நான்... பாரதி மணி



நான்… இதை ஒரே வார்த்தையிலே சொல்லணும்னா அஹம் பிரம்மாஸ்மி என்றுதான் சொல்லணும். விரிவாக சொல்ல வேண்டுமானால் நான் யார் என நானே இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். எங்கேங்கோ அலைந்து திரிந்து விட்டேன், இப்போ 83 வயதாகிடுச்சு. இனிமேலும் நான் யார் என்கிறதுக்கு விடை கிடைக்குமா..? தெரியவில்லை.

நேர்மையாக இருக்கணும், பல பேர் நட்பு வேண்டும். இந்த இரண்டும் குறிக்கோளா கொண்டுதான் நான் பயணம் செய்திட்டு இருக்கேன். மிகப்பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாம். நல்ல மனுஷனா இருக்க இப்போது வரைக்கும் முயற்சிக்கிறேன். அதான் நான்.

நான் எதனையும் சாதிச்சேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பலரும் என்னை எழுத்தாளன் எனச் சொல்வதுண்டு. நான் எழுத்தாளன் எல்லாம் இல்லை. ரெண்டாயிரத்தும் மேலான நாடகங்களில் நடிச்சிருக்கேன். இப்படி என் அடையாளமாக மற்றவர்கள் சொல்கிறார்கள். நாகர்கோவில் அருகே இருக்கும் பார்வதிபுரம்தான் சொந்த ஊர். 1937 செப்டம்பர் 24ம் தேதி  பிறந்தேன். தந்தையார் சுப்பிரமணியம், தாயார் சிவகாமி. அப்பா நாடகக் கலைஞர். அதன் காரணம் என்னையும் அதன் வழியாகவே கூட்டிச் சென்றார்.

1944ல் தொடங்கியது என் நாடகக் கலை வாழ்க்கை. ஏழு வயதில் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையின் ‘ மதுரை தேவி பால வினோத நாடக சபா’வில் என் அப்பா சேர்த்துவிட்டார். பத்து வருடங்கள் அங்கே நாடகப் பயிற்சி. தொடர்ந்து 1955ல் தில்லி சென்றேன் அங்கே பூர்ணம் விசுவநாதன் இயக்கி நடித்த ஓரங்க நாடகங்கள், ஆல் இந்தியா ரேடியோவின் நாடகங்களிலும் வாய்ப்புகள் கிடைச்சது.

1956ல் தில்லியில் தட்சிண பாரத நாடக சபாவை தமிழ் நாடகத்துக்கான முதல் அமைப்பாக ராமநாதன், ராமதாஸ் இவர்கள் கூட சேர்ந்து துவங்கினேன். முதல் நாடகமா பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’யில் வேலைக்கார சபாபதியாக நடிச்சேன்.நாற்பதாண்டுகளுக்கும் மேல தில்லியில் பம்மல், கோமதி ஸ்வாமிநாதன், கே.கே.ராமன், கே.பாலசந்தர், சோ. ராமசாமி, கே.எஸ்.நிவாசன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சி.சு.செல்லப்பா, எஸ்.எம்.ஏ.ராம் இவர்களுடைய பல நாடகங்களில் 2,000 தடவைகளுக்கு மேல் நடிச்சிருக்கேன். தில்லி ‘யதார்த்தா’  பென்னேஸ்வரன் இயக்கிய நாடகங்களிலும் கூட நடிச்சதுண்டு. தி.ஜானகிராமனும் கே.எஸ்.ராஜேந்திரனும் இயக்கிய நாடகங்களிலும் கூட நடிச்சிருக்கேன்.

அறுபதுகளில் இப்ராகிம் அல்காஸி இயக்குநராக இருந்த தில்லி தேசிய நாடகப்பள்ளியில் அவரது மாணவராக சேரக்கூடிய அதிர்ஷ்டமும் அமைஞ்சது. பம்பாய், கொல்கத்தா, சென்னை, சண்டிகர் இப்படி பல நகரங்களிலும் நாடகங்களுக்காக மேடையேறினேன். ‘தன்னை நாடகம் எழுதத்தூண்டியவர் பாரதிமணி’னு இந்திரா பார்த்தசாரதி என்னைப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவருடைய திறமையும் ஆர்வமும்தான் அதற்குக் காரணம் என சொல்வேன்.

