இந்த app பயன்படுத்தினா பணம் திருடுபோகும்!



டிஜிட்டல் இந்தியா நல்ல விஷயம்தான். அதேநேரம் டிஜிட்டல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாவிட்டால் கதை கந்தல்தான் என்பதற்கு ஒரு சோறு பதம் இந்த மேட்டர்! கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி ‘Any desk’ என்ற app பற்றி எச்சரிக்கை செய்திருந்தது. யுபிஐ வழியாக இந்த செயலி நம் பணத்தைத் திருடுகிறது என ஆர்பிஐ அழுத்தம்திருத்தமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் யுபிஐ பேமென்ட்களுக்கு பொறுப்பான NCPI (National Payments Corporation of India) அமைப்பும் தன் பங்குக்கு ‘Anydesk’ செயலி அபாயம் என அலாரம் அடித்தது. அதில், Anydesk ஆப் மூலம் போலியான UPI பேமென்ட்ஸ் நடப்பதால் அந்த appபை யாரும் தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்றது.போதாதா. ஏகப்பட்ட வாட்ஸ் அப் ஃபார்வர்ட் மெசேஜஸ். எல்லாருமே பொறுப்பாக, ‘Anydesk’ பயன்படுத்த வேண்டாம். தமிழனாக / இந்தியனாக இருந்தால் ஷேர் செய்யவும் என அலறினார்கள்.

ரைட். என்ன நடக்கிறது அல்லது நடந்தது..?

ஃபர்ஸ்ட் திங் ஃபர்ஸ்ட். ரிசர்வ் வங்கியும் NCPI அமைப்பும் ‘Anydesk’ குறித்து எச்சரித்தது உண்மை. ஸோ, இந்த செயலி பிரச்னைக்கு உரியதுதான். யாரும் கண்டமேனிக்கு வாட்ஸ் அப்பில் ஃபார்வர்ட் செய்யவில்லை. எனவே இந்த appஐ தரவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது.

ஓகே. ‘Anydesk’ ஆபத்து. இதை அரசு தடை செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம். இதேபோன்ற திருட்டுத்தனத்தை வேறு apps செய்தால் எப்படி கண்டறிவது..?

நல்ல வினா. இதற்கு முதலில் ‘Anydesk’ எப்படி திருடுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். முதலில் மெசேஜ் அல்லது இமெயில் வழியாக இந்த ‘Anydesk’கை டவுன்லோட் செய்யச் சொல்லி செய்தி வந்தது / வருகிறது. தவறுதலாக அந்த குறுஞ்செய்தியையோ அல்லது மெயிலையோ க்ளிக் செய்தால் உடனே நம் மொபைலில் அந்த app இன்ஸ்டால் ஆகிவிடும்.

இதன்பின் நம் மொபைலில் 9 டிஜிட் கோட் எண் உடனே உருவாகும். அந்த எண்ணைப் பகிரச் சொல்லிக் கேட்பார்கள். ஏன் எதற்கு என கேள்வி எழுப்பாமல் அல்லது யாரிடம் கேட்பது என்று தெரியாமல், நடப்பது நடக்கட்டும் என one time password போல் உடனே அதைத் தந்துவிடுவோம்.
போதாதா? அந்த எண், மொபைலில் உள்ளீடாகும். முடிந்தது கதை. இதன் பிறகு நம் மொபைலின் ஆக்ஸஸ் முழுவதும் அந்த appஐ ஆபரேட் செய்பவர்களுக்கு கிடைத்துவிடும்.

பிறகென்ன... நம் மொபைல் நம் கையில் இருந்தால் என்ன... அவர்கள் பாட்டுக்கு கச்சிதமாக தங்கள் மொபைலில் இருந்து நமது வங்கி டிரான்ஸாக்‌ஷனை ஜம்மென்று செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்! NCPI-ன் எச்சரிக்கைப்படி இந்த வழியில் நம் வங்கியிலிருந்து மட்டுமல்ல; பேடிஎம், ஃபோன்பே போன்ற வாலட்களிலிருந்தும் அவர்களால் பணம் எடுக்க முடியும்; நிதிப்பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்!இப்படித்தான் ‘Anydesk’ இதுவரை பலரது பணத்தைச் சுருட்டி இருக்கிறது.

எனவே எந்த app ஆக இருந்தாலும் சரி... மெசேஜ் அல்லது மெயிலில் எது வந்தாலும் சரி... ஆர்வக்கோளாறில் அதை க்ளிக் செய்யாதீர்கள். கண்ணை மூடிக் கொண்டு டெலிட் செய்யுங்கள்.இதுமட்டுமே நம் பணத்தை நாம் பாதுகாப்பதற்கான குறைந்தபட்ச ஆரம்பநிலை வழிமுறை!

சுப்புலட்சுமி