பாண்டிராஜுக்கு தேங்க்ஸ்! நெகிழும் நட்டி நட்ராஜ்



ஒரே படம் ஒரு டன் பொக்கேக்களை நீட்டுமா..? நட்டி நட்ராஜுக்கு அப்படி அமைந்திருக்கிறது!‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் சிவகார்த்திகேயனின் அன்புத் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் அய்யனாராக நடித்து முத்திரை பதித்தாலும் பதித்தார்... எல்லா திசைகளில் இருந்தும் ஹார்ட்டின்களும் பூங்கொத்துகளும் இவரைத் தேடி வந்தபடி இருக்கின்றன.

‘‘ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எதிர்பாராத நண்பர்கள்கிட்ட இருந்தும் பாராட்டுகள் குவியுது. அத்தனையும் படத்தோட இயக்குநர் பாண்டிராஜ் சாருக்குதான் போய்ச் சேரணும். கதையை நகர்த்தும் அருமையான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தவர் அவர்தான்.

பொதுவா மாமன் - மச்சான் உறவுனாலே தொடக்கம் முதலே ஒரு முட்டல் மோதல் இருந்துட்டுத்தான் இருக்கும். ஆனா, கடைசில அவங்க ரெண்டு பேருக்கும் இடைல ஒரு ஸ்டிராங் பாண்டிங் வந்துடும். ஒரு நல்ல ரோல் பண்ணின திருப்தி இருக்கு பிரதர்...’’ மனதின் ஆழத்தில் இருந்து சொல்லி பூரிக்கிறார் ஒளி ஓவியரும், நடிகருமான நட்டி நட்ராஜ்.ஹீரோவா போய்க்கிட்டிருக்கும்போது, திடீர்னு வில்லனாகிட்டீங்க..?

எப்பவும் நான் ஹீரோவாதான் நடிப்பேன்னு சொன்னதே இல்லையே! மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் சாரின் ‘முத்துக்கு முத்தாக’லயே கேரக்டர் ரோல் பண்ணியிருப்பேன். அதுல எங்கூட நடிச்ச இயக்குநர் ஜெகன் அப்புறம் என்னோட நண்பர் லிஸ்ட்ல வந்துட்டார். ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ல இப்படி ஒரு ரோல் எனக்கு கிடைக்க காரணமே அவர்தான். ஜெகன் சார் சொல்லித்தான் பாண்டிராஜ் சார் என்னைக் கூப்பிட்டு அய்யனாராக்கினார்.

ஒரு நல்ல கதை அமைஞ்சா, கண்டிப்பா அந்த படத்தை மிஸ் பண்ணக்கூடாதுனு நினைப்பேன். இதுல கதையும் சூப்பர். கேரக்டரும் சூப்பர். தவிர, படத்துல நான்தான் கதையை நகர்த்துறேன் என்றதும் இன்னும் சந்தோஷமாகிடுச்சு. நினைச்சது மாதிரியே எல்லாருமே இப்ப பாராட்டுறாங்க.
எப்படி இருந்தது ‘நம்ம வீட்டு’ அனுபவம்?

சூப்பரா! பாண்டிராஜ் சார் ஒவ்வொரு ஃப்ரேமையும் மைண்ட்ல வச்சிருக்கார். பிரமிச்சிட்டேன். உதாரணமா, பத்தாவது சீன் ஷூட் பண்றாங்கன்னா... அதுக்காக ஒரு லைட்டிங், அரேஞ்ச்மென்ட்ஸ் வச்சிருப்பாங்க. நாம அதை மனசுல வச்சு நடிச்சிட்டிருப்போம். திடீர்னு லைட்டிங் மாறும். அந்த டைம், பாண்டிராஜ் சொல்வார், ‘கொஞ்சம் அப்படி நில்லுங்க... இங்கிருந்து வாங்க’னு மட்டும் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து ஷாட்ஸ் எடுத்துக்குவார்.
நமக்கு சில நேரங்கள்ல எதுக்காக இதுனு புரியாது. ஆனா, படம் பார்க்கும்போதுதான் தெரியும். அது நாற்பதாவது சீன்ல கரெக்ட்டா மேட்ச் ஆகியிருக்கும்!

‘எப்படித் தலைவா’னு அவர்கிட்டயே ஆச்சரியப்பட்டுக் கேட்டுட்டேன். ‘எல்லாம் மனசுக்குள்ள ஓடும் பாஸ்’னு கூலா சொல்றார்.
ஸ்கிரிப்ட் பவுண்டட் ஆக இருந்தாலும், ஷூட் அப்ப டயலாக்ஸ்ல சில மாற்றங்கள் செய்வார். ‘இது சரியா வருதானு பாருங்க’னு நம்மகிட்ட சஜஷன் கேட்பார். அவர் செஞ்ச மாற்றம் அவ்வளவு பர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகும்.  

செட்டுலயும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ். நாங்க எல்லாருமே பாரதிராஜா சார்கிட்ட உட்கார்ந்து அவரை பேச வச்சு கேட்போம். அவரோட ‘பொம்மலாட்டம்’ படத்துல ஒரு மூணு நாள் கேமரா ஒர்க் பண்ணிக் கொடுத்திருக்கேன். அதில் இருந்து அவர் பழக்கம். ‘நீ ஒரு பெஸ்ட் கேமராமேன்’னு என்னை பார்க்கற நேரமெல்லாம் பாராட்டுவார்.

