Family Tree - எலிசபெத் ராணி முதல் ஹாலிவுட் பிரபலங்கள் வரை...



200 ஆண்டுகளாக உலகப் பணக்காரர்களின் அந்தஸ்தை தீர்மானிக்கும் ஃபேஷன் குடும்பம்!

2019ம் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரம் கோடி!

‘உலகின் மதிப்பு மிக்க பிராண்ட்’ என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் புகழாரம், இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்களின் அந்தஸ்தின் அடையாளம், உயர்ந்த தரம், நேர்த்தியான வடிவமைப்பு, நவீன தோல் பொருட்களுக்கு முன்னோடி... என ‘ஹெர்மெஸி’ன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

183 வருடங்களாக விலையுயர்ந்த ஃபேஷன் பொருட்களைத் தனித்துவமாக தயாரித்து வரும் குடும்ப நிறுவனம் இது. பிரான்ஸின் கலாசாரத்தில் மாபெரும் தாக்கத்தை உருவாக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. தியரி ஹெர்மெஸ்19ம் நூற்றாண்டின் ஆரம்பம். ஜெர்மனியின் க்ரெஃபெல்ட் நகரில் பிரெஞ்சு தந்தைக்கும் ஜெர்மன் தாய்க்கும் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார் தியரி ஹெர்மெஸ்.

அப்போது பேரரசன் நெப்போலியனின் ஆட்சி யின் கீழ் க்ரெஃபெல்ட் இருந்ததால் தியரிக்கு சுலபமாக பிரான்ஸின் குடிமகன் அடையாளம் கிடைத்தது. சின்ன வயதிலேயே நோய் மற்றும் போரில் மொத்த குடும்பத்தையும் இழந்து அனாதையாகிவிட்டார். பிழைப்பைத் தேடி பாரிஸில் காலடி எடுத்து வைக்கும்போது அவரது வயது 20. கையில் பணமில்லை. தெரிந்தவர் என்று சொல்லக்கூட ஓர் ஆளில்லை. ஆனால், தோல் சம்பந்தமான வேலைகளில் கைதேர்ந்தவராக இருந்தார். இதை அவர் எங்கேயும் கற்கவில்லை. தைப்பதை தனக்கு கிடைத்த பரிசு என்று பின்னாட்களில் சொல்லியிருக்கிறார் தியரி.

அந்தக் காலத்தில் போக்குவரத்துக்காக குதிரைகளையே அதிகமாகப் பயன்படுத்தினர். அதனால் குதிரை மீது அமர்ந்து செல்வதற்காக தோலால் செய்யப்படும் சேணத்துக்கும், குதிரையை இழுத்து நிறுத்துவதற்காக அதன் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் அமைக்கப்படும் தோல் பட்டைகளுக்குமான தேவை அதிகம். அரிதான தோல்களைச் சேகரித்து நன்கு பதப்படுத்தி அதில் அட்டகாசமான சேணத்தையும் தோல்பட்டைகளையும் தன் கைகளினாலேயே தைத்து, விற்றார் தியரி. இரண்டு நாட்களில் தனியாளாக ஒரு சேணத்தைத் தைத்து விடுவார்.

அவரது சேணத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, 1837ல் பாரிஸில் ஒர்க் ஷாப் போல ஒரு கடையைத் திறந்தார். இந்தக் கடைதான் இன்று ‘ஹெர்மெஸ்’ நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சேணம், தோல்பட்டை மட்டுமல்லாமல் வண்டியை குதிரையுடன் இணைக்கும் தோல் பொருட்களையும் கைகளினாலேயே தைத்து பிசினஸை பரவலாக்கினார். மூன்றாம் நெப்போலியன் உட்பட ஐரோப்பாவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் இவரது வாடிக்கையாளர்கள். செல்வந்தர்களை மட்டுமே குறியாக வைத்து இயங்கினார். தரத்திலும் விலையிலும் எந்தவிதமான சமாதானமும் இல்லை.