லண்டன் ஸ்கூல் ஆப் டிராமாவில் குரல் வளத்துக்கான ‘Voice Culture’ பயிற்சி பெற்று சான்றிதழும் கிடைச்சது. 2004ல் தில்லி தேசிய நாடகப்பள்ளியும் ‘நாடக வெளி’யும் என்னுடைய அறுபதாண்டு கால மேடை அனுபவத்தைப் பாராட்டி, எனக்காகவே ஒரு மாத நாடகப்பட்டறை நடத்தி, விழாவின் முடிவிலே மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆளேகர் எழுதிய ‘மஹா நிர்வாணம்’ நாடகத்தின் தமிழாக்கத்திலே நான் நடிச்சேன்.

2011 மார்ச் மாதம் வைக்கம் பஷீரின் ‘சப்தங்கள்’ நாடகத்தில் பஷீராக நடிச்சதெல்லாம் இன்னைக்கும் என் மனதிலே நீங்கா நினைவுகள். இப்போதும் நாடக கலைஞர்கள், ரசிகர்கள் இந்த பஷீர் பாத்திரத்தைப் பாராட்டி என்னிடம் சொல்கிறார்கள். நிறைவா இருக்கு.

என்னுடைய திரைப்பட வாழ்க்கை, 1991ல் லண்டன் பிபிசி யின் சானல்-4 தயாரித்து, அருந்ததி ராய் கதை வசனமெழுத ‘The Electric Moon’ என்கிற ஆங்கிலப்படத்தில் ஆரம்பிச்சது. இந்தப் படத்துக்கு 1991ல் சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருது கூட கிடைச்சது. தமிழில் ‘பாரதி’, ‘ஊருக்கு நூறுபேர்’, ‘நண்பா... நண்பா!’, ‘ஒருத்தி’, ‘றெக்கை’, ‘மொட்டுக்கா’, ‘ஆட்டோகிராப்’, ‘அந்நியன்’ போன்ற படங்களில் நடிச்சிருக்கிறேன். முப்பதுக்கும் மேலான தமிழ்த் திரைப்படங்களில் நாயகன், நாயகியின் தாத்தா பாத்திரங்களில் நடிச்சிருக்கேன்  ‘பாபா’ திரைப்படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிச்சிருந்தேன்.

2010ல் நூற்றாண்டு விழா கொண்டாடிய மறைந்த பி.கக்கனாக ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நடிச்சது எனக்கு பெருமை. வடக்கே நிறைய நாடகக் குழுக்கள் இருந்த வேளை, நம் ஊரில் சென்னையில் நாம் துவங்க வேண்டுமே என 2012ல் ‘சென்னை அரங்கம்’ என்ற நாடகக்குழுவை அம்ஜத் மணிமேகலை மாதிரியான நாடக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு. ஆரம்பமே சென்னை அரங்கத்தின் முதல் நாடகமாக சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ என்ற நாடகத்தை சென்னை மியூசியம் அரங்கில் மேடையேற்றினோம். இந்நாடகத்தை திருவண்ணாமலையிலும் நடத்தினோம்.

2015ல் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்னும் என் புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், பிறகு நான் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பா மாற்றி ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ என்னும் பெயரில் ‘வம்சி புக்ஸ்’ வெளியீடாக வந்து நல்ல பெயர் கிடைச்சது. என்னுடைய எழுபதாண்டு மேடை அனுபவத்தை முன்னிட்டு ஒரு விழாவும் நடந்தது.  

தில்லியில் 50 வருடங்கள் வாழ்க்கை பல ஆண்டுகளாக உயர் பதவியில் இருந்து, இப்போது பெங்களூரில் இருக்கேன். எஸ்.கே.எஸ்.மணி இதுதான் என் பெயர். ‘பாரதி’ திரைப்படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடிச்சேன். அதில் இருந்து ‘பாரதி’ மணி ஆகிட்டேன். நானாக சொல்லணும்னா இதெல்லாம் சாதனையாக சொல்ல முடியாது. ஏதோ செய்து கடந்து வந்து இங்கே அமர்ந்திருக்கிறேன். இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அத்தனை நட்புகளையும் இழக்காமல் வாழ்க்கையை கொண்டு செல்வதுதான் என் குறிக்கோள்.

