நான்...நாஞ்சில் சம்பத்...



என் தந்தை பாஸ்கரன். அம்மா, கோமதி. 1956ல் தீரர்கள் கோட்டம் திருச்சி மாநாட்டில் ஈ.வெ.கி.சம்பத்தின் பேச்சைக் கேட்டு பிரமித்துப் போன அப்பா, தனக்கொரு மகன் பிறந்தால் சம்பத் என்று பெயர் வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதன்படியே  நான்  பிறந்ததும்  சம்பத்  என  பெயர் சூட்டினார்.

என் ஊர் அப்படியொன்றும் தமிழ் புழங்குகின்ற ஊர் அல்ல. மலையாளமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை பேசும் தமிழகத்தின் மேற்குக் கரையோரம். தாண்டினால் கேரளா. இந்தியாவின் கடைக்கோடி கிராமமான மணக்காவிளை, நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன்.

மூன்றாம் வகுப்பு புனித ஜோசப் ஆரம்பப் பள்ளியில் கழிந்தது. அப்போது பார்ப்பதற்கு கொஞ்சம் புஷ்டியாக, ரிச் லுக் என்பார்களே... அப்படி இருப்பேன்.என் தோற்றத்தைப் பார்த்த என் வகுப்பு ஆசிரியை எமிலி டீச்சர், சுதந்திர தின விழாவில் என்னைப் பேசும்படி கேட்டுக் கொண்டார். ‘நான் எழுதித் தரேன்... உங்கப்பா நேரு மாதிரி ஷெர்வானி உடை வாங்கித் தருவாரா..?’

அப்பாவிடம் ஆசிரியை சொன்னதை அப்படியே சொன்னேன். மளிகைக் கடை நடத்தி வந்த அவர், ஊர் சுக துக்கங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு பெயர் வாங்கியவர். இப்போது எங்கள் மளிகைக் கடைக்கு வயது 80. இன்று என் தம்பி அதை நிர்வகித்து வருகிறார்.விஷயத்துக்கு வருகிறேன். ஆசிரியை சொன்னதை நான் சொன்னதும், ‘ஷெர்வானியா?’ என்று அப்பா புரியாமல் கேட்டார். அவர் சட்டைகூட போடாமல், வெறும் லுங்கி மட்டுமே அணிந்தபடி கடையில் வேலை பார்ப்பவர். ரேஞ்சரை அழைத்து ‘ஷெர்வானினா என்னடே’ என்று விசாரித்து அதை வாங்கித் தரும்படி பணம் கொடுத்து அனுப்பினார்.

நாகர்கோவில் முழுக்க அலசியும் எந்தக் கடையிலும் ஷெர்வானி இல்லை. பிறகு அப்பாவே என் அளவுடன் திருவனந்தபுரம் சென்று அந்த உடையை வாங்கி வந்தார். அதை அணிந்து, சுதந்திரம் பெற்றபின் நேரு ஆற்றிய உரையை மனப்பாடமாகப் பேசினேன். என் தந்தையின் மெனக்கெடலையும் என்னையும் ஆசிரியை பாராட்டினார்.

இப்படித்தான் நான் முதன் முதலில் மேடை ஏறினேன்.எங்கள் ஊர் ஹனி ஸ்டார் டீக்கடையை ஹனிபா நடத்தி வந்தார். அவர், ‘தினத்தந்தி’யைக் கொடுத்து சத்தம் போட்டு படிக்கச் சொல்வார்.இதெல்லாம் என் சொற்களை, உச்சரிப்பை செழுமைப்படுத்தின. ஆறாம் வகுப்பில் நான் இருந்தபோது பேரறிஞர் அண்ணா மறைந்தார். ‘எம் அண்ணா... இதய மன்னா...’ என கலைஞர் அப்போது எழுதிய கவிதை பட்டிதொட்டி எங்கும் பிரபலம்.

அதை அப்படியே மாற்றி கூட்டுறவுக்கான கவிதையாக எழுதி ஆசிரியை எழுதிக் கொடுத்ததையும் சேர்த்துப் படித்தேன். பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு. அதன்பிறகு எல்லா ஆண்டுகளும் தொடர்ந்து பரிசுகள் வாங்கினேன்.திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் படித்தபோது பேச்சுப் போட்டியில் நான் வாங்கிய பரிசுகளே என்னை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தின.

வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாமல், இளவயதுக்கே உரிய ஆசைகள் ஏதுமின்றி, தமிழ், பேச்சு என்று மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தேன்.

தென்காசி ஒன்றிய அலுவலக ஊழியராக இருந்த என் சித்தப்பா என்னை தென்காசி திருவள்ளுவர் கழக விழாவுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருச்சி இராதாகிருஷ்ணன், எட்டையபுரம் துரைராஜ், பெரும்புலவர் நமசிவாயம், திருக்குறளார் முனுசாமி, இளம்பிறை மணிமாறன், இஸ்மாயில்... ஆகியோரின் பேச்சுகளை எல்லாம் கேட்டேன்.

திருக்குறள் கழகத்தில் நடந்த பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கினேன். ஒவ்வொரு வருடமும் நானும் என் தங்கை சாந்தியும் சைக்கிளில் இந்த விழாவுக்கு வந்து செல்வோம்! அதுவும் பத்து நாட்களுக்கும்.

இந்த நாட்களில்தான் யாரிடமும் கைகட்டி வேலை பார்க்காமல் இப்படித்தான் வரவேண்டும் என்று முடிவெடுத்தேன். என் தாத்தா சுதந்திரப் போராட்டத்தில் களமாடி காதில் அடிவாங்கி காதே கேட்காமல் போனவர்.

அவரைப்போல் ஆக வேண்டும் என மன உறுதி. என் கல்லூரிக்கு வாரியார் ஒருமுறை வந்தார். அவர் முன் அவரைக் குறித்தே ஒரு பண் பாடினேன். மகாபாரதச் சொற்பொழிவில் என்னை வாரியார் அழைத்து ‘ஞானச் சிறுவன்’ என பட்டமளித்தார்.

இதன்பிறகு தேடல் அதிகமானது. சமய இலக்கியங்களைப் படிக்கத் துவங்கினேன். இந்த வாசிப்பே ‘நாஞ்சில்’ என்ற சொல்லை என் பெயருக்கு முன்னால் இணைக்கச் செய்தது.இந்த சமயத்தில் வைகோ எங்கள் கல்லூரிக்கு வந்து ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் பேசினார்.

அவர் எம்பி ஆன நேரம் அது. நானும் இந்நேரத்தில் திமுகவின் மாணவர் அணியில் சேர்ந்துவிட்டேன். இலங்கைத் தமிழர் பிரச்னையில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது எங்கள் ஊரில் நடந்த கண்டனக் கூட்டத்தில் நன்றியுரை ஆற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அன்று நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த என்னைக் கைது செய்தார்கள். இந்தக் கைது நடக்கவில்லை எனில் நான் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டேன். வைகோவும் கைது செய்யப்பட்டார். அவருடன் சிறைக்குச் சென்றேன்.

பேச பயிற்சி கொடுத்தார். பேசவைத்துப் பாராட்டினார். வெளியில் வந்ததும் சுரண்டை, ஊத்துமலை, சிவகிரியில் எல்லாம் வைகோ முன்னிலையில் ‘புத்தொளி’ சம்பத் ஆக பேசினேன்.

விடுதலைப் புலிகள் இச்சமயத்தில் தமிழகத்துக்கு அதிகளவில் வந்தார்கள். மூன்று போராளிகளுக்கு என் வீட்டில் தங்க இடம் கொடுத்தேன். உணர்ச்சிபூர்வமாக நான் பேசுவதைப் பார்த்து, தங்கள் பிரச்னையை இந்தியா முழுக்க கொண்டு செல்ல முடியுமா என்று கேட்டார்கள்.

