ஜடையலங்காரத்தில் ஜெயித்துப் பாருங்க!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                வரலட்சுமி விரதம் நெருங்குகிறது. அம்மனை விதம்விதமாக அலங்கரித்து வழிபடும் இந்த விசேஷத்தில், ஹைலைட்டான விஷயம் அம்மனின் ஜடையலங்காரம்! வசதி இருப்பவர்கள் அம்மனின் பின்பக்கம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து, ஜடையலங்காரம் பார்வையாளர்களுக்குத் தெரிகிற மாதிரிக்கூட செய்வார்கள். அது முடியாதவர்கள், ஜடையலங்காரத்தை முன்பக்கம் போட்டுத் தெரிவது போலச் செய்வதுண்டு.

சென்னையைச் சேர்ந்த 80 வயது அமிர்தலட்சுமி, பலவித ஜடையலங்காரங்கள் செய்வதில் நிபுணி. அம்மனுக்கு மட்டுமின்றி, மணப்பெண்களுக்கான ஜடையலங்காரங்கள் செய்வதிலும் எக்ஸ்பர்ட்!

''நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து, ஊசியும் பாசியும் என் கூடவேதான் இருக்கு. எந்தப் பயிற்சிக்கும் போகாம, நானாவே தையல், எம்பிராய்டரி, கைவேலைன்னு எல்லாம் கத்துக்கிட்டேன். இப்பவும் எனக்கான ஜாக்கெட்டை நானே என் கைப்பட தச்சுத்தான் போட்டுப்பேன். 'என்னென்னமோ பண்றியே... வரலட்சுமி நோன்புக்கு அம்மனுக்கு ஜடை பண்ணிக் கொடேன்’னு என் பொண்ணுங்க ஒருமுறை கேட்கவே, சும்மா டிரை பண்ணிப் பார்த்தேன். கடைல வாங்கறதைவிட நல்லா வந்தது. எங்க வீட்ல அம்மனுக்கு வச்சிருந்ததைப் பார்த்துட்டு, வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்புக்கெல்லாம் ஜடை தைக்கவும் ஆர்டர் வர ஆரம்பிச்சது. பண்ணிட்டிருக்கேன்’’ என்கிற அமிர்தலட்சுமி, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘சாட்டின் துணி, சில்க் காட்டன், பேன்ட் துணி, வெல்வெட் துணினு எதுல வேணாலும் பண்ணலாம். துணி தச்சது போக மீந்து போன துண்டுத் துணிகள்லகூட பண்ணிடலாம். சமிக்கி, மணி, முத்து, கண்ணாடி, ஊசி, நூல்... எல்லாத்துக்கும் சேர்த்து 100 ரூபாய் போதும்.’’

எத்தனை மாடல்? ஒரு நாளைக்கு எத்தனை?

‘‘கற்பனைக்கேத்தபடி எத்தனை மாடல் வேணாலும் பண்ணலாம். அளவு மட்டும்தான் மாறும். கல்யாணப் பொண்ணுங்களுக்கு பண்றபோது கொஞ்சம் ஆடம்பரமா, அதிக வேலைப்பாட்டோட செய்யணும். கையாலயோ, மிஷின்லயோ தைக்கலாம். அடிப்படையைத் தெரிஞ்சுக்கிட்டா, ஒரு நாளைக்கு 8 முதல் 10 பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘அக்கம்பக்கத்து வீடுகள்லயே ஆர்டர் எடுக்கலாம். சாமிக்கான பொருட்கள் விற்கிற கடைகள்ல கொடுக்கலாம். கல்யாணப் பெண்களுக்கான ஜடையை பியூட்டி பார்லர்கள்ல மொத்தமா சப்ளை பண்ணலாம். 25 ரூபாய்லேர்ந்து, 150 ரூபாய் வரைக்கும் மாடலைப் பொறுத்து விலை... 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘2 நாள்ல 4 மாடல் கத்துக்க 100 ரூபாய் கட்டணம்.’’

ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்