப்பின் டுவீட்டுக்குக் கீழே இதைக் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

‘The Dark Knight Rises’ படம் ப்ளஸ் அதற்கான ஹான்ஸ் ஸிம்மரின் பின்னணி இசையின் காப்புரிமை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம்தான் இருந்தது.
அவ்வளவுதான். மவனே... நீ செத்தடா... என கடுப்புடன் காப்புரிமை சட்டத்தின் கீழ் டிரம்ப்   பதித்தவீடியோ குறித்து டுவிட்டர் நிர்வாகத்தில் புகார் செய்தார்கள்.‘எக்ஸ்ட்ரீம்லி சாரி...’ என டுவிட்டர் நிர்வாகம் சொல்லிவிட்டு அந்த வீடியோவை நீக்கிவிட்டது!

இந்தச் செய்தி எழுதப்படும் நேரம் வரை டிரம்ப்பின் டுவீட் அப்படியே இருந்தது / இருக்கிறது. ஆனால், வீடியோ இருந்த இடத்தில் ‘This media has been disabled in response to a report by the copyright owner’ என மின்னுகிறது!கமுக்கமாக இந்த வேலையை முடிக்க வார்னர் பிரதர்ஸ் விரும்பவில்லை. நெஞ்சை நிமிர்த்தி, ‘பிரசார வீடியோவில் இசையைப் பயன்படுத்த எங்களிடம் அனுமதி பெறப்படவில்லை...’ என அறிவித்து காப்புரிமை தொடர்பாகப் புகார் செய்ததை உறுதி செய்திருக்கிறது! மீசையில் மண் ஒட்டவேயில்லை என டிரம்ப், இதுகுறித்து கவலையேபடவில்லை!                 

காம்ஸ் பாப்பா