எரிமலையில் தயாராகும் பீட்சா!கவுதமாலாவின் அடையாளங்களில் ஒன்று பகாயா எரிமலை.

கடந்த பிப்ரவரியிலிருந்து பகாயா வெடித்து வருகிறது. அதனால் எரிமலைக்கு அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றுவிட்டனர். ஆனால், எரிமலையைப் பார்க்க சுற்றுலாவாசிகளின் கூட்டம் மொய்க்கிறது. இந்நிலையில் அங்கே புது டிரெண்டை செட் செய்து வைரலாகியிருக்கிறார் டேவிட் கார்சியா.
பீட்சா சமைப்பதில் ஆர்வமுடைய அக்கவுன்டன்ட் இவர். எரிமலை வெடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் எரிமலைக்குழம்பு மலையின் அடிவாரத்தில் நீரோடை போல கசிந்து ஓடும். அதனால் எரிமலைக் கற்கள் அனலில் கொதிக்கும். இந்த அனலில் பீட்சா சமைத்து அசத்திவருகிறார் டேவிட்!

1000 டிகிரி வெப்பநிலையில் இருக்கும் இந்த அனலைத் தாங்கும்விதமாக சமையல் பாத்திரத்தை பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார். அத்துடன் அனலைத் தாங்கும் கவச உடையுடன் பீட்சாவை ஒரு சில நிமிடங்களில் தயார் செய்கிறார். எரிமலையின் சூட்டில் தயாராகும் பீட்சா அசத்தலான சுவையில் இருப்பதாக சுற்றுலாவாசிகள் சப்புக்கொட்டுகிறார்கள். இதற்கு ‘பகாயா பீட்சா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் டேவிட்.

த.சக்திவேல்