இவரது வாரிசுகளும் இதையே பின்பற்றியதுதான் ‘ஹெர்மெஸ்’ நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அதன் அந்தஸ்துக்கும் மூல காரணம். தியரியின் சேணங்கள் தொழில் நேர்த்தி மற்றும் கலை வடிவத்துக்காக பல விருதுகளை அள்ளின. இதற்கிடையில் திருமணமாகி சார்லஸ் எமிலி என்ற மகன் பிறந்தார். அப்பாவிடமிருந்து தொழிலைக் கற்று அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

1878ல் தியரி மரணமடைந்தார். அப்பா ஆரம்பித்த கடையை 1880ல் பாரிஸில் உள்ள 24 rue du Faubourg Saint-Honore என்ற தெருவுக்கு இடம் மாற்றினார் சார்லஸ். அது செல்வந்தர்கள் அதிகமாக வசிக்கும் தெரு. புதுப்புது சேணங்களை அறிமுகப்படுத்தி அதை சில்லரைக் கடைகளுக்கும் விநியோகம் செய்தார். குதிரையில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்காக சார்லஸ் உருவாக்கிய தோல் பை பெரும் வரவேற்பைப் பெற்றது.

வட ஆப்பிரிக்கா, ஆசியா, ரஷ்யா, அமெரிக்கா என உலகின் அனைத்து மூலைகளுக்கும் பிசினஸை விரிவாக்கினார் சார்லஸ் எமிலி.

எமிலி மாரிஸ்

சார்லஸ் எமிலியின் ஓய்வுக்குப்பின் அவரது மகன்களான அடால்ஃபியும் எமிலி மாரிஸும் குடும்ப பிசினஸைக் கையிலெடுத்தனர்.
சேணம் தயாரிப்புக்குப் பெரிதாக எதிர்காலம் இல்லை என்று வந்த வேகத்திலேயே பிசினஸில் இருந்து விலகிவிட்டார் அடால்ஃபி. ஆனால், மாரிஸுக்கு சேணத்துக்கான தேவை எங்கெல்லாம் இருக்கிறது என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.

1914ல் சேணம் செய்ய 80 கைவினைக்கலைஞர்கள் இவரிடம் வேலை செய்தனர். அந்தளவுக்கு பிசினஸை வளர்த்தெடுத்தார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ரஷ்யாவின் ஜார் மன்னர் சேணம் செய்ய ஆர்டர் கொடுத்தது வரலாறு.

குதிரைக்குப் பதிலாக வாகனங்கள் வரத் தொடங்கின. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு பிசினஸையும் அப்டேட் செய்தார் மாரிஸ்.
கார்களுக்குத் தேவையான தோல் பொருட்கள் மற்றும் ரயில், கப்பலில் பயணிப்பவர்களுக்காக தோலினால் ஆன டிரங்கு பெட்டிகளைத் தயாரித்து வெற்றிக்கொடி நாட்டினார்.

அதேநேரம் குதிரை, ரயில், கப்பல், கார் என அடுத்தவரைச் சார்ந்து பிசினஸ் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதன் விளைவு, அவரது பார்வை ஃபேஷன் பக்கம் திரும்பியது.

ஃபேஷன்தான் எதிர்காலம் என்று முடிவு செய்து களத்தில் குதித்தார். இதிலும் தாத்தா தியரியைப் போலவே செல்வந்தர்கள் மட்டுமே அவரது குறி.
அப்போது ஆடை உலகில் பெரும் மாற்றத்தை விளைவித்த ஜிப்பர் அறிமுகமானது. அதன் பயன்பாட்டை அறிந்த மாரிஸ், தோல் பொருட்கள் மற்றும் ஆடைகளில் ஜிப்பர் பயன்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகள் காப்புரிமையை வாங்கினார்.

பிரான்ஸில் முதல்முறையாக ஜிப்பரை இவர் அறிமுகப்படுத்தியது ஐரோப்பா முழுவதும் எதிரொலித்தது. 1918ல் வேல்ஸ் இளவரசரான எட்வர்டுக்கு ஜிப்பர் வைத்த தோலினாலான கோல்ஃப் ஜாக்கெட்டை பிரத்யேகமாக வடிவமைத்து ஹெர்மெஸ்ஸுக்கு விளம்பரம் தேடிக்கொண்டார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த செல்வந்தர்களின் விருப்பங்களை உணர்ந்து  பல பொருட்களை அறிமுகம் செய்தார்.

