கோவிட் எச்சரிக்கை!இதென்ன புதிதாக எச்சரிக்கை? அதுதான் ஓராண்டுக்கும் மேலாகி விட்டதே? எத்தனையோ மருத்துவர்கள் எவ்வளவோ எழுதி விட்டார்களே... இதுவரை சொல்லாத எதை சொல்லப் போகிறேன்?புதிதாக எதுவும் இல்லைதான். ஆனால், சிலவற்றை நினைவூட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

1. நமக்கெல்லாம் கொரோனா வராது - இந்தச் சிந்தனைதான் முதலில் உடைக்கப்பட வேண்டியது. யாருக்கும் வரலாம். யாருடைய உயிரையும் பறிக்கலாம்.

2. அறிகுறிகள் தெரிந்த பிறகும், ‘இது கொரோனாவாக இருக்காது, சாதாரண சளி ஜுரம்தான், சாதாரண வறட்டு இருமல்தான்’ என்ற சிந்தனை - இது தனக்குத்தானே வேட்டு வைத்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் வேட்டு வைக்கிற விஷயம். இந்த மற்றவர்கள் என்பவர்களில் உங்கள் பிள்ளைகள், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அறிந்தோர் அறியாதோர் எவராகவும் இருக்கலாம். அறியாமையாலும் அலட்சியத்தாலும் பலபேரைப் பாதிக்கிறது இந்த சிந்தனைப்போக்கு.

3. அறிகுறிகள் தெரிந்த உடனே கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும். அப்படி உடனே டெஸ்ட் எடுக்கப் போகாவிட்டாலும்கூட, டெஸ்ட் எடுக்கும் வரையில் வெளியே சுற்றாமல், தனிமையில் இருப்பது நல்லது. தொற்று இருந்து டெஸ்ட் எடுக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால், சைலன்ட் ஸ்பிரெடராக நீங்கள் ஊர் முழுதும் நோயைப் பரப்பிக் கொண்டிருப்பீர்கள்.  

4. டெஸ்ட் எடுத்த பிறகு பாசிடிவ் வந்தால்தான் உங்களுக்குத் தகவல் வரும். நெகடிவ் என்றால் தகவல் வராது. தமிழ்நாட்டில் அப்படித்தான் நடைமுறை என்று தகவல். தில்லியில் அப்படியில்லை. நெகடிவ்-பாசிடிவ் எதுவாக இருந்தாலும் தகவல் வரும். பாசிடிவ் என்று தகவல் வரவில்லை என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

5. பாசிடிவ் வந்தால் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவமனையில் அனுமதி, அல்லது வீட்டிலேயே தனிமையில் இருக்கச் சொல்லுவார்கள். மருந்து கொடுப்பார்கள்.

6. ஒருவேளை நெகடிவ் வந்தால்...? அறிகுறிகள் கடுமையாக இருந்தும் நெகடிவ் வந்தால், அது false negative ஆக இருக்கலாம். ஆர்டிபிசிஆர் டெஸ்ட்களில் 20-30 விழுக்காடு தவறாகக்கூடும். உதாரணமாக, என் சின்ன மகளுக்கு இரண்டு டெஸ்ட்கள் எடுத்தும் இரண்டும் நெகடிவ். ஆனால், கடுமையான அறிகுறிகள் இருந்தன. எனவே, இப்போதும் தனிமையில் இருக்கிறாள். நெகடிவ் ரிசல்ட் வந்தாலும்கூட, அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

7. பாசிடிவ் வந்தால், அடுத்து  சிடி ஸ்கேன் எடுக்கச் சொல்லுவார்கள். நுரையீரல் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை அதுதான் காட்டும். நிமோனியா அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர்வதே உத்தமம்.

8. சில நேரங்களில் சிடி ஸ்கேனில் நுரையீரல் பாதிப்பு குறைவாகக் காட்டும். ஆனால், உண்மையில் வேறு பாதிப்புகள் இருக்கலாம். அதற்காக, inflammation markers எனப்படும் சில பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. அவை - C-reactive protein எனப்படும் CRP, D-dimer, IL-6,  Hemoglobin and Platelets. வயதானவர்கள், ஏற்கெனவே இதர நோய்கள் உள்ளவர்கள் மருத்துவர்களுடன் ஆலோசித்து இந்தப் பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது.

9. கோவிட் நோய்க்கென சிறப்பு மருந்துகள் ஏதும் இல்லை. காய்ச்சல் இருந்தால் பாரசிடமால்; ஸின்கோவிட் எனப்படும் ஸிங்க் ப்ளஸ் வைட்டமின் சத்து மாத்திரை, வைட்டமின் சி மாத்திரை, இருமல் மருந்து - இவைதான் பொதுவாகத் தரப்படும் மருந்துகள். புரோட்டீன் ஊட்டச்சத்தும், மூலிகைக் கசாயங்களும் தரப்படுவதுண்டு.

எல்லாம் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மருந்துகள். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் தவிர, கண்டவர்களும் கொடுத்த ஆலோசனைகளின்படி மருந்துகளை எடுக்கக் கூடாது.

