தல...sixers story-27



மானத்தைக் காப்பாத்துப்பா!

அறுபது ரன்கள் முன்னிலையோடு இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இந்தியா.குறைந்தது 400 ரன்களை இலக்காகத் தரவேண்டுமென திட்டமிட்டார் கேப்டன் திராவிட்.அதற்கேற்ப அவர் அமைத்த வியூகத்தில் வழக்கத்துக்கு மாறாக பவுலர் இர்ஃபான் பதான் ஓப்பனிங் இறங்கி 93 ரன்கள் விளாசினார்.திராவிட்டும் தன் பங்குக்கு ஓர் அரை செஞ்சுரியை எடுத்திருந்தார்.

திராவிட், அவுட் ஆகும்போது இந்தியாவின் ரன்கள் 190 ஆக இருந்தது.களத்தில் கங்குலி இருந்தார். அவரோடு யுவராஜ்சிங் இணைந்தார்.200 ரன்களை எட்டுவதற்குள்ளாகவே ஐந்து விக்கெட்டு களை இழந்திருந்த இந்திய அணி, 400 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்தது.6வது விக்கெட்டாக கங்குலியும் விழுந்த நிலையில் தோனி உள்ளே வந்தார்.

ஏற்கனவே கங்குலியும், யுவராஜ்சிங்கும் நிதானமான தடுப்பாட்ட முறையில் ஈடுபட்டு, போட்டி டிராவை நோக்கிப் போகுமோ என்கிற நிலையிருந்தது.ஆனால் -தோனி, தான் சந்தித்த இரண்டாவது பந்தையே பவுண்டரிக்கு விரட்டியடித்து, ஆட்டத்தில் சுறுசுறுப்பை ஏற்றினார்.மறுபக்கம் யுவராஜ், ஏற்கனவே செட்டில் ஆகியிருந்தமாதிரி நிதானமாக ஆட, தோனியோ இந்தப் பக்கத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசத் தொடங்கினார்.

நடப்பது டெஸ்ட் போட்டியா, ஒருநாள் போட்டியா என்று குழப்பம் ஏற்படு மளவுக்கு மைதானத்தின் நாலாபுறமும் பந்துகள் பறந்தன.ஒரு சிக்ஸர் விளாசி, டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய முதல் அரை செஞ்சுரியை (48 பந்துகளில்) பதிவு செய்தார் தோனி.தோனியின் அரை செஞ்சுரிக்காகத்தான் காத்திருந்தார் திராவிட்.இந்தியா 375 ரன்களை எட்டிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

முதல் இன்னிங்ஸ் 60 ரன்கள் முன்னிலையோடு 436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கை இலங்கையால் சேஸ் செய்ய முடியவில்லை. 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.டெஸ்ட்டில், தான் ஆடிய முதல் இன்னிங்ஸில் கொஞ்சம் சொதப்பிவிட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் விட்டதைப் பிடித்தார் தோனி.

சூழலுக்கு ஏற்றவாறு, தன்னுடைய பேட்டிங் வேகத்தை அதிகரித்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் என்கிற பெயரையும் பெற்றார்.
அகமதாபாத்தில் நடந்த  மூன்றாவது போட்டியில் ஃபார்மில் இல்லாத கங்குலி நீக்கப்பட்டது அப்போது ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. நாடெங்கிலுமிருந்த கங்குலி ரசிகர்கள் ஆங்காங்கே இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

போதாக்குறைக்கு திராவிட்டுக்கு வேறு உடல்நலக்குறைவு.அப்போட்டியில் கேப்டனாக சேவாக் பொறுப்பேற்றார்.சொந்த மண்ணில் இந்தியா போட்டித்தொடரைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற இக்கட்டோடு நடந்த போட்டி அது.ஓப்பனர்கள் காம்பீரும், சேவாக்கும் விரைவாக வீழ்ந்துவிட, ஒருமுனையில் நங்கூரம் அமைத்து லக்‌ஷ்மண் மட்டும் போராடிக் கொண்டிருந்தார்.

டெண்டுல்கர் 23, யுவராஜ் டக் அவுட், முகம்மது கைஃப் வெறும் 4 ரன்கள் என்று வரிசையாக அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.நூறு ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தோனியிடம், “மானத்தைக் காப்பாத்துப்பா” என்று வேண்டுகோள் விடுத்து சேவாக் அனுப்பி வைத்தார்.லக்‌ஷ்மண் ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் தன்னுடைய ஸ்டைலில் பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார் தோனி.

அடுத்த அரைசெஞ்சுரி என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 49வது ரன்னில் தன்னுடைய விக்கெட்டை முரளிதரனுக்கு பறிகொடுத்தார் தோனி.
இப்போட்டியிலும் பதான் தன் அதிரடியைக் காட்டி 82 ரன்கள் எடுத்தார். லக்‌ஷ்மண் செஞ்சுரி அடித்திருந்தார்.முதன் இன்னிங்ஸில் 398 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. பதிலடியாக இலங்கை கொடுத்ததோ 206 ரன்கள்தான். 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியை முற்றிலுமாக நிலை
குலைய வைத்தார் ஹர்பஜன்சிங்.

கிட்டத்தட்ட 200 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியபோது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி எதுவுமில்லை.
கேப்டன் சேவாக், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே முட்டையைப் போட்டிருந்தார். யுவராஜ்சிங்கின் அரைசெஞ்சுரி தவிர்த்து, அகர்கர் அடித்த அதிவேக 48 ரன்களோடு 300 ரன்களைக் கடந்தது இந்தியா. 14 ரன்களில், முதல் இன்னிங்ஸைப் போலவே முரளிதரனுக்கு பலியானார் தோனி.
509 ரன்கள், இலங்கைக்கு வெற்றி இலக்கு. பாதி கடல்தான் தாண்ட முடிந்தது இலங்கையால். 259 ரன்கள் வித்தியாசத்தில் பிரும்மாண்டமான வெற்றியை ருசித்தது இந்தியா.

இந்திய அணியில் ஏகப்பட்ட குழப்படிகள் இருந்த நிலையில் அந்த டெஸ்ட் போட்டித் தொடரை வெல்ல முடிந்தது என்பது, இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டுக்கேகூட ஆச்சரியமாக இருந்திருக்கும்.புதுமுகமாக அணிக்குள் நுழைந்த விக்கெட் கீப்பர் தோனியின் பேட்டிங், எல்லோருக்குமே திருப்தி.

அதற்கு முன்பாக தினேஷ் கார்த்திக், பல போட்டிகளில் சொதப்பிக் கொண்டே இருந்த நிலையில் விக்கெட் கீப்பிங்கில் திறமை காட்டுவதோடு, அணியின் வெற்றிக்கு பிரதான பங்களிப்பையும் தரக்கூடிய பேட்ஸ்மேனாக தோனி, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.எனவே -
2006 தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பரம எதிரி யான பாகிஸ்தானுடனான சுற்றுப் பயணத்தில் அணியில் தோனியின் தேர்வு என்பது இயல்பானதாகி விட்டது.

ஜனவரி 13ஆம் தேதி லாகூரில் தொடங்கிய போட்டி வித்தியாசமானது.ஒரு பக்கம் கடுமையான மழை. மறுபக்கம் பாகிஸ்தான் - இந்திய பேட்ஸ்மேன்களின் ரன் மழை.

(அடித்து ஆடுவோம்)
 
யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்