கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-32



கேட்டதெல்லாம் தரும் மன்னார்குடி ராஜகோபாலன்

நாரதர் வாயிலாக கண்ணன் வைகுண்டம் ஏகிவிட்டதை அறிந்து, கோவிந்த முனிவரும் கோபிரளயர் முனிவரும் விக்கித்துப் போனார்கள்.
‘‘தவம் செய்து பகவானைக் கண்டவர்கள்தான் உண்டு. ஆனால், அந்த தவத்தில் மெய் மறந்து பரம் பொருளைக் காணத் தவறிய எங்களைப் போல அபாக்யசாலிகள் எங்கும் கிடையாது...’’ என்றபடி இருவரும் அழுதார்கள்.

அதைக் கண்ட நாரதரின் மனம் உருகியது. இரு முனிவர்களையும் தேற்றினார். அவர்கள் சமாதானம் அடையவில்லை.உடனே நாரதருக்கு ஒரு யோசனை வந்தது. ‘‘முனிவர்களே! நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், நடக்கப் போவதை நமது செயலால் மாற்றலாம்!’’ நாரதர் இப்படிச் சொன்னதும் இருவரும் அழுவதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள்.

இது நாரதருக்கு மனநிறைவைத் தந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தார். ‘‘ஆம். இந்த செண்பகாரண்யம் மிகப் பெரிய ஒரு புண்ணியத் தலம். இங்கு பரமேஸ்வரன் மாலவனைப் பூஜித்து வரமாக திரிசூலத்தைப் பெற்றார்.

ஆகவே நீங்களும் மணம் மிகுந்த இந்த வனத்தில் மனம் ஒன்றி அவரை வேண்டுங்கள். அவர் உங்களுக்காக மீண்டும் கண்ணனாகப் பிறப்பார்! நம்புங்கள். நாராயண நாமம் உங்களுக்கு துணை நிற்கும்...’’ என்று சொல்லிவிட்டு வானவீதியில் பறந்து செல்ல ஆரம்பித்தார் அந்த தேவ ரிஷி.

‘‘இப்படித்தான் ஒருமுறை, வானத்தில் போகும்போது எதேச்சையாக துருவனைக் கண்டு அவனுக்கு உபதேசித்தார். அவன் மாதவன் அருளால் இன்று நட்சத்திரமாக மின்னுகிறான். அதேபோல் நாமும் நம் எண்ணங்கள் ஈடேறப் பெறுவோம்...’’ நாரதர் பறந்து சென்ற திசையைப் பார்த்தபடியே கோவிந்த முனிவர் சொன்னார்.  

‘‘நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நிரம்பிய பானையால்தான் மற்றொரு காலிப் பானையை நிரப்ப முடியும். நமது மனம் என்னும் காலிப் பானையை தனது உபதேசத்தால் நிரப்பியவர் நாரதர் என்னும் அமுதசுரபி ஆயிற்றே! ஆகவே நம் முயற்சி வீண் போகாது...’’ கோபிரளயர் ஆனந்தித்தபடியே சொன்னார்.

இதன்பிறகு நொடி கூடத் தாமதிக்காமல் இரு முனிவர்களும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார்கள். அவர்கள் ஜெபித்த நாராயண நாமம் வனமெங்கும் எதிரொலி செய்து, இது என்ன புதுவிதமான வண்டின் ரீங்காரம் என்று சிந்திக்க வைத்தது.

உண்ணாமல் உறங்காமல் ஆடாமல் அசையாமல் தவம் செய்த அவர்களை வானவர்கள் ஆச்சரியத்தோடு நோக்கினார்கள். அவர்களிடத்தில் ஏதோ காந்த சக்தி இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி புலியும் மானும் அருகருகே பகை மறந்து, அவர்கள் இருவரும் சொல்லும் நாராயண நாமத்தின் சுவையில் சொக்கிப்போய் நிற்கும்?

இரவும் பகலும் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு சென்றது. ஆனால், அவர்களது முயற்சி அயர்ச்சி அடையவில்லை. திடீரென்று கருடனின் சத்தம் மங்கள ஒலியாக அந்த வனத்தில் கேட்டது. தனது பொன்மயமான சிறகுகளை விரித்து வானத்தில் பறந்து வந்தார் கருடாழ்வார்.

சரியாக இந்த இரு முனிவர்களும் தவம் செய்யும் இடத்தை நோக்கி இறங்கி வந்தார். உயர வானத்தில் பறக்கும்போது கருடாழ்வாரின் முதுகில் அழகிய கரு மேகம் ஒன்று ஒட்டிக் கொண்டது போல் அமர்ந்திருந்தார் கேசவன். திருக்கரங்களில் என்றும் அவரை விட்டுப் பிரியாத சங்கு சக்கரங்கள்.
சுதர்சன சக்கரம் தனது ஒளியால் சூரியனுக்கு சவால் விட்டபடி மாலவன் கரத்தில் சுழன்று கொண்டிருந்தது.

