இயற்கையோடு இணைந்து வாழ்ந்தா எந்த நோயும் வராது!இயற்கையோடு இணைஞ்சு வாழ்ந்தா எந்த வைரஸ் பாதிப்பும் ஏற்படாது...’’ அழுத்தமாகச் சொல்கிறார்கள் ஷாமி ஜேக்கப் & சார்லட் க்ளூஸ்டர் தம்பதியர்.பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஆம்ஸ்டர்டாமில் வாழ்க்கை, கைநிறைய பணம், சொந்த நிறுவனம் என இருந்தவர் ஷாமி ஜேக்கப். ஒரே நாளில் அத்தனையையும் விட்டுவிட்டு தனது நெதர்லாந்து மனைவி  மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னை வந்து இயற்கையோடு இயற்கையாக வாழ ஆரம்பித்துவிட்டார்.  

சென்னை தாழம்பூரில் கறவை மாடுகள், கோழிகள், வாத்துகள், மயில்கள், காய்கறி தோட்டங்கள்... என கண்களுக்கு விருந்தளிக்கும் ரம்மியமான சூழலுடன் நம்மை வரவேற்கிறது ‘ஷாமி & க்ளூஸ்டர் ஃபார்ம்ஸ்’.‘‘இயற்கை நமக்கு எல்லாம் கொடுத்திருக்கு. பதிலுக்கு நாம இயற்கைக்கு என்ன கொடுத்தோம்? இதற்கான பதில்தான் எங்க ஃபார்ம்...’’ பெருமையுடன் தன் வீடு, தோட்டம் என சுற்றிக்  காண்பிக்கிறார் ஜேக்கப்.

‘‘சென்னைதான் சொந்த ஊர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டிருந்தவன், தில்லி NEFTல ஃபர்ஸ்ட் பேட்ச் ஃபேஷன் டெக்னாலஜிக்கு என் படிப்பை மாத்திட்டேன். அங்கேயே சிலகாலம் வேலை செய்தேன். அப்புறம் இந்தோனேஷியாவுல ஃபேஷன் டிசைனர் வேலை. 1996ல அமெரிக்காவிலுள்ள பிரபல கம்பெனில வேலை கிடைச்சது. அங்க ஃபேஷன் மறுசுழற்சி, ஆர்கானிக் உற்பத்தி, சஸ்டைனபிள் ஃபேஷன்னு அது சார்ந்த பகுதில வேலை செய்திட்டு இருந்தேன்.

பிறகு ஆம்ஸ்டர்டாமில் சொந்தமா ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். அங்கதான் சால்சா டான்ஸ் நிகழ்ச்சில குளூஸ்டரை சந்திச்சேன். பேசினோம். பழகினோம். பரஸ்பரம் பிடிச்சிருந்தது. காதலாகி கசிந்து கல்யாணமும் செய்துகிட்டோம்...’’ என்ற ஜேக்கப், தங்கள் இருவருக்குமே இயற்கையாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

‘‘இன்னமும் சொல்லணும்னா என்னைவிட குளூஸ்டருக்கு இதுல ஆர்வம் அதிகம். பயோ லைஃப் பயாலஜி பத்தி நிறைய ஆராய்ச்சிகள் செய்து அதுல டாக்டர் பட்டமும் வாங்கியிருக்காங்க...’’ என்ற ஜேக்கப்பை செல்லமாக தட்டிவிட்டு குளூஸ்டர் தொடர்ந்தார். ‘‘ஆக்சுவலா இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளையும் மூலிகைகளையும் பாதுகாக்கும் பணில இந்திய அரசுடன் சேர்ந்து வேலை செய்யறேன். இயற்கையான வாழ்க்கை முறையை இன்னமும் ஓரளவு பின்பற்றுகிற நாடுகள்ல இந்தியாவும் ஒண்ணு.

திருமணமானதும் எங்க குழந்தைகளுக்கு இயற்கையான முறைல நல்ல உணவுகளைக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆம்ஸ்டர்டாம் வாழ்க்கை பிடிக்கலை. கால்ல சக்கரத்தை கட்டிகிட்டு ஓடறா மாதிரி அவ்வளவு பிசியான நகரம். அதுல இருந்து விடுபட நினைச்சோம்.

