மின் வாகனங்களா அல்லது பெட்ரோல், டீசல் வாகனங்களா...இந்தியாவுக்கு எது பெஸ்ட்..?சமீபத்தில் தில்லி அரசாங்கம் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஓர் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. அதில், ‘மின் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், சாலை வரி போன்றவை வசூலிக்கப் படாது எனவும், மின்சார மகிழுந்துக்கு (E-Car) ரூபாய் 1.5 லட்சம் வரையிலும், மின்சார இருசக்கர வாகனங்கள் (E-Scooter, E-Bike), மின்சாரத்தில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் (E-Auto, E-Rickshaws, E-Freight Vehicles)ஆகியவற்றுக்கு ரூ.30,000 வரையிலும் மானியம் வழங்கப்படும்’ எனவும் அறிவித்தது.  

அத்துடன் தில்லியின் முக்கியமான இடங்களில் 200 Electric Vehicle Charging Stations அமைக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நடைமுறைப் படுத்துவதனால் அந்த மாநிலத்தில் மின் வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை 0.29% இல் இருந்து 25 சதவீதமாக உயரும் எனவும், இது இந்தியாவின் பெட்ரோல் இறக்குமதியைக் குறைக்கவும், காற்று மாசைக் குறைக்கவும் உதவும் எனவும் தில்லி அரசு நம்புகிறது.

‘‘இந்த நகர்வு இந்தியாவின் பெட்ரோல் இறக்குமதியை சிறிதளவு குறைக்கும். ஆனால், பெருமளவு காற்று மாசு அதிகரிக்கும்...’’ என அபாயச் சங்கு ஊதுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சூழலியல் பொறியாளரான பிரபாகரன்.  ‘‘ஏக்ஸ்டர் மற்றும் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வாகனங்களின் உற்பத்தி முறை, வாகன பயன்பாடு மற்றும் அந்த நாட்டின் மின்சார உற்பத்தி முறை ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், ‘ஸ்வீடனில் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் 70% குறைவான அளவே மின் வாகனம் கரியமிலவாயுவை வெளியேற்றுவதாகவும்; 51% நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரிட்டனில் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட 20% குறைவான அளவே கரியமில வாயு வெளியேறுவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், போலந்து போன்ற அனல் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் மின் வாகனங்கள் புழங்கினால் கரியமில வாயு அதிகரிக்கவே செய்யும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.  போலந்துக்கு இந்த நிலை என்றால் 75% அனல் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியாவின் நிலை..? மின் வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசைத் தடுக்கலாம் என்று சொல்பவர்கள் அந்த வாகனம் ஓடுவதற்கான மின்சாரம் எங்கிருந்து வருகிறது, அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் எவ்வளவு காற்று மாசு ஏற்படுகிறது என்பதைக் குறித்து யோசிப்பதில்லை...’’ என்ற பிரபாகரன், மின்சார வாகனங்களினாலும் காற்று மாசு ஏற்படும் என்கிறார்.

‘‘ஒரு பெட்ரோல் கார் சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு 132 கிராம் கரியமில வாயுவை வெளியிடும். ஒரு மின்சாரக் கார் ஒரு கிலோ மீட்டார் தூரம் செல்ல சுமார் 0.15KWh ஆற்றல் தேவைப்படும். இந்தியாவில் 0.15 KWh மின்சாரத்தை உற்பத்தி செய்ய 142 கிராம் முதல் 160 கிராம் வரை கரியமில வாயுவை (CO2) வெளியேற்றுகிறது. அதேபோல் ஒரு பெட்ரோல் வாகனத்தில் இருந்து கிமீக்கு 0.9 கிராம் நைட்ரஜன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.

மின் வாகனத்திற்கு ஒரு கிமீக்கு தேவையான மின்சாரத்தை நிலக்கரி மூலம் உற்பத்தி செய்தால் 0.87 கிராம் நைட்ரஜன் டை ஆக்சைடு வெளியேறும்.
மட்டுமல்ல; நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, நான்மீத்தேன் ஹைட்ரோகார்பன்ஸ், நுண்துகள்கள், சாம்பல்ஆகியவை அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறுகின்றன.

ஆக, இந்தியாவைப் பொறுத்த வரை மின்சாரக் காரை பயன்படுத்தினால் சூழலியலுக்கு அதிக பாதிப்பே ஏற்படும். ஒரு நாட்டின் மின்சார உற்பத்தி முறை, தட்பவெப்பம், வாகன பயன்பாடு, வாகன உற்பத்தி முறை, வீதியில் வாகனம் செல்லும்போது உண்டாகும் காற்று மாசு (நேரடியாக / மறைமுகமாக), அந்த வாகனம் செயலிழந்தபிறகு அது சூழலியலுக்கு செய்யும் கேடு... என பல்வேறு விஷயங்களை வைத்துதான் அந்த நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டினை அதிகரிப்பது எந்த அளவுக்கு நன்மை தரும் என்று தீர்மானிக்க முடியும்.

அப்படி ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பான்மையான நாடுகளில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யும்போது வெளிவரும் மாசை விட, அது அதன் ஆயுள் காலம் முழுவதும் வீதியில் ஓடும்பொழுது வெளியேற்றும் மாசுவே அதிகம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விதிவிலக்காக ஸ்வீடன், பிரான்ஸ் போன்று நிலக்கரி மின்சாரத்தை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் நாடுகளில் மின்சாரக் கார்கள் தமது ஆயுள் காலம் முழுக்க ஓடுவதைவிட அந்த கார் உற்பத்தி செய்யும்போது வெளியேறும் மாசுகளே அதிகம். எனவே இதுபோன்ற நாடுகளில் மின் வாகனம் காற்று மாசை குறைப்பதில் பெரிதளவு உதவும்.

இங்கிலாந்து போன்ற ஓரளவுக்கு அனல் மின்சாரம் பயன்படுத்தும் நாடுகளில் மின் வாகனங்கள் பாதிக்கு பாதி பயன் தரக்கூடும். ஆனால், இந்தியா, போலந்து போன்ற 75% க்கு மேல் அனல் மின்சாரத்தை நம்பியுள்ள நாடுகளில் பெட்ரோல் கார்களை விட மின் வாகனங்களால் பலமடங்கு அதிக காற்று மாசு ஏற்படும்.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், லித்தியம் கொண்டு உருவாக்கப்படும் மின் வாகன பேட்டரிகள் அனைத்தும் அதன் பயன்பாடு முடிந்தபின் நச்சுத் தன்மை வாய்ந்ததாக மாறுகிறது. இது மற்றுமொரு சூழலியல் சிக்கல். தவிர இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான அனல் மின்நிலையங்கள், நகரங்களை ஒட்டியே உள்ளன. தில்லி என்சிஆர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 13.2GW மின்னுற்பத்தி செய்யக் கூடிய 30க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன.

வட சென்னையை எடுத்துக்கொண்டால் 3.7GW மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மூன்று அனல்மின் நிலையங்கள் உள்ளன. இந்த கொரோனா பொது
முடக்கத்திலும் இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக இருந்ததே அனல் மின்நிலையங்களின் காற்று மாசு அளவுகளுக்கு சாட்சி...” என்கிறார் பிரபாகரன்.

அன்னம் அரசு