மற்றொரு கையில் கோடி முழு நிலவின் பொலிவோடு பாஞ்சஜன்ய சங்கு. தாமரையைப் போன்ற கரிய நீண்ட கண்கள். கருமேகத்தில் மின்னும் விண்மீனைப் போன்ற பலவகை ஆபரணங்கள். இந்த அழகிய திரு உருவை வர்ணிக்க முடியாமல் வேதங்களும் உபநிஷத்துகளும் வாயடைத்துப் போய் அருகில் நின்றுகொண்டிருந்தன.

‘‘அன்பர்களே! நீங்கள் யாரைக் காண இப்படி தவம் செய்கிறீர்களோ அந்த நாராயணன் வந்திருக்கிறேன்! கண் திறந்து, இந்தக் கண்ணனைக்கண்டு மகிழுங்கள்...’’இதமான, கம்பீரமான குரலில் அந்த மேக வண்ணன் பேசினார்.

மெல்ல முனிவர்கள் கண் திறந்தார்கள். மாதவனின் வடிவழகென்னும் அமுதத்தை கண்களால் அள்ளி அள்ளிப் பருகினார்கள். மகிழ்ச்சியில் கண்கள் கசிய வாய் குழற, ‘‘பிரபு, தங்களது கிருஷ்ணாவதாரத்தைக் காண முடியாத பாவியாகி விட்டோம். எங்களது குறை தீர இப்போதே தாங்கள் அனைத்து கிருஷ்ண லீலைகளையும் இங்கு நடத்திக் காட்ட வேண்டும்!’’ முனிவர்கள் இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

அதைக் கேட்ட மாயவன் ஒரு மர்மப் புன்னகை பூத்தார். உடன் அந்தக் காடே ஒரு சிறைச் சாலையாக மாறியது. அதில் குழந்தைக் கண்ணன் சிரித்துக் கொண்டிருந்தார். வசுதேவரும் தேவகியும் மகிழும்வண்ணம் அந்தக் குழந்தை நாரணனாக காட்சி தந்தது. தன்னை நந்தகோபரின் இல்லத்தில் விடுமாறு ஆணையிட்டு மறைந்தது.

வசுதேவர் குழந்தையை எடுத்துச் செல்கிறார். சிறை தானாகவே திறக்கிறது. முனிவர்களும் அவரது பின்னே செல்கிறார்கள். திடீரென்று காட்சி மாறியது. பூதகி செத்துக் கிடந்தாள். அவளது மலை போன்ற கொங்கைகளின் மீது அவள் தந்த விஷப் பாலுக்கு ஈடாக மோட்சத்தைக் கொடுத்துவிட்டு, புன்னகை பூத்து விளையாடிக் கொண்டிருந்தார் கண்ணன்.

மீண்டும் காட்சி மாறியது. இப்படி ஒவ்வொரு லீலையையும் கண்டு ரசித்தார்கள் முனிவர்கள். இறுதியாக துவாரகையின் மன்னராக ருக்மணி - சத்யபாமா சமேதராக ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தார் கோவிந்தன். கைநழுவிய கோலைப் போல் முனிவர்கள் நமஸ்கரித்து மாயவனின் லீலா விநோதங்களைப் புகழ வார்த்தை ஏதுமின்றி, வாய் குழறி நின்றார்கள்.

அதைக் கண்டு உள்ளம் பூரித்த முகுந்தன் பேச ஆரம்பித்தார். ‘‘முனிவர்களே! உபநிஷத்துகளின் சாரமாக நான் நிகழ்த்திய லீலைகள் முப்பத்திரண்டையும் காட்டிவிட்டேன். போதுமா! இனி உங்களுக்கு அருள் செய்த இந்தக் கோலத்தோடு இந்த மன்னார்குடி என்னும் திவ்ய தேசத்தில் கோயில் கொண்டு, வேண்டுவோர் வேண்டியதனைத்தும் தருவேன்.

அன்பர்களே! இதோ பாருங்கள். பல வழிகளில் என்னைத் தேடி அறிய முடியாத வேதம் என்னும் பசுவும் உபநிஷத் என்ற அதன் கன்றுகளும் இங்கு என் தரிசனம் பெற்றுவிட்டன!’’இதைக் கேட்டதும்தான் அந்த இரு முனிவர்களும் மாலவனின் பாதத்தைச் சுவைத்தபடி இருக்கும் ஒரு பசுவையும் அவரது மதி முகத்தைக் கண்டு மதிமயங்கி இருக்கும் இரு கன்றுகளையும் கண்டார்கள்!

மாலவன் தொடர்ந்தார். ‘‘பக்தர்களே! பக்குவ மனதோடு என் பதத்தைப் பிடித்தாலொழிய என்னை உள்ளபடி உணர்ந்து அறிவது அரிது என்பதை இவை இரண்டும் இன்று உணர்ந்து கொண்டன...’’ என்று சொல்லிக் கொண்டே வேதப் பசுவைத்தடவிக் கொடுத்தார் கண்ணன். கதை சொல்லி முடித்தார் அந்த உபன்யாசகர். கேட்டுக் கொண்டிருந்த அழகிய மணவாள நாயக்க மன்னரின் கண்களில் ஆறாகக் கண்ணீர்.

