அற்புத மருந்தா ரெம்டெசிவிர்?ஓர் அலுவலகத்தின் ஏதோ ஒரு மூலையில்  கொஞ்சமாக தீப்பிடிக்கிறது. என்ன செய்வோம்?
உடனடியாக அருகில் இருக்கும் வாளி, பக்கெட்களில் தண்ணீரைப் பிடித்து ஊற்றுவோம்; சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தி நுரையைப் பீய்ச்சி அடிப்போம். அப்படியும் அணைக்க முடியாமல், மளமளவென அலுலகம் முழுமைக்கும் தீ பரவினால் என்ன செய்வோம்? உடனடியாக வெளியேறுவோம், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுப்போம்.

தீ விபத்து முடிந்த மறுநாள் என்ன செய்வோம்?
சேதத்தை அளவிட்டு, எரிந்தவற்றை சீரமைத்து, அதிகம் பாதிக்கப்படாத பொருட்களை பாதுகாத்து அலுவலகத்தை மறு உருவாக்கம் செய்வோம்.இந்த உதாரணத்தில் வரும் ‘தீ விபத்து’ கொரோனா என்றால் தீயணைப்புத்துறை ரெம்டெசிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.
வைரஸ்கள் மனித உடலில் நுழைந்தவுடன் ஒன்று இரண்டாக, இரண்டு நான்காகப் பிரிந்து பெருகும். அப்படிப் பிரிந்து எண்ணிக்கையில் அதிகரிக்க சில நொதிகள் அவசியம். அந்த நொதிகளைத் தடுத்து வைரஸ் பெருகுவதைக் குறைக்கும் மருந்துகள்தான் ரெம்டெசிவிர் உள்ளிட்ட ஆன்ட்டி வைரல் மருந்துகள்.

இந்த ரெம்டெசிவிர் கோவிட் நோய்க்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தல்ல. ஹெப்பாடைடிஸ் சி, எபோலா, சார்ஸ் போன்ற ஆர்.என்.ஏ வைரஸ்கள் உண்டாக்கும் நோய்களின் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதைய கோவிட் வைரஸும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் என்பதால் இதன் சிகிச்சையிலும் பயன்படலாம் எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

அப்படி கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்துப் பார்த்ததன் ஆராய்ச்சி முடிவுகள் உலகெங்கும் பலவாறு வந்துள்ளன. ரெம்டெசிவிர் மருந்து கொரோனா வைரஸை அழித்து இறப்பைக் குறைக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. எனினும் இப்போதைய காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனமும் அனுமதி கொடுத்துள்ளது.

சில மருத்துவர்கள் ரெம்டெசிவிரால் நோயின் தாக்கம் குறைவதாக தங்கள் அனுபவத்தில் கூறுகின்றனர். வேறு சில மருத்துவர்களோ ரெம்டெசிவிர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை எனக் கூறுகின்றனர். இது தவிர ஐவர்மெக்டின், அஸித்ரோமைசின் போன்ற பல
மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. ஆசெல்டாமிவிர் போன்ற ஆன்ட்டி வைரல் மருந்துகள் கூட சில இடங்களில் தரப்படுகின்றன. உண்மையில் கொரோனா தாக்கிய நோயாளிகளில் ரெம்டெசிவிர் தேவைப்படும் நோயாளிகளின் சதவீதம் வெகு குறைவே.

ஆனால், தொடர்ச்சியான செய்திகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே ரெம்டெசிவிர் தந்தே ஆகவேண்டும் எனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் “ரெம்டெசிவிர் கூட தராமல் என்ன மருத்துவம் செய்கிறீர்கள்?” என நோயாளியின் உறவினர்கள் சண்டை போடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொடுத்தால் ஏதாவது பலன் இருந்தாலும் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையிலும் பலருக்கு கொடுக்கப்படுகிறது.

முதல் அலையின் போது ஆயிரக்கணக்கானோர் ஐசியூவில் இருந்தபோது ரெம்டெசிவிர் பற்றாக்குறை பற்றி பெரிதாக பேச்சுகள் இல்லை.  இத்தனைக்கும் உற்பத்தி இப்போது இருப்பதைவிட குறைவாகத்தான் இருந்தது. இரண்டாம் அலையை எதிர்பார்த்து ரெம்டெசிவிரை கையிருப்பு வைக்காமல் மத்திய அரசு தவறிவிட்டது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி திடீரென ரெம்டெசிவிர் பற்றாக்குறையை அதிகரித்துவிட்டனர்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள உதாரணத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.  தீ சிறிய அளவில் எரியும் போதும் தீயணைப்புத் துறை தேவையில்லை. எரிந்து முடிந்து சாம்பலானபிறகும் தீயணைப்புத் துறை தேவையில்லை. சரியாகப் பற்றி எரியும்போது மட்டும்தான் தேவை.

