இவற்றை வரைந்தது பள்ளி மாணவர்கள்!சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் வந்திருந்த ஓவியங்கள் அவை. ஓவியக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த ஆளுமைகளின் படைப்புகள் போல அனைத்திலும் அத்துணை நேர்த்தி. ஆனால், வரைந்தவர்கள் அனைவருமே 6ம் வகுப்பு தொடங்கி 10வது வரை படிக்கும் பள்ளி மாணவர்கள்!

இவர்களை இந்தளவுக்குத் தயார்படுத்தியவர் இவர்கள் படிக்கும் பள்ளியின் ஓவிய ஆசிரியரான திண்டுக்கல் தமிழ்ப்பித்தன். ‘‘எல்லாமே அவங்க ஆர்வம்தான். நான் வெறும் ஒரு கருவியா மட்டுமே இருக்கேன். இவங்க ஓவியத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் நம்பிக்கையில்லாம, ‘நீதானே இந்த ஓவியங்களை வரைஞ்சது’னு என்னைய கேட்பாங்க. ‘இல்லைவே இல்லை’னு பல தடவை சொல்லியிருக்கேன். அவங்க வரையறதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாதான் இருக்கும். அந்தளவுக்கு திறமையான மாணவர்கள் இவங்க...’’ என்றபடியே மாணவர்கள் வரைந்த ஓவியங்களை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார் தமிழ்ப்பித்தன்.

‘‘இது பாலாஜினு ஒரு மாணவனோட பென்சில் வேலைப்பாடு. அவன், பென்சில்ல அவ்வளவு அருமையா ஓவியம் போடுவான். அஜய் கண்ணன்னு ஒரு மாணவனின் கிரியேட்டிவிட்டி வேற லெவல். வண்ணங்கள்ல அசாத்தியமா கலக்குவான். ஜார்ஜ் ராஜ், தலைகீழாவே ஓவியங்கள் தீட்டுவான். இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அழகான திறன் இருக்கு…’’ என்ற தமிழ்ப்பித்தன் ஓவியங்களைப் பற்றித் தேடித் தேடிப் படித்தவர்.

‘‘என் இயற்பெயர் பூண்டி ஜெயராஜ். படைப்புகளுக்காக திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்னு வச்சிருக்கேன். தேவகோட்டை டி.பிரிட்டோ மேல்நிலைப்
 பள்ளில ஓவிய ஆசிரியரா வேலை பார்க்கிறேன். ஸ்கூல்ல பூண்டி ஜெயராஜ்னு சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும். சொந்த ஊர் திண்டுக்கல். 2002ல ‘தீக்குச்சி’னு ஒரு சிற்றிதழை நண்பர்களுடன் சேர்ந்து நடத்திட்டு இருந்தேன். அப்பதான் கோட்டோவியங்கள் மேல ஈர்ப்பு உண்டாச்சு. ஆதிமூலம் தொடங்கி எல்லா ஓவியர்களின் கோடுகளையும், வீச்சையும் ரசிக்க ஆரம்பிச்சேன்.

தமிழ்நாடு ஓவியத் தொழில் மையத்துல படிக்கிறப்ப சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். நவீன ஓவியத்தின் மேல இருந்த ஆர்வத்துல ஓவியர்கள் சந்ரு, ஆதிமூலம், புகழேந்தி, தனபால், வீரசந்தானம்னு ஒவ்வொரு ஆளுமைகளின் ஓவியங்களையும் தேடித் தேடிப் பார்த்தேன். ஒரு சிலரைத் தவிர, யாரையும் நேர்ல பார்த்ததில்ல.

அப்புறம், வார இதழ்கள்ல ஓவியம் தீட்டுற மணியம் செல்வன், மாருதி போன்ற ஆளுமைகளின் வேலைகள் எப்படியிருக்குனு கவனிச்சேன். ஓவியம் சம்பந்தமான நூல்களை வாசிச்சு என் அறிவை வளர்த்துக்கிட்டேன்...’’ என்ற தமிழ்ப்பித்தன் என்கிற ஜெயராஜ், தன் பள்ளியில் பல விஷயங்களைச் செய்திருக்கிறார்.

‘‘எட்டு வருஷங்களுக்கு முன்னாடி இந்த ஸ்கூல்ல ஓவிய ஆசிரியரா சேர்ந்தேன். அரசின் பாடத்திட்டங்களை வகுப்புல சொல்லித் தருவேன். ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் மாலைல சிறப்பு வகுப்பு எடுக்கறேன். இதுக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி சாரும், என் மூத்த ஓவிய ஆசிரியர் சேவியர் சாரும் உறுதுணையா இருக்காங்க.  

அந்தச் சிறப்பு வகுப்புல இலக்கிய இதழ்களைக் கொடுத்து படிக்கச் சொல்வேன். அப்பறம், நவீன ஓவியம்னா என்ன? அதிலுள்ள குறியீடுகளை நாம் எப்படி பயன்படுத்தணும்? கோடுகள், வண்ணங்கள் என்ன செய்யுது? ஏன் இந்த வண்ணத்தைப் பயன்படுத்துறோம்னு விளக்குவேன்.

‘ஒரு மரத்தை ஏன் அசையாமல் வரையணும். இயல்பில் அது அசைஞ்சிட்டேதானே இருக்கு. நீ வைக்கக்கூடிய பச்சைநிறத்திற்கும் உண்மையில் இருக்கிற பச்சைக்கும் வித்தியாசம் இருக்கில்லையா? அது எப்படி இருக்கு…’ இப்படி நுட்பமான விஷயங்களைக் கவனிக்க வச்சு கோடுகளைத் தீட்டச் சொல்லுவேன்...’’ என்றவர், மாணவர்கள் நூல்களுக்கு ஓவியம் வரைவது பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.

‘‘இப்ப மாணவர்கள் நிறைய கவிதைத் தொகுப்புகளுக்கு ஓவியங்கள் வரைஞ்சிட்டு இருக்காங்க. ஏற்கனவே, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகளுக்கு ஓவியங்கள் தீட்டியிருக்காங்க. ‘வகுப்பறை குறித்த நூறு சிந்தனைகள்’னு பொள்ளாச்சியிலிருந்து அம்சப்ரியா எழுதிய ெதாகுப்புக்கு நூறு ஓவியங்கள் வரைஞ்சாங்க! அடுத்து, எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதிய நூலுக்கு வரைஞ்சாங்க. இப்ப பெண்ணியம் குறித்த ஒரு முனைவரின் தொகுப்புக்கு ஓவியம் வரைஞ்சிட்டிருக்காங்க.

ஆர்வம் இருக்கிற மாணவர்களை மட்டுமே ஊக்கப்படுத்தறேன். இருந்தும், அந்த மாணவர்களின் பெற்றோருக்கு இதில் எதிர்காலம் இல்லைனு ஒருவித பயம். அதனால, ஓவியத்துல மேற்கொண்டு ஆர்வம் காட்டாம பசங்களை வேற கோர்ஸ் எடுக்கச் சொல்லி அதை நோக்கி பயணிக்க வைச்சிடறாங்க.அதனால என்ன... தங்கள் திறமையை ஏதாவது ஓர் இடத்துல அவங்க வெளிப்படுத்துவாங்கன்னு நம்பறேன்...’’ என்கிறார் பூண்டி ஜெயராஜ்.              
      
பேராச்சி கண்ணன்