வீட்டில் கூட சொல்லாமல் கிளம்பிவிட்டேன். தாராவி, தில்லி, கல்கத்தா, கொச்சி என தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகளுக்கும் சென்று பேசினேன். என் பெயரையும் தீனதயாளன் என்று மாற்றிக்கொண்டு ஒரு வருடம் போராளியாகவே சுற்றினேன்.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அங்கிருந்து வெளியேறி சென்னை வந்தேன். பரிதி இளம்வழுதியை நன்கு தெரியும். என்னைப் பார்த்தவர், ‘உன்னைக் காணலைனு ஊர்ல பலர் சொல்றாங்க... சிலர் நீ செத்துட்டேன்னு சொன்னாங்க... உன் வீட்ல இருந்து தலைவருக்கு கடிதம் எழுதியிருக்காங்க... சரி... மாலைல ஒரு கூட்டம்... வா’ என்று அழைத்துச் சென்றார்.

அன்று என் பேச்சைக் கேட்டவர்கள் மிரண்டுவிட்டார்கள். அடுத்தடுத்து என்னிடம் தேதி வாங்கி கூட்டம் போட்டார்கள். கலைஞர் ஐயா என்னை அழைத்து, ‘இதையே வாழ்க்கையா மாத்திக்கிட்டு பயணத்தை ஆரம்பி... வேற ஏதும் ஆசையிருக்கா’ எனக் கேட்டார். அவரே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் என்னை அழைத்து பேசச் சொன்னார். நான் பாவேந்தர் படத்தை திறந்து வைத்து பேசினேன். கலைஞர் ஐயா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் பரிசும் கொடுத்தார்.

தொடர்ந்து கூட்டங்கள்... பேச்சு... சொற்பொழிவு. நான் உயிரோடு இருப்பது வீட்டுக்குத் தெரிய வந்தது. ‘நான் இல்லை’ என நினைத்து என் அப்பா இரண்டு தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்திருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின் வீட்டுக்குச் சென்றேன்.காரியாபட்டியில் தங்கப்பாண்டியன் தலைமையில் பிரசாரம். தலைவர் வரும் வரை பேசு என்றார்கள். ஒன்பதரை மணி நேரம் பேசினேன். திமுகவின் ரெக்கார்ட் பிரேக் பேச்சு.

கலைஞர் ஐயாவை திருமணத்திற்கு அழைத்தேன். தேதி கொடுத்தார். 1989, ஆகஸ்ட் 17 அன்று கலைஞர் தலைமையில் திருமணம். மனைவி பெயர் சசிகலா. மகள் மதிவதனி மருத்துவர். மகளுக்கு திருமணமாகி இரண்டு புதல்வர்கள். மகன் சரத்பாஸ்கர் மருத்துவம் படித்து முடித்துவிட்டார். வைகோவுடன் 19 வருடங்கள் இருந்தேன். தேசத் துரோக வழக்கு உட்பட 49 வழக்குகள். தமிழகத்தின் எட்டு சிறைச்சாலைகளில் ஏழு சிறைச்சாலைகளைப் பார்த்தவன் நான்.

இதன் பிறகு வாழ்க்கை திசை மாறியது. அரசியல் சார்ந்தும் அங்கே இங்கே என பயணம். இப்போது திமுகவில் சில கூட்டங்கள் தவிர அமைதியாக இருக்கிறேன்.சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் தம்பி ஆர்.ஜே.பாலாஜி தேடி வந்து நடிக்கக் கேட்டார். ‘எல்கேஜி’ அப்படித்தான் அமைந்தது. பிறகு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இப்போது ‘ரீல் அந்துபோச்சு’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன்.

ஊரில் உடன்பிறந்தவர்கள் மளிகைக்கடை, ஃபேன்சி ஸ்டோர், ஸ்டேஷனரி கடை, செப்பல் கடை என நடத்துகிறார்கள். பஹ்ரைன், துபாய், சிட்னி... என வெளிநாட்டின் பல பகுதிகளில் இலக்கியக் கூட்டங்களில் பேசி வருகிறேன். மகள் என்னைப் போலவே பேசுவாள்.

எங்கே அரசியல் பக்கம் வந்துவிடுவாளோ என்று பயந்து அவள் ஆர்வத்தை படிப்பின் பக்கம் திருப்பி விட்டேன்.என் வாழ்க்கையில் காதல், இளவயதுக்கே உரிய கேளிக்கைகள் என எந்த  சுவாரஸ்யங்களும் இருக்காது. ஆனால், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்தேன் என்ற திருப்தி இருக்கிறது. அது போதும்.

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்