விடுமுறை கிடைச்சதும் இந்தியா வருவோம். தங்கிட்டுப் போவோம். அப்பதான் ஏன் இந்தியாவுலயே நிரந்தரமா தங்கக் கூடாதுனு தோணுச்சு. உடனே இங்க வந்துட்டோம். என்ன மாதிரி வாழ்க்கையை இங்க வாழலாம்னு யோசிச்சு நாங்க எடுத்த முடிவுதான் இந்த ‘ஜேக்கப் & குளூஸ்டர் ஃபார்ம்ஸ்’.
நாங்க இங்க வந்தப்ப கரண்ட், தண்ணீர் வசதி கிடையாது. சுத்தி காடுதான். சர்வ சாதாரணமா பாம்புகளும் காட்டுப் பன்றிகளும் வரும்.  

எல்லாத்தையும் எங்க குழந்தைங்க சமாளிச்சு வாழணும்னு நினைச்சோம். இதோ... பத்து வருடங்கள் ஓடியே போச்சு. சுத்தமான குடிநீர், வீட்ட சுத்தி காய்கறி தோட்டங்கள், இணையதள வசதினு எல்லாமே இப்ப இங்க இருக்கு.ஆனா, இது எதுக்காகவும் நாங்க இயற்கையை தொந்தரவு செய்யலை. குழந்தைங்களுக்கு இயற்கையான பாலை கொடுக்கணும்னு ஆரம்பத்துல ரெண்டு மாடுகள் வாங்கினோம். அதைப் பார்த்துட்டு அக்கம் பக்கத்துல இருந்தவங்க எங்களுக்கும் பால் கொடுங்கனு கேட்டாங்க. அதுக்காக மாடு வாங்கப் போய் இப்ப 15 மாடுகள் எங்ககிட்ட இருக்கு!

அப்புறம் நாட்டுக் கோழி முட்டைகள் கிடைக்குமானு பலரும் கேட்டாங்க. கோழிகள் வளர்க்க ஆரம்பிச்சோம்!’’ என்ற குளூஸ்டர், தாங்கள் வெஜிடேரியன்ஸ் என்றும், முட்டை மட்டுமே சாப்பிடுவதாகவும் சொல்கிறார்.‘‘தொடர்ந்து சாப்பிட காய்கறிகளுக்கு தோட்டம் போட ஆரம்பிச்சு மரங்கள்ல தேனீக்கள் கூடு கட்டி... தேன் எடுத்து... இப்ப முழுக்க முழுக்க இயற்கையாகவே வாழறோம்.

எங்க பண்ணையைத் தேடி பலரும் வர ஆரம்பிச்சாங்க. அவங்களுக்காகவே எங்க ஃபார்ம் உள்ள காபி ஷாப், ஆர்கானிக் ஷாப் தொடங்கியிருக்கோம்.
பசும்பால்ல காபி, டீயும் வீட்டுத் தோட்டத்துல கெமிக்கல் கலக்காம வளர்ந்த பழங்கள், காய்களையும் விற்பனை செய்யறோம்.

ஆக்சுவலா எல்லாமே எங்களுக்காக ஆரம்பிச்சதுதான். தெரிஞ்ச நண்பர்கள் முதல்ல இங்க வந்தாங்க... பிறகு நண்பர்களின் நண்பர்கள்னு ஆரம்பிச்சு இப்ப ‘கேள்விப்பட்டு பார்க்க வந்திருக்கோம்’னு நிறைய பேர் வர்றாங்க. சிலர் சில நாட்கள் இங்க தங்கவும் ஆசைப்பட்டாங்க. அதனால வீட்டுக்கு பின்னாடியே ரூம்ஸ், மீட்டிங் ஹால் எல்லாம் கட்டியிருக்கோம்.

