பகவான்-50



என்றும் வாழ்வார் ஓஷோ!

பிறப்பும், இறப்பும் என்றுமே மனிதகுலம் அறிய விரும்பும் ஆதி ரகசியங்கள். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே பகவான், தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தார். தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கும்  எடுத்துக் கூறினார்.

* மத்தியப் பிரதேசத்தில் தலைநகர் போபாலில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் ராய்சென் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குச்வாடா என்கிற குக்கிராமத்தில் டிசம்பர் 11, 1931ல் ஓஷோ பிறந்தார். அவரது இயற்பெயர் சந்திரமோகன் ஜெயின்.

* d1955ல் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். சாகர் பல்கலைக் கழகத்தில் முதுகலை முடித்து ஆசிரியராக தன் வாழ்க்கையைத் துவக்கினார்.

* d1960களின் தொடக்கத்தில் நாடெங்கும் ஆன்மீகப் பிரசாரத்தை மேற்கொண்டு ஆச்சார்யா ரஜனீஷ் என்று அறியப்பட்டார்.

* சமூகம், மதம் குறித்த தன்னுடைய விமர்சனங்களை காரசாரமாக முன்வைத்தார். எனினும் மனிதனின் உடலியல் தேவை குறித்த அவரது கருத்துகளே ஊடகங்களால் அதிகமாக பேசப்பட்டு, மக்கள் மத்தியில் அவருக்கு ‘செக்ஸ் சாமியார்’ என்கிற இமேஜ் ஏற்பட்டது.

* d1966ல் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆசிரியப் பணியை முடித்துக்கொண்டு, முழுமையாக ஆன்மீகத் துறைக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.

* d1970ல் மும்பை மாநகரில் ஆன்மீகக் குருவாக தன் பணியைத் துவக்கினார். அவருக்கு ஏராளமான சீடர்கள் உருவானார்கள். அவரை ‘பகவான்’ என்று சீடர்களும், பக்தர்களும் அழைக்கத் தொடங்கினர். பகவானிடம் தீட்சை பெற்றவர்கள் புதிய சன்னியாசிகள் இயக்கமாக தங்களை கட்டமைத்துக் கொண்டனர்.

* d1974ல் பூனே நகரில் ஆசிரமம் அமைத்து நிலைகொண்டார். மேற்கத்திய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆசிரமத்துக்கு வந்து பகவானின் சீடர்களாக இணைந்தனர்.

* இந்தியாவில் பொதுசமூகத்தின் மரபான நம்பிக்கைகளை கேள்வி கேட்டதால் அவருக்கு அரசியல் அழுத்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1981ல் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கே சர்வதேச சமூகம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். ஒரேகான் மாநிலத்தில் தனக்கும், தன்னுடைய இயக்கத்தாருக்குமாக ‘ரஜனீஷ்புரம்’ என்கிற சர்வதேச நகரத்தை நிர்மாணித்தார்.

* d1985ல் ஒரேகானில் உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு மற்றும் ரஜனீஷ்புரத்தில் நிலவிய அதிகாரப் போட்டியின் காரணமாக அமெரிக்க அரசின் நேரடித் தலையீட்டை ஓஷோ எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ரஜனீஷ்புரத்தின் மீது கொலை மற்றும் போதைக் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஓஷோ கைது செய்யப்பட்டார். நாடு கடத்தப்பட்டார்.

*மீண்டும் புதிய சமுதாயத்தை உருவாக்கும் அவரது முயற்சிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு பயணித்தார். அமெரிக்க அழுத்தம் காரணமாக அவர் எங்குமே நிலைகொள்ள முடியவில்லை. இருபத்தியோரு நாடுகளில் அவர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார். 1986ல் மீண்டும் இந்தியாவுக்கே வந்தார்.

* d1989ல் இருந்து தன்னை ஓஷோ என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 1990ல் தன் உடலை விட்டு விலகினார்.

கடந்த ஐம்பது வாரங்களாக நாம் வாசித்த ஓஷோவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் இதுதான்.

ஓஷோ அரசாண்ட ரஜனீஷ்புரம், இப்போது ஒரு கிறிஸ்தவ இளைஞர் அமைப்பின் கோடைமுகாமாக செயல்பட்டு வருகிறது. பகவானின் பூனே ஆசிரமம், அவர் மறைவதற்கு முன்பு வழிகாட்டிச் சென்றதின் அடிப்படையில் இன்னமும் செயல்பட்டு வருகிறது.ஓஷோ, உலகில் இருந்தபோது இருந்ததைவிட இப்போது அவரைப் பின்தொடர்பவர்கள் பன்மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். அவர் உபதேசித்த கருத்துகள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோரால் வாசிக்கப்படுகிறது.

அவர் நமக்கு போதித்தவற்றில் ஒன்பது பாடங்கள் அடிப்படையானவை. ஓஷோவின் கருத்துகளாக இன்று விளங்கும் பல்லாயிரம் பக்கங்களின் சாரம் இவை.

1. நல்லது - கெட்டது, இனிப்பு - கசப்பு, இருள் - ஒளி, கோடை - குளிர்... இப்படி வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் எதிரெதிர் தன்மையோடு அனுபவியுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அனுபவங்களைப் பெறுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் முதிர்ச்சியடைந்து வருகிறீர்கள்.

2. யாரோ ஒருவராக நீங்கள் மாறாதீர்கள். ஏற்கனவே நீங்கள் தனித்துவமான சிறந்த படைப்புதான். நீங்கள் உங்களை மேலும் சற்று சரிசெய்துகொண்டால் போதும்.