அந்தப் பொருட்கள் பிரான்ஸின் கலாசாரத்திலும் ஃபேஷன் உலகிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன. அதில் ஒன்று பெண்களுக்கான ஹேண்ட்பேக்!
ஆம்; மாரிஸின் மனைவிக்குப் பிடித்த மாதிரியான ஒரு ஹேண்ட்பேக் கிடைக்கவேயில்லை. மனைவிக்காக கார் நிறுவனர் புகாட்டியுடன் சேர்ந்து ஒரு ஹேண்ட்பேக்கை உருவாக்கினார்.

இந்தச் சம்பவம்தான் ஹேண்ட்பேக் தயாரிப்பில் ஹெர்மெஸ் அடியெடுத்து வைக்கக் காரணம். அவருக்கு மகள்கள் மட்டுமே. அதனால் தனது மூன்று மருமகன்களையும் பிசினஸ் பங்குதாரர்களாக்கி குடும்ப பிசினஸை நாலாப்பக்கமும் விரிவடையச் செய்தார்.

தயாரிப்புகள்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேகமான தோல் ஹேண்ட்பேக், பர்ஸ், ரெடிமேட் ஆடைகள், பட்டு ஸ்கார்ஃப், காலணி, பெல்ட், தொப்பி, வாசனைத் திரவியங்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட வாட்ச் உட்பட நவீன ஃபேஷன் மற்றும் ஆடம்பரப் பொருட்கள்.
தவிர, பர்னிச்சர், அலங்கார விளக்குகள், மேக்-அப் சாதனங்கள், பரிசுப் பொருட்கள், நகைகள் என பல பிரிவு களிலும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

தனித்துவம்

பிரபலங்கள், மாடல்களை வைத்து விளம்பரங்களோ மார்க்கெட்டிங்கோ பெரிதாகக் கிடையாது. துபாய்க்கு ஒன்று, தில்லிக்கு ஒன்று என இடத்துக்குத் தகுந்த மாதிரியான பொருட்களை விற்பதில்லை. எல்லாக் கடைகளிலும் ஒரே மாதிரியான பொருட்கள்தான் கிடைக்கும். வரையறுக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்தான் (limited edition) பொருட்களின் உற்பத்தி இருக்கும். அது விற்றுவிட்டால் மறு உற்பத்தி கிடையாது. தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை.

இன்று...

ஒவ்வொரு 20 நொடிக்கும் ஹெர்மெஸின் ஒரு சில்க் ஸ்கார்ஃப் விற்பனையாகிறது. ஆன்லைன் ஸ்டோர் உட்பட உலகெங்கும் 340 கடைகள். இன்னும் ஐந்து ஆண்டு களில் மேலும் 20 கடைகளைத் திறக்கப்போவதாகத் திட்டம்.

140 வருடங்களுக்கு முன்பு சார்லஸ் எமிலி கடை ஆரம்பித்த இடத்திலேயே இன்றும் ஹெர்மெஸின் தலைமை அலுவலகம் செயல்பட்டு
வருகிறது. ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த ஆக்ஸல் டூமாஸ் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெர்மெஸை வழிநடத்தி
வருகிறார். ஜீன் லூயிஸின் மகனான அலெக்ஸிஸ் டூமாஸ்தான் கலை இயக்குனர். 14 ஆயிரத்துக்கும் மேலான ஊழியர்களுடன் இயங்கிவரும் இந்நிறுவனத்தின் 2019ம் ஆண்டு வருமானம் 60 ஆயிரம் கோடி ரூபாய்.