ஏத்தங்கோட்டைனு ஒரு இடம். அங்க ஒரு வீட்டுல ஷூட். அந்த வீட்டுல பாரதிராஜா சார் போர்ஷன் ஷூட் பண்ணும்போது, அவர் சொன்னார். ‘‘புதிய வார்ப்புகள்’ படம் இங்கதான் ஷூட் பண்ணினது’னார். அந்த வீட்டைப் பத்தி பாரதிராஜா சார் நிறைய சொல்லுவார்.

‘அப்ப அந்த ஏரியாக்கு வர பஸ் வசதி கிடையாது. ஒரு மணிக்கு லன்ச் பிரேக் விட்டுடுவேன். ஆனா, ஒத்தையடிப் பாதையைப் பிடிச்சு ஆட்கள் சாப்பாட்டோட நடந்து ஸ்பாட்டுக்கு வருவதற்குள் நாலு மணியாகிடும். பசியோடு ஆர்ட்டிஸ்ட்ஸ் நடிச்சிட்டிருப்பாங்க. அதெல்லாம் ஒரு கோல்டன் பீரியட் மிஸ்டர் நட்டி’ம்பார்.

அதைப் போல சிவாவும், சூரியும் ரொம்பவும் ஃப்ரெண்ட்லி. அவங்க ஆஃப் த ஸ்கிரீன்லயும் கலகலனுதான் இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து யாரையாவது கலாய்ச்சுகிட்டே இருப்பாங்க. இதுல காமெடியே, யாரைக் கலாய்க்கிறாங்களோ அவங்களுக்கு அது தெரியாது! மத்தவங்களோடு சேர்ந்து அவங்களும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க!   

எப்படி இருக்கார் தயாரிப்பாளர் நட்டி..?
ஹேப்பியா இருக்கார். முன்னாடி ‘சக்கர வியூகம்’ படத்தை தயாரிச்சு நடிச்சேன். பொதுவா எனக்கு யாரையும் சார்ந்திருக்க பிடிக்காது. நானே பணம் சம்பாதிச்சு, படம் எடுத்து நடிச்சேன். இப்ப பர்சனலா எனக்கும் செலவுகள் கொஞ்சம் அதிகரிச்சிருக்கு. அதனால தயாரிக்கறதை தள்ளி வச்சிட்டேன். நல்ல கதை, நல்ல கேரக்டர்ஸ் நிறைய பண்ண விரும்புறேன்.

ஆக்ட்டிங் கரியர்ல மெதுவா ட்ராவல் ஆகறீங்களே..?

நல்லதுக்குத்தான். நடிச்சா நல்ல கதையில நடிக்கணும். ஒரு மரியாதையான வெற்றியை நோக்கித்தான் பயணிச்சிட்டிருக்கேன். கதையை நகர்த்தும் கேரக்டர்லயும் நடிக்க காத்திருக்கேன்.

சில கதைகள் கேட்கும் போதும், அது படமாகி ஃபைனல் பார்க்கும்போதும் நல்லா இருக்கும். ஆனா, தியேட்டர்ல போய் பார்த்தா வேற மாதிரியா வந்து நிற்கும். அப்படி கசப்பான அனுபவங்களும் கிடைச்சிருக்கு. அதனாலயே அவசரப்படாமல் பயணிக்கறேன்.

எனக்கு சவாலா தெரியற படங்களுக்கான ஒளிப்பதிவு வாய்ப்பு வரும் போது அதையும் பண்றேன். வருஷத்துக்கு ஒரு படமாவது ஒளிப்பதிவு பண்றேன். தெலுங்கில் பண்ணிட்டிருக்கேன்.

அடுத்து ஹீரோவா ‘காட்ஃபாதர்’, ‘சண்டிமுனி’, ‘சிலுக்கு மேட் இன் காஞ்சிபுரம்’, ‘ரணகளத்திலும் கிளுகிளுப்பு’னு படங்கள் பண்ணிட்டிருக்கேன். இதுல ‘காட்ஃபாத’ரும், ‘சண்டிமுனி’யும் முழுப்படமும் ரெடியாகி, ரிலீஸுக்கு காத்திருக்கு.எல்லாருமே இப்ப வெப்சீரீஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாங்களே..?

ஆமா. புதுப்புது முயற்சிகளுக்கு ஸ்பேஸ் அங்க கிடைக்குது. சினிமானா மொத்தமா ரெண்டு, ரெண்டரை மணி நேரத்துக்குள்ள சொல்லியாகணும். ஸோ, டீட்டெயிலிங் பண்ண முடியாது. ஆனா, வெப்சீரீஸ் அப்படியில்ல. சென்ஸார் பிரச்னையும் கிடையாது. சொல்ல வரும் விஷயத்தை நினைச்ச மாதிரி தெளிவா சொல்ல முடியும். எல்லா இடங்கள்லயும் வெப்சீரீஸ் ரீச் ஆகுது. பேசப்படுது. ஆனா, இனிமே இதுதான் ஃப்யூச்சரானு கேட்டா அதுக்கான பதில் எங்கிட்ட இல்ல!
    
மை.பாரதிராஜா