10. சாப்பிடக் கஷ்டமாக இருந்தாலும் சத்தான உணவை சிரமப்பட்டு சாப்பிட்டு தெம்பேற்றிக் கொள்ள வேண்டும். நிறைய திரவ உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் போக்கும் சேர்ந்தால் டீஹைடிரேஷன் ஏற்படும் ஆபத்து உண்டு. வெளியேறும் நீருக்கு ஏற்ப நீரேற்றிக் (ரீஹைடிரேஷன்) கொள்ள வேண்டும். எனக்கு டீஹைடிரேஷன் ஆனதால் குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டேன்.

10. ஆக்சிமீட்டரில் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். 94 என்பது சரியான அளவு. சில நேரங்களில் 90க்கும் போகக்கூடும். ஆனால், தொடர்ந்து 90க்குக் கீழே போவது ஆபத்து.

11. மூச்சு விடுவதில் சிரமமும் இருமலும் இருந்தால் ஆவி பிடிப்பது அவசியம். நிலைமையைப் பொறுத்து 2 மணிக்கொரு முறை அல்லது 4 மணிக்கொரு முறை ஆவி பிடிக்க வேண்டும். அடிவயிற்றிலிருந்து எக்கி எக்கி பத்துப் பதினைந்து நிமிடங்கள் விடாமல் இருமி இருமிக் களைத்து நெஞ்செல்லாம் வலிக்கும்போதுதான் கொரோனா எவ்வளவு தீவிரமானது என்று புரியும்.

12. கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். அடிக்கடி கை படுகிற இடங்களை சானிடைசர் கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்துகிற பொருட்களை வேறு யாரும் தொடக்கூடாது.  

13. கோவிட் பரவல், கொரோனாவின் இயல்புகள் குறித்து புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று, முன்னர் நினைத்திருந்ததைவிட, காற்றில் நுண்கிருமித் துகள்கள் அதிக நேரம் இருக்கின்றன என்ற தகவல். அதாவது, தொற்றுள்ளவர்கள் கைபட்ட இடங்கள், பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றிலிருந்து பரவுவதைவிட காற்றில் மிதக்கும் துகள்கள் மூலம் பரவல் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. ‘லான்செட்’ இதழில் வந்த அந்தக் கட்டுரை, கட்டடங்களுக்கு உள்ளேயும் மாஸ்க் அணிந்திருப்பதே நல்லது என்று வலியுறுத்துகிறது.
 
14. கோவிட் தொற்றுக்கு ஆளானவர்கள் மத்தியில் Mucormycosis என்னும் பூஞ்சைத்தொற்று அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சூழலில் இயற்கையிலேயே இருக்கும் பூஞ்சைத் தொற்று காரணமாக, சைனஸ், நுரையீரல், மூளை, இதயம், கண்கள் ஆகியவை பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே பாதிக்கிறது என்றாலும், ஏற்கெனவே சர்க்கரை நோய் போன்ற இதர நோய்கள் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று கோவிட் டாஸ்க் ஃபோர்ஸ் எச்சரித்துள்ளது.

இதன் விளைவுகள் குறித்து விவரமாக எழுதி பீதி ஏற்படுத்த விரும்பவில்லை. மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் மகாராஷ்டிரா, குஜராத், தில்லியில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்போது பெங்களூரிலும் கண்டறியப்பட்டுள்ளது.

15. கொரோனா இன்னும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று முழுவதும் தெரியாது. திடீர் என்று சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படுவதும் அதில் ஒன்று. உதாரணமாக, எனக்கு சர்க்கரை நோய் கிடையாது. ஒரு சந்தேகத்தின்பேரில் மருத்துவர் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யச் சொல்ல, 190 இருந்தது எனக் கண்டறியப்பட்டது. மருந்துகளின் உதவியால் கட்டுக்குள் வந்தது. கோவிட்டிலிருந்து மீண்ட பிறகு HbA1C பரிசோதனை ஒன்று எடுத்து சரிபார்க்க வேண்டும்.

16. கோவிட் தொற்றிலிருந்து மீண்டபிறகு, கூடிய விரைவில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து, இதயம் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கோவிட்டுக்குப் பிந்தைய சிக்கல்களை தவிர்க்க இது உதவும்.  

17. மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது முறையாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள். மருத்துவர்கள் சொல்கிறபடி கேளுங்கள். உங்களை நீங்களே காத்துக்கொள்ள மருத்துவத் தொழில்துறையினரையும் காத்திடுங்கள். ஏற்கெனவே பணிச்சுமையால் தவிக்கும் அவர்கள் மீது நோய்ச்சுமையைத் திணித்து விடாதீர்கள்.உயிர்காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

#Stay_Safe
பி.கு. எனக்கு கோவிட் வருவதற்கு முன்பே inflammation markers குறித்து எச்சரித்த டாக்டர் சசித்ரா, கோவிட் காலம் முழுவதும் தினமும் பலமுறை தொலைபேசிவழி விசாரித்து ஆலோசனைகள் அளித்த டாக்டர் முத்துதுரை கண்ணன், கட்டுரையைப் படித்து திருத்தங்கள் பரிந்துரைத்த டாக்டர் ரோகிணி, மகள்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கி வரும் டாக்டர் ஷமீம் அப்துல் மஜீத்  ஆகியோருக்கு நன்றி.

ஆர்.ஷாஜகான்