இந்தப் பயணத்திலே சினிமா நுழைவுதான் தேவையில்லாத ஒன்று. காரணம் அது டவுன் பஸ் மாதிரி, இப்போது அந்த படங்களைப் பார்த்தால் நாயகிக்குத் தாத்தா அல்லது நாயகனுக்குத் தாத்தாவாக ரெண்டொரு நாட்கள் இருப்பேன், மூணாவது நாள் பஸ்ஸில் இருந்து இறக்கி விட்டது போல் இறக்கி விடுவார்கள்.

அதனாலேயே இந்த சினிமா நடிப்பு எனக்குத் தேவையில்லாமல் தலையைக் கொடுத்த உணர்வையே கொடுக்கும். ஆனாலும் நல்ல வாய்ப்பு எனில் விடுவதில்லை. நான் பெரும் எழுத்தாளர்கள் போல் 20, 30 தொகுப்பு புத்தகங்கள் எல்லாம் எழுதினது இல்லை. ஆனால், எழுதின ஒரு புத்தகம் மூலமா நிறைய நண்பர்கள், வாசகர்கள் சேர்ந்திருக்காங்க. சந்தோஷமா இருக்கு.

எங்களுடைய திருவனந்தபுரம் வீடு ஒரு வேடந்தாங்கல் மாதிரி. பெரிய பெரிய நாடகக் கலைஞர்களான எம்.கே.டி.பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பி.யூ.சின்னப்பா, மதுரகவி பாஸ்கரதாஸ், இப்படி பலரும் எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி வந்து போவாங்க. அதனாலேயே எனக்கும் நாடகத்துக்குமான தொடர்பு எனக்கே தெரியாமல் என்னுடன் சேர்ந்துகொண்டது.

என் அப்பாவும் ராஜமாணிக்கம் பிள்ளையும் நல்ல நண்பர்கள். அவரிடமே என்னை நடிப்புக் கலைப் பயிற்சிக்கு என் அப்பா சேர்த்துவிட்டார். நானே திட்டமிடாமல் எனக்குள் வந்த ஒன்றுதான் நாடகங்கள். என்னை நானே பராமரிப்பது எப்படி, குரல் வளம் பேணுதல், நடிகனாக என்னை நானே முன்னிருத்திக் கொள்ளுதல் இப்படி அத்தனையும் நவாப் ஐயா கிட்டேதான் கத்துக்கிட்டேன். நிறைய கதைகள், நிறைய சம்பவங்கள். 82 வயதுக் கதை இதையெல்லாம் சொல்ல ஒரு கட்டுரை பத்தாது.

எனக்கு காதல் திருமணம். ‘மழை’ என்கிற நாடகத்திலே நடிக்கறதுக்காக வந்தவங்க ஜமுனா. சாகித்ய அகாடமி விருது பெற்ற க.நா.சுப்பிரமணியத்தின் ஒரே செல்ல மகள். ‘மழை‘ நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மழையில் பார்த்த முதல் காதல் அரும்பி வளர்ந்து கல்யாணம் ஆனது. தில்லியிலே 1972ல் திருமணம். எனக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ரேவதி, இரண்டாம் மகள் அனுஷா. என்னிடம் ஒரு பைசா வாங்காமல் ஸ்காலர்ஷிப்பிலேயே டாக்டரேட் படிப்பையே முடித்த முத்தான மகள்கள்.  

என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல... நீங்கள் பயணிக்கும் வாழ்க்கையில் நிறைய நண்பர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை அற்புதமான பாதையில் கூட்டிச் செல்வர். இதுதான் நான் கற்றுக்கொண்ட ‘நான்’.  

ஷாலினி நியூட்டன்

வி. வெங்கடேஷ்