ரிலீசுக்கு முன்பே பரிசு கொடுத்தவர் அஜித்தான்!



இயக்குநர் துரை வி.இசட். சொல்லும் ரகசியம்

‘‘இது என்னோட முதல் ஹாரர் படம். பெரும்பாலும் நான் பேய் படங்கள பார்க்க மாட்டேன். பேய் நம்பிக்கையும் கிடையாது.

அப்படிப்பட்ட என்னையே ஹாரர் படம் இயக்க வச்சிருக்கார் சுந்தர்.சி. சார். அதுக்காகவே அவருக்கு நன்றி சொல்லிக்கறேன் ஆக்சுவலா இந்தப் படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சிம்புகிட்ட ஒரு கதையை சொல்லியிருந்தேன். அவருக்கும் அந்தக் கதை பிடிச்சிருந்தது. அதை அவர் விடிவி கணேஷ்கிட்ட சொல்லியிருக்கார். அவர் உடனே அதை தயாரிக்கவும் முன்வந்துட்டார்.

அது தொடர்பா பேசறதுக்காக கணேஷ் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கதான் சுந்தர்.சி சாரை பார்த்தேன். பேச்சுவாக்குல சுந்தர் சாருக்கு ஒரு பேய்க் கதையை சொல்லப் போக... அவருக்கும் அது பிடிக்க... சுந்தர் சாரே ஹீரோவாநடிக்கறேன்னு சொல்ல... இதோ படம் ரிலீசுக்கு ரெடி. பேயை விட கொடூரமான விஷயம் ஒண்ணு படத்துல இருக்கு.

அது நெஞ்சை உறையச் செய்யும் உண்மையும் கூட! அப்படி ஒரு ஸ்கிரிப்ட் அமைஞ்சதால மேக்கிங்ல மிரட்டியிருக்கோம்...’’ திருப்தியாகப்பேசுகிறார் இயக்குநர் துரை வி.இசட். அஜித்துக்கு ‘முகவரி’, விக்ரமிற்கு ‘காதல் சடுகுடு’, சிம்புவிற்கு ‘தொட்டிஜெயா’ என ஹிட்களைக் கொடுத்தவர். இப்போது சுந்தர்.சி நடிப்பில் ‘இருட்டு’வை இயக்கியிருக்கிறார்.அது என்ன பேயைவிட பயமுறுத்தற விஷயம்..?

இப்பவே சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும்! ஆனா, படத்தைப் பார்த்துட்டு நீங்க நெட்ல போய் தேடினாலும் அது புதிரா தோணும்!
இந்தப் படத்துல சுந்தர்.சி. சார் தவிர தன்ஷிகா, விமலா ராமன், சாக்‌ஷி சௌத்ரி, யோகிபாபு, விடிவி கணேஷ்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. விமலா ராமன் தமிழ்ல ரீஎன்ட்ரி ஆகறாங்க. வசனங்களை என்னோடு சேர்ந்து இந்திரா சௌந்தர்ராஜன் சார் எழுதியிருக்கார்.

உங்க படங்கள்ல எழுத்தாளர்களுக்கு ஒரு தனியிடமிருக்கே...?
ஆமா. எப்பவும் ஒரு ரைட்டர் கூட இருக்கறது பிடிக்கும். முழு ஸ்கிரிப்ட்டையும் பண்ணிடுவேன். ஸ்கிரிப்ட் பண்ணும்போதே, மெயின் டயலாக்ஸையும் எழுதிடுவேன். பாலகுமாரன் சார்கிட்ட ரெண்டு படங்கள் ஒர்க் பண்ணிட்டேன். அவர் என்கிட்ட அடிக்கடி கேட்பார்... ‘உனக்கு எதுக்கு டயலாக் ரைட்டர்?’

‘இல்ல சார்... எனக்கு நீங்க வேணும்’னு உறுதியா நிப்பேன். தனியா உட்கார்ந்து டயலாக் எழுத யோசிச்சா ப்ளாங்கா இருக்கு. ஆனா, இன்னொருத்தர் அவுட்புட்ல நமக்கு வேண்டியதை எடுத்தக்கறது ஈசியா இருக்கு. தவிர இது மாதிரி நேரங்கள்ல நம்மையும் அறியாம ஏற்படும் தவறுகளை ரைட்டர்ஸ் சுட்டிக்காட்டி சரி செய்துடுவாங்க.