அதுமட்டுமில்ல... பள்ளி களும் ஒருநாள் பிக்னிக்கா பசங்களை கூட்டிட்டு இங்க வரத் தொடங்கினாங்க. இப்ப தினமும் பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையின் அவசியத்தை உணர்த்தி இயற்கையோடு எப்படி இணைஞ்சு வாழணும்னு வகுப்பெடுக்கிறோம்.

அதோட எங்க ஃபார்மையே உதாரணமா வைச்சு உலகளவுல ஆன்லைன் வகுப்புகள் எடுக்கறோம்...’’ என குளூஸ்டர் முடிக்க, ‘இயற்கையாக நாங்க வாழ ஆரம்பிச்சதுமே இயற்கை எங்களுக்கு பல வகைகள்ல உதவ ஆரம்பிச்சது...’ என ஒரு சம்பவத்தைப் பகிர்ந்தார் ஜேக்கப்.

‘‘குழந்தைகளுக்கு நல்ல வாழ்வியலைக் கொடுத்துட்டோம்... நல்ல கல்வியும் கொடுக்கலாம்னு பெசன்ட் நகர்ல ஒரு பிரபல ஸ்கூல்ல சேர்க்க முடிவு செய்தோம். ஆனா, தாழம்பூர்ல இருந்து அங்க போறது கஷ்டம். அதனால இங்கயே பக்கத்துல ஒரு ஸ்கூல்ல சேர்த்தோம். சொன்னா நம்ப மாட்டீங்க. எந்த ஸ்கூல்ல சேர்க்கணும்னு ஆசைப்பட்டோமோ அதே ஸ்கூல் ரெண்டே வருஷங்கள்ல எங்க வீட்டுக்கு பின்னாடி ஷிஃப்ட் ஆச்சு! இப்ப நல்ல கல்வியும் எங்க குழந்தைகளுக்குக் கிடைக்குது.

ஐடி, கார்ப்பரேட் பணியாளர்களுக்கு நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் இயற்கை வாழ்தல் மற்றும் நிலைத்தன்மை (sustainability) பத்தி வகுப்புகள் எடுக்கறோம். பள்ளிக் குழந்தைகளுக்கு தோட்டம் அமைத்தல், மாடு, கோழி வளர்த்தல்னு எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கறோம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கிருக்கும் மீட்டிங் ஹாலை பயன்படுத்தறாங்க. காலைல யோகா, தியானம். மாலைல டான்ஸ் பயிற்சி... மொத்தத்துல நிறைவா சந்தோஷமா வாழறோம்.

எங்க ஒரு ஃபேமிலிக்கே இப்படினா எல்லாரும் இயற்கையோடு இணைஞ்சு வாழ ஆரம்பிச்சா எப்படி இருக்கும்..? அதுதான் வாழ்க்கை! ஒரு மழைக்காலத்தப்ப முன்பக்க கேட் ஓரமா குளம் அமைக்கலாம்னு பள்ளம் வெட்டினோம். இது எப்படி தெரிஞ்சதுனு தெரியலை... மடமடனு வாத்துகள் வந்து சேர்ந்துச்சு. இப்ப வாத்துகள் ஒரு குழுவா இங்கயே தங்குது!

மாலை நேரத்துல பண்ணை முழுக்க மயில்களை நீங்க பார்க்கலாம்...’’ என ஜேக்கப் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் குளூஸ்டர்.‘‘சுத்தமான கிணத்துத் தண்ணீரை ஆர்.ஓ செய்து பயன்படுத்துறோம். மழைநீரை சேமிக்க பெரிய டேங்க் அமைச்சிருக்கோம். இந்த கொரோனா காலத்துல மக்கள் வரவு குறைஞ்சிருக்கு... ஆனா, ஆன்லைன் வகுப்புகள் அதிகரிச்சிருக்கு. மத்தபடி எங்க அன்றாட வாழ்க்கை இயற்கையோடு பின்னிப் பிணைஞ்சு போயிட்டிருக்கு...’’ பெருமையாகச் சொல்கிறார்கள் இந்த இயற்கைக் காதலர்கள்!

செய்தி:  ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால், சுவேதா பாலாஜி