கெல்லி பேக்

புகாட்டியுடன் சேர்ந்து எமிலி மாரிஸ் உருவாக்கிய ஹேண்ட் பேக்கை 1930ல் அவரது மருமகன் ராபர்ட் டூமாஸ் மறு டிசைன் செய்து ஓர் அழகான வடிவத்துக்குக் கொண்டுவந்தார். இருபது வருடங்களுக்கு மேலாக இந்த ஹேண்ட்பேக் பலமுறை மறு டிசைன் செய்யப்பட்டாலும் பெரிதாக வெளிச்சத்துக்கு வரவில்லை. 1954ல் பிரபல திரைப்பட இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் ‘To Catch a Thief’ என்ற படத்தை இயக்கினார். படத்தின் கதாநாயகியான கிரேஸ் கெல்லிக்குத் தேவையான ஹேண்ட் பேக் ஹெர்மெஸில்தான் வாங்கப்பட்டது.

பார்த்தவுடனேயே ஹெர்மெஸின் பேக்கை கெல்லிக்குப் பிடித்துவிட்டது. ஃபேஷன் ஐகானான அவர் பேக்குடன் போஸ் கொடுக்க உலகெங்கும் பிரபலமாகிவிட்டது ஹெர்மெஸின் பேக். பிறகு அது கெல்லி பேக் என்றே அழைக்கப்பட்டது.

இன்று ஹெர்மெஸில் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டைல்களில் ஹேண்ட்பேக்குகள் விற்பனைக்கு இருந்தாலும் கெல்லி பேக்குக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. ஹெர்மெஸின் அடையாளமாகக் கருதப்படும் கெல்லி பேக்கின் விலை ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து ஆரம்பம்.

பிர்கின் பேக்

எமிலி மாரிஸின் பேரன் ஜீன் லூயில் டூமாஸ், 1978ம் வருடம் ஹெர்மெஸின் சேர்மனாகப் பொறுப்பேற்று குடும்ப பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். புதுப்புது டிசைன்களில் தோல் பொருட்களை அறிமுகம் செய்து லாபத்தை அள்ளினார். எண்பதுகளின் ஆரம்பத்தில் பாரிஸிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார் ஜீன். அவருக்கு அருகில் பிரபல ஆங்கிலப்பட நடிகை ஜேன் பிர்கின்.

தான், கொண்டு வந்திருந்த பேக்கில் இருந்த பொருட்கள் வெளியே வந்து கீழே விழுவதும் அதை எடுத்து பேக்குக்குள் திணிப்பதுமாக இருந்தார் பிர்கின். இதை கவனித்த ஜீன், பிர்கினிடம் பேச்சு கொடுத்தார். தனக்கு வேண்டிய பேக் எப்படி இருக்க வேண்டுமென்று பிர்கின் கற்பனையாகச் சொல்ல, அதை விமானத்திலிருந்தபடியே ஒரு காகிதத்தில் வரைந்தார்.

அந்த ஓவியமே பெண்களுக்கான நவீன ஹேண்ட்பேக்காக உருவானது. அந்த பேக் பிர்கினின் பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. சேணத்தைப் போலவே பிர்கின் பேக் கைகளாலேயே தைக்கப்படுவது தனிச்சிறப்பு. ஒரு பேக் தைக்க இரண்டு நாட்களாகிறது. பேக்கிற்குத் தகுந்த மாதிரி தோலை வெட்டுவதிலிருந்து பேக்கை முழுமையாகத் தைத்து முடிக்கும்வரை அனைத்து வேலைகளையும் ஒரே கைவினைஞர்தான் செய்வார். அவருக்கென்று பிரத்யேகமான கருவிகள் இருக்கும்.

முதலைத் தோலில் தயாரிக்கப்படும் இந்த பேக்கை வாங்குவது என்பது செலவு அல்ல; முதலீடு! ஆம்; தங்கத்தைப் போல நாளுக்கு நாள் இதன் மதிப்பு கூடிக்கொண்டே செல்லும். லட்சங்களில் வாங்கி கோடிகளில் விற்றவர்கள் இருக்கிறார்கள்.

பிர்கின் பேக்கை ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டும். ஆறு வருடங்கள் காத்திருந்தவர்கள் கூட உண்டு. ஒவ்வொரு முறை பிர்கின் பேக் விற்பனைக்கு வரும்போதும் காத்திருப்பு பட்டியலின் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன்! விலை ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்தில் இருந்து ஆரம்பம்!  

த.சக்திவேல்