ரைட்டர்ஸ் கூட உட்கார்ந்து பேசுவது நல்ல அனுபவம். பட்டுக்கோட்டை பிரபாகர் சார் கூட உட்கார்ந்து பேசறது கார்ப்பரேட் அனுபவத்தைத் தரும். ஜெயமோகன் சார்கிட்ட அரைமணி நேரம் கதை சொன்னா போதும். அவர் உலக நடப்புகள்ல இருந்து உலக சினிமாக்கள் வரை நாம சொன்னது தொடர்பா இருக்கற அத்தனையையும் மணிக்கணக்குல சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்திடுவார்.

இதுவரை நான் ஒர்க் பண்ணின எந்த ரைட்டர்ஸ் கூடயும் ஈகோ பிரச்னை ஏற்பட்டதில்லை. ஸ்கிரிப்ட் தொடர்பா விவாதங்கள் நடக்கும். மத்தபடி சரியான புரிதலோடதான் பயணப்படறேன். ஏன்னா, எழுத்தாளர்களை நான் மதிக்கறேன். அந்த வகைல இந்த ‘இருட்டு’ படத்துக்கு அப்புறம் இந்திரா செளந்தர்ராஜன் சார் எனக்கு காட்ஃபாதரா ஆகிட்டார்!

‘முகவரி’ துரைக்கும் ‘இருட்டு’ துரைக்கும் என்ன வித்தியாசம்?
‘முகவரி’ இயக்குநர் துரை சினிமா அனுபவமே இல்லாதவர். காலேஜ் படிக்கும்போதே, டைரக்‌ஷனுக்கு வந்துட்டவர். யார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதவர். அப்படிப்பட்டவரை அஜித் சார், என்.கே.விஸ்வநாத் சார், தேவா சார், பி.சி.ராம் சார், தோட்டாதரணி சார், ரகுவரன் சார், வைரமுத்து சார் எல்லாம் மோல்ட் பண்ணினாங்க.

‘எனக்கு என்ன வேணும்’னு நான் தெளிவா இருந்தேன். அதனாலயே அஜித் சார் முதல் ரகுவரன் சார் வரை எல்லாரும் என்னை அரவணைச்சாங்க.
என் ஒர்க் பார்த்துட்டு ‘முகவரி’ ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே அஜித் சார் புத்தம் புது காரை பரிசளிச்சார்! பொதுவா இது மாதிரியான பரிசுகள் ஹிட்டுக்கு பிறகுதான் கிடைக்கும். எனக்கு மட்டுமே ரிலீசுக்கு முன்னாடி கிடைச்சது!

இதை அஜித் சார்கிட்ட சொன்னப்ப, ‘நான் நடிச்ச சிலபடங்களை டப்பிங் பேசறப்ப எனக்கே பிடிக்காமப் போயிருக்கு. ஆனா, ‘முகவரி’ அவ்வளவு பிடிச்சிருக்கு. டப்பிங் பேசறப்ப என்னையும் அறியாம பல இடங்கள்ல நெகிழ்ந்துட்டேன்... உண்மைல நான் உங்களுக்கு பத்து கார்களுக்கு மேல பரிசளிக்கணும்’னு சொல்லி என் தோள்ல கை போட்டார்.

ஒரு படம் ரிலீசாகறதுக்கு முன்னாடியே ஓர் அறிமுக இயக்குநரைப் பாராட்டி பரிசும் கொடுத்த அஜித் சார் ரியலி ஜெம்! என்ன சொல்றார் உங்க ஹீரோ சுந்தர்.சி?சுந்தர்.சி சார் சிம்பிள் அண்ட் ஹம்பிள். துளியும் பந்தா இல்லாதவர். சினிமா, கதை தவிர வேற எதையும் பேசினதில்ல. அவருடைய படைப்புகளைப் பார்த்துட்டு, அவரைப் பத்தி நாம ஒரு மைண்ட்செட்ல இருப்போம். ஆனா, அவர்கூட பேசும்போது நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கூட்டிட்டுப் போயிடுவார். அவ்வளவு நாலேஜ். டெக்னிக்கலி டேலன்டட்.

ஒரு குருவே இல்லாம சினிமாவுக்கு வந்துட்டோமேனு ஓர் ஏக்கம் எனக்குள்ள இருந்துகிட்டே இருந்தது. சுந்தர்.சி. சார் கூட இந்தப் படம் பண்றப்ப அந்த ஏக்கம் போயிடுச்சு. ‘நீங்கதான் என் டீச்சர்’னு அவர்கிட்ட சொன்னப்ப சிரிச்சார். 38 படங்கள் இயக்கியவர் அவர். ஆனா, அவர் செட்டுக்குள் வந்துட்டார்னா நடிகரா மட்டும்தான் இருப்பார். மறுபடியும் சார் கூட படம் பண்ணணும்னு விரும்பறேன்!                        

மை.பாரதிராஜா