3. உலகில் ஏற்கனவே நிலைத்திருக்கும் மகிழ்ச்சியை உற்று நோக்குங்கள். மரம், பறவை, ஆறு, காடு, கடல் என்று உலகில் இருப்பவை எல்லாமே மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். அவற்றின் ஓர் அங்கமாக உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

4. உங்கள் தோட்டத்தில் ஒரு மலர் பூத்தால், அதைப் பறிக்காதீர்கள். நீங்கள் அந்த மலரை நேசித்தால், அதை அப்படியே
விட்டுவிடுங்கள். அதைப் பறிப்பது உங்கள் மகிழ்ச்சியைப் பறிப்பதற்கு ஒப்பானது.

5. முதிர்ச்சி என்பது பொறுப்பை உணர்வது. உங்களை நீங்களே மற்றவராக இருந்து கவனித்தால், உங்களது பலம், பலவீனங்களை உணர
முடியும். உங்களை நீங்களே கவனிக்க சிறு அமைதி போதும்.

6. உங்களுடைய நல்லது, கெட்டதுக்கு உங்களைத் தவிர வேறு எவரும் பொறுப்பல்ல. உங்களைத் தவிர வேறு எவராலும் உங்களை கோபப்படுத்தவோ, மகிழ்ச்சிப்படுத்தவோ முடியாது.

7. அன்பில் விழும்போது குழந்தையாகவும், அந்த அன்பை வளர்த்தெடுக்கும்போது பெரியவராகவும் இருக்க வேண்டும். அன்பு என்பது ஓர் உறவல்ல. ஒரு நிலை. நீங்களே அன்பாக மாறுகிறீர்கள்.

8. உங்களுக்கு மேலானவரோ, கீழானவரோ உலகில் இல்லை. அதே நேரம் உங்களுக்கு இணையானவரும் எவரும் இல்லை. ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவன். நீங்கள் நீங்கள்தான். நான் நான்தான். என்னை நானும், உங்களை நீங்களும் அவரவர் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் யாரென்று கண்டுபிடித்துக் கொள்ள முடியும்.

9. நீங்கள் எதையெல்லாம் பெற்றீர்களோ, அவற்றிலிருந்துதான் வாழ்க்கைக்கான சூத்திரத்தைக் கண்டுபிடிக்கிறீர்கள்.மேற்கண்ட ஒன்பது வாக்கியங்களையும் திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். ஏதோ ஒரு கதவு திறக்கும். இருளில் வெளிச்சம் ஏற்றப்படும்.

சுருக்கமாகச் சொன்னால்,உங்களுடைய எல்லா கேள்விகளுக்குமான விடை, உங்களுக்குள்ளேயே இருக்கிறது. சிறு தூண்டுதல் கிடைத்தால் உங்கள் பிறப்புக்கான ரகசியத்தை உணர்ந்துவிடுவீர்கள். இறப்புக்கான நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள். உங்களை நீங்களே அறிய அமைதிதான் உங்களிடம் இருக்கும் கருவி.பகவான், அமைதியில்தான் வாழ்கிறார். அந்த அமைதி நமக்கும் உள்ளத்தில் வாய்த்தால், உடலை நீங்கியபிறகும் நாமும் வாழ்வோம்.

(தரிசனம் முடிந்தது)

பகவானின் ஒன்லைன் வொண்டர்ஸ்!

* இருங்கள்; இருக்க முயற்சிக்காதீர்கள்.

* உனக்குள் இருந்து பிறக்கவில்லையெனில் எவருடைய கட்டளையையும் ஏற்காதே.

* உண்மை உனக்குள் இருக்கிறது. அதை வெளியே தேடாதே.

* அன்பு என்பது பிரார்த்தனை.

* வாழ்க்கை என்பது இப்போது, இந்த நொடியில் உங்கள் உள்ளங்கைகளுக்குள் இருக்கிறது.

*  நீந்தாதீர்கள். மிதக்க முயற்சியுங்கள்.

* ஒவ்வொரு நொடியும் இறக்க முயற்சியுங்கள். அப்போதுதான் அடுத்த நொடியில் நீங்கள் புதிதாகப் பிறக்க முடியும்.

* யாரென்றே தெரியாத ஒருவரிடம் உங்களால் காட்டமுடியும் அன்புதான் அன்பின் உச்சம்.

* வலியைத் தவிர்க்க விரும்பினால், மகிழ்ச்சியையும் தவிருங்கள். இறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள், வாழ்க்கையையும் தவிர்க்க வேண்டும்.

* யாருடனும் போட்டியிட்டு வெல்லவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்களை நீங்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்.

* வாழ்வு கொடுக்கக்கூடிய எல்லாவற்றையும் அவற்றின் தன்மைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்ளும் எவரும் புத்தனாகலாம்.

* ஒரு பொருளின்மீது ஆசைப்படுவதற்குமுன்பு ஒன்றுக்கு பத்துமுறை யோசியுங்கள். உங்கள் ஆசை நிறைவேறியபிறகும் திருப்தி மட்டும் கிடைக்காது.

* உள்ளம்  நல்ல வேலையாள்; மோசமான எஜமான்.

* வாழ்க்கை இயல்பில் அர்த்தமற்றது. அர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்பை தருவதுதான் வாழ்க்கை.

* கூட்டத்தில் ஒருவனாய் நிற்காதே. உனக்கு திணிக்கப்படும் நாட்டையோ, மதத்தையோ, இனத்தையோ ஏற்காதே. உலகம் மொத்தமும் உன்னுடையது. நீயே ஏன் உன்னை சிறு சிமிழுக்குள் அடைத்துக் கொள்கிறாய்?

* எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருக்காதே. நில், கவனி. தேட விரும்புவது கிடைக்கும்.

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்