அதுபோல கொரோனா ஆரம்பநிலையில் இருக்கும்போதும் ரெம்டெசிவிர் தேவையில்லை. முழுவதுமாக எரிந்து முடிந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கொடுப்பதாலும் பயன் இல்லை. சரியான நேரத்தில் ஆக்டிவ் வைரல் ரெப்ளிகேசன் (active viral replication) எனும் வைரஸ் பல்கிப் பெருகும் காலத்தில் கொடுத்தால்தான் பயன் உண்டு.

இந்த காலகட்டத்தை மருத்துவரால் மட்டுமே நிர்ணயிக்க முடியும். நோய் தொடங்கிய நாள், காய்ச்சலின் அளவு, நேற்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்குமான வித்தியாசம், ஆக்ஸிஜன் அளவு, நுரையீரல் பாதிப்பின் அளவு, இரத்தப் பரிசோதனை முடிவுகள் எனப் பல தரவுகளை வைத்தே மருத்துவர் முடிவு செய்வார்.

அதிலும் ஆன்ட்டிவைரல் மருந்து வேண்டுமா, துணை பாக்டீரியல் நிமோனியாவிற்கான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வேண்டுமா, எந்த ஆன்ட்டி வைரல் மருந்தை தேர்ந்தெடுப்பது, சிறுநீரகம், கல்லீரலின் நிலை என்ன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் மருத்துவரும் முடிவெடுப்பார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல மாத காலம் மருத்துவமனையில் இருந்தார். அத்தனை காலமும் ரெம்டெசிவிர் மருந்து தேவையா என்றால் கிடையாது. வைரஸ் பல்கிப் பெருகும் காலத்தில் மட்டுமே அது தேவை, அப்போது மட்டுமே அது வேலை செய்யும். அதன் பிறகான காலத்தில் சிகிச்சை என்பது வைரஸால் தாக்கப்பட்ட நுரையீரலை சீர்படுத்துவதுதான்.

பலரும் மாதக்கணக்கில் ஐசியூவில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அத்தனை காலத்திற்கும் ரெம்டெசிவிர் தேவையில்லை. அதேபோல மிக லேசான தொற்றுக்கும் ரெம்டெசிவிர் எடுத்துக் கொள்வது மெழுகுவர்த்தியை அணைக்க தீயணைப்புத்துறையை அழைப்பது போலத்தான். இன்றைய பற்றாக்குறை சூழலில் அதுவும் தவறு.

இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ரெம்டெசிவிரோ, ஆசெல்டாமிவிரோ, அதனைப் பரிந்துரைக்கும் முடிவை மருத்துவர்களிடம் விட்டுவிட வேண்டும். ரெம்டெசிவிர் கொடுத்தால்தான் பிழைப்பார் என்றோ, கொடுக்காமல் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்றோ மருத்துவ முடிவுகளில் தலையிடுவது தவறு.

அதேபோல மருத்துவர்களும் எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் வளையாமல் அறிவியல் முறைப்படி பரிந்துரைக்க வேண்டும்.அரசு ரெம்டெசிவிர் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீதும், செயற்கையாக தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். நிபுணர் குழு அமைத்து ரெம்டெசிவிர் பயன்பாடு குறித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தாலே பல மணிநேர ரெம்டெசிவிர் வரிசை களைத் தவிர்த்துவிட முடியும்.

இச்செய்தி அரசுக்கும் போய்ச் சேர்ந்திருப்பதால், இப்பொழுது ரெம்டெசிவிர் நேரடியாக மருத்துவமனைகளுக்கே தரப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த அரசு என்பதற்கு இந்த உத்தரவே உதாரணம்.

அறிவியலையும் மருத்துவர்களையும் முழுமையாக நம்புவோம். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்போம். தேவைக்காக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவோம். சமூக இடை
வெளியைக் கடைப்பிடிப்போம். கொரோனா தொற்று தாக்காமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.

டாக்டர் சென்பாலன்