ஏழைப் பெண்ணை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கால்பந்து திட்டம்!ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒர்மான்ஜிகி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த  சீமா, ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 2012ம் ஆண்டு இவர் ‘யுவா’ என்கிற கால்பந்து திட்டத்தில் இணைந்தார்.

சீமா ஷார்ட்ஸ் அணிந்து கால்பந்து விளையாடுவதற்கு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. எதையும் பொருட்படுத்தாமல், சீமா தொடர்ந்து கால்பந்து விளையாடினார். இவர் இணைந்திருந்த யுவா திட்டம், அவரை குழந்தைத் திருமணத்திலிருந்து காப்பாற்றியது. விளைவு... இப்போது உலகின் தலைசிறந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க சேர்ந்துள்ளார்.

 “பாலின சமத்துவத்தையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அது என்னுடைய கிராமத்திலும் மற்ற இடங்களிலும் வரவேண்டும். இதுவே பொருளாதார வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சியையும் தரும். படித்து முடித்த பிறகு என் கிராமத்தில் பெண்களுக்காக இரண்டு திட்டங்களை தொடங்க உள்ளேன். ஒன்று, பெண்களுக்குத் தொழில் செய்ய கற்றுக் கொடுக்கும் திட்டம். மற்றொன்று, பெண்களுக்கு அவர்கள் உரிமை குறித்து எடுத்துரைக்கும் திட்டம்...” என்கிறார் சீமா.

அன்னம் அரசு