இரண்டு நாள்ல நடக்கிற த்ரில்லர்! கண்ணை நம்பாதே சீக்ரெட்ஸ்…



‘‘அருமையான த்ரில்லரா ‘கண்ணை நம்பாதே’ வந்திருக்கு. முடிந்தவரையில் அழுத்தமாகவும், விரைவாகவும் ஒரு நல்ல என்டர்டெயினரை கொண்டு வரணும்னு நடந்த முயற்சி இது.

த்ரில்லர் படத்துக்கும் மேலே இதில் இப்ப இருக்கிற ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லியிருக்கேன். முதல் பாதி முழுக்க, அடுக்கடுக்கா வந்து விழுகிற முடிச்சுகளும், அடுத்த பாதியில் அவை அவிழ்கிற விதமும் அருமையாக வந்திருக்கு.

உண்மையில் த்ரில்லரில் உட்கார வைக்கிறது கடினமான வேலை. அதை உணர்ந்தே இருக்கிறோம். இப்ப சீசன் இதுதான்னு நினைச்சிட்டு எதையும் செய்யலை. கதையல்ல.. கதை சொல்லலே கலை என்பதை ‘கண்ணை நம்பாதே’ நிரூபிக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

உரிய மதிப்போட கமர்ஷியல் வெற்றியைக் குறிவைச்சு உழைப்பை விதைக்கிறோம். நிச்சயம் அறுவடை செய்வோம்...’’ என திடமாகப் பேசுகிறார் இயக்குநர் மு.மாறன். ‘இரவுக்கு ஆயிரம் கண்களில்’ அழுத்தமாகத் தெரிய வந்தவர்.
‘கண்ணை நம்பாதே’னு எதைச் சொல்ல வர்றீங்க?

இரண்டு நாள்ல நடக்கிற கதைதான் படம். ஆடியன்ஸ்சும் யோசிக்கணும்னு சில அம்சங்களை விட்டு வைச்சிருக்கேன். சீட்டின் நுனியில் உட்கார்ந்து மக்கள் படம் பார்க்கணும்னு நினைக்கும்போது அதற்கான பிரத்யேக வேலைகள் செய்ய வேண்டியிருக்கு.

எது ஒன்றை செய்யும்போதும் யோசிக்கணும். அப்படி செய்யாத விதத்தில் இந்த ஹீரோ படுகிற பாடும், பிறகு அவரே மீண்டு வர்றதும்தான் கதை.
எதையும் சட்னு நம்புற இடத்தில் நாம் இருக்கோம். கெட்டதுனு நினைக்கிற எல்லாமும் கெட்டது இல்லை. நல்லதுனு முடிவுக்கு வர்ற விஷயமும்
அப்படியில்லை.

எதையும் கொஞ்சமா சந்தேகப்படலாம். அதற்கான பல இடங்கள் இதிலிருக்கு. ஒரு விஷயத்தில் களமிறங்கி, திருப்பங்களோடு நம்மை வேற இடத்திற்கு கொண்டு போகிற விஷயங்களும் இதில் நடந்திருக்கு. கூடவே காதலும் நல்லபடியாக வந்திருக்கு.

நமக்கு முன்னால் இருக்கிற பிரச்னைகளை, நிலைமைகளை எப்படி பார்த்து அனுசரிக்கணும், அணுகணும்னு ஓர் உளவியலும் கலந்து சொல்றோம்.
தமிழ்ச் சினிமாவை தொடர்ந்து கவனிச்சுக்கிட்டு இருக்கிறவர்களுக்கு எப்பவும் ஞாபகத்தில் இருக்கிற இடத்தில் இந்தப் படம் அமையும்னு நம்புகிறேன்.
உதயநிதி எப்படியிருக்கார் ?

என்னோட ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ அருள்நிதியோட அமைஞ்சது. அப்ப நண்பர்கள் வேடிக்கையாக ‘அடுத்த படம் உதயநிதியோடு பண்ணிடு’னு சொன்னாங்க. அப்படித்தான் நடந்தது!உதயநிதி தமிழக அரசியலில் முக்கியமானவர்.

ஆனால், எதையும் மனசிலும், தலையிலும் ஏத்திக்கிறவரே இல்லை. கதையை ஒருதடவை கேட்டுட்டு ஓகே பண்ணிட்டால் அவர்கிட்டேயிருந்து எந்த இடைஞ்சலும், தொந்தரவும் இருக்காது. நமக்கே படத்தை நல்லபடியாக முடிக்கணும் என்ற அக்கறை பெருகி வந்திடும்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ எல்லாம் இன்னைக்கும் ரசிச்சு ரசிச்சுப் பார்க்கிற படம். மக்கள் தயக்கமில்லாமல் அவரை நாயகனா ஏத்துக்கிட்டாங்க.
நான் அவருக்காக ஒரு காதல் கதையைத்தான் ரெடி பண்ணிட்டு போனேன். அவருக்குப் பிடிச்சது. ஆனாலும், ‘அதிகமாக லவ் ஸ்டோரி பண்ணிட்டேன். இப்ப ஒரு க்ரைம் ஸ்டோரி பண்ணிக்கலாம்’னு சொன்னார்.