தன்னிலை மறந்த மன்னர், ‘‘இதோ இப்போதே அந்த ராஜ கோபலனுக்கு அற்புத ஆலயம் ஒன்றை எழுப்புகிறேன்...’’ என்றபடி அருகில் இருந்த தன் நம்பகமான அமைச்சர் நரச பூபதியிடம் திரும்பினார். அமைச்சர் இன்னமும் கதையில் இருந்து வெளிவரவில்லை என்பதை அவர் நின்றிருந்த விதமே காட்டியது. அவரை உலுக்கி சுய நினைவுக்குக் கொண்டு வந்தார்மன்னர்.

அமைச்சர் ஒன்றும் புரியாமல் விழித்தார். அவரது கைகளில் பொன் நாணயங்கள் நிறைந்த மூட்டையை மன்னர் திணித்தார். ‘‘மன்னார்குடி ராஜகோபா
லனுக்கு ஓர் அற்புத ஆலயம் எழுப்ப வேண்டும். அதன் பொறுப்பு உம்முடையது. உடன் புறப்படுங்கள்...’’ கேட்ட பூபதிக்கு ஆச்சரியமும் கவலையும் சேர்ந்து வந்தன. மன்னரின் கிருஷ்ணபக்தியை எண்ணி ஆச்சரியம் அடைந்தார். அதே சமயம் அவரது ராஜ்ஜியத்தில் உள்ள திருச்சேறை சார நாத பெருமாள் கோயிலின் நிலை அவரைத் துன்புறுத்தியது.

நிச்சயம் திருப்பணி கண்டாக வேண்டிய நிலையில் உள்ள இந்த ஊர் கோயிலை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் ராஜ கோபாலனுக்கு அற்புதமான ஆலயமாம். அப்படி என்ன என் சாரநாதன் குறைந்துவிட்டார்... அவரும் காவிரிக்காக குழந்தை கிருஷ்ணனாக வந்தவர்தானே! பிறகு ஏன் இந்த பாரபட்சம்? பூபதியின் உள்ளம் புகைந்தது...எங்கோ சுற்றிவிட்டு மீண்டும் சார நாதனிடம் வந்த நாகராஜ தாத்தாவை ஆச்சரியமாகப் பார்த்தான் கண்ணன்.

அதை கவனித்த நாகராஜன் புன்னகைத்தார். ‘‘கண்ணா! இந்தக் காலத்துல புதுசு புதுசா நிறைய கோயில் எழுப்பறாங்க. அது தப்பில்ல. ஆனா, புது ஆலயம் கட்டறதுக்கு முன்னாடி நம் முன்னோர்கள் நம்மை நம்பி விட்டுப்போன கோயில் ஒழுங்கா இருக்கானு பார்க்கணும்.

குறைஞ்சது ஒரு கால பூஜையாவது தினமும் நடக்குதானு ஆராயணும்.ஒரு கோயிலை கேட்பாரற்று விட்டுட்டு இன்னொரு புதுக்கோயிலைக் கட்டறது பெரிய பாவம். இன்னும் பல பாடல் பெற்ற சிவன் கோயில்கள் தீபம் எரியக்கூட வழி இல்லாம இருக்கு.

உடனே, ‘ஏன், சுவாமிக்குதான் எல்லா சக்தியும் இருக்கே... அவரே தன்னைப் பார்த்துக்க மாட்டாரா’னு கேட்கலாம். யோசிச்சுப்பாரு... சுவாமியா, எனக்கு கோயில் வேணும்னு கேட்டாரு? நாமா ஆசைப்பட்டு கட்டிட்டு அவரை அங்க இருக்கச் சொல்லிட்டு அப்புறம் பட்டினி போட்டா எப்படி? அதனால நீ பெரியவனாகி சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உன் வருமானத்துல ஒரு பகுதியை கேட்பாரற்று இருக்கும் ஆலயங்களுக்குக் கொடு!’’ தழுதழுத்தபடி சொன்னார் நாகராஜன்.அதை ஆமோதிக்கும் வகையில் தலை அசைத்தாள் அவர் மனைவி ஆனந்தவல்லி!

(கஷ்டங்கள் தீரும்)

கோயில் பெயர்: ஸ்ரீ ராஜகோபால சுவாமி

(தொழிலில் நல்ல முன்னேற்றம், குழந்தை வரம், ஞானம் இவற்றை வாரி வழங்கும் அற்புதத் தலம்)
அமைவிடம்: திருவாரூரில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள மன்னார்குடியில் இக்கோயில் உள்ளது.
நேரம்: காலை 6 மணி முதல்
மதியம் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்