அப்படி அமைஞ்சதுதான் ‘கண்ணை நம்பாதே’. மறுபரிசீலனைகளுக்கு எந்தவிதத்திலும் என் கதை இடம் வைக்கலை. அவரோட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நான் பதில் மரியாதை செலுத்தணும். இதை ஒரு வெற்றியாக அவருக்கு சமர்ப்பிக்கணும். எத்தனை டேக் ஆனாலும் நான் நினைக்கிறதை கொண்டு வந்திடணும்னு அவரும் துணையாக இருந்தார். ஜாலியாகவும் இருப்பார். பொறுப்புனு வந்திட்டால் அவர் இயல்பு வேற மாதிரியிருக்கும்.

ஒரு விஷயத்தை சின்னச்சின்னதாக மெருகேற்றுவது அவருக்கு கை வந்த கலை. ஆனால், அவர்மேல சுமையெல்லாம் தூக்கி வைக்கலை.  
தூக்கி வைச்சாலும் தாங்குவார் போல! நீங்க உங்களில் ஒருத்தரா உதய்யை நிச்சயமாக உணர முடியும்’’ஆத்மிகா ஜோடி…

ஆமாம். ‘மீசையை முறுக்கு’, ‘நரகாசுரன்’ படங்களில் நடிச்சிட்டு அடுத்தபடியாக வந்திருக்காங்க. திரையில் அவங்க நல்ல ஜோடி. நமக்கு என்ன திரையில் வேணும்ங்கிறதை நல்லா புரிஞ்சுக்கிறதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம் உண்டு. கதைக்குத் தேவையான காதலில் அப்படி பொருந்தி நின்னார்.

கூடவே ‘ரோஜா கூட்டம்’ படத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்துக்கும், பூமிகாவுக்கும் இதில் மறுபடியும் சரி ரோல். பிரசன்னாவும் இருக்கார். படத்தின் முக்கியமான இடங்களில் நிற்கிறாங்க. கதையைக் கேட்டதும் அவரவரோட பகுதி அவரவர்களுக்கு பிடிச்சுப் போச்சு.

இப்ப இருக்கிற ஹீரோக்கள் எல்லாம் வேற மாதிரி. ‘அடுத்தவங்களுக்கு சீன் எப்படி, நம்மைவிட அதிகமா, குறைவா’ன்னு நினைச்சுப் பார்க்கிறதில்லை. அவங்க போர்ஷன் எப்படி வருதுனு மட்டும் கவனமா இருந்துக்கிட்டு பொறுப்பை நமக்கிட்டே விட்டுடுறாங்க. இது கூட நல்லதுதான். இரண்டு பேருக்கும் நாம் நியாயம் செய்ய முடியுது!

இந்தப் படத்தில் நட்பும், காதலும் முக்கிய அம்சங்களா சேர்ந்திருக்கு. தயாரிப்பாளர் விஎன்ஆர் இந்தப் படத்திற்காக எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். இன்னும் விசேஷமா சாம் சி.எஸ். இசை வேற…எனக்கு சாம் ரொம்பவும் சேர்ந்து வருவார். த்ரில்லர் வகைப்படத்துக்கு பின்னணி அமைப்பது கடுமையான பணி. கதையோட கதையா இறங்கி அடிச்சிருக்கார். அவருக்கு எல்லாமும் முடியும்னு காண்பிக்கிற இடமாகவும் இந்தப் படம் அமைஞ்சிருக்கு.

‘பரியேறும் பெருமாள்’ படம் செய்த தர்தான் இதற்கும் கேமரா. அவருக்கு வேறு படமெல்லாம் வந்தது. அதை ஒதுக்கி வைச்சிட்டு இந்தப் படத்தைத்தான் கையில் எடுத்தார். ‘பரியேறும் பெருமாளை’ ஒரு தினுசில் தனிச்சு காட்டினார் இல்லையா? அந்த அம்சத்தை இதில் கையில் எடுத்திருக்கார். படப்பிடிப்புக்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும்னு என் மனசுல கணக்குப் போட்டிருப்பேன். அதற்கு தர் கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார்.

ஒரு த்ரில்லர் படத்திற்கான விறுவிறுப்புடன் அமைதியாக உச்ச பரப்புக்குச் செல்லும் கதை அமைப்பு இது. நிச்சயம் தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்குப் புது வண்ணம் தருகிற படைப்பாகவே இருக்கும் இந்த ‘கண்ணை நம்பாதே’.