ஒண்டிவீரன்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகள் அனைத்தும் 1800களுக்குப் பிறகான போராட்டங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அதற்கு ஒரு நூற்றாண்டு முன்பே வெள்ளையருக்கு வரி கொடுக்க மறுத்து, நேருக்கு நேர் களமாடி கதிகலங்க வைத்த போராளிகள் தமிழகத்தில் உண்டு. அவர்களில் முதன்மையானவர் மாவீரன் பூலித்தேவன். நெல்கட்டும்செவல் என்ற பாளையத்தை ஆண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீறுகொண்டு போராட முன்னோடியாக இருந்தவர்.

 உள்ளூர் துரோகிகளின் துணையோடு பெரும்படை நடத்திவந்த கர்னல் ஹெரான், டொனால்டு காம்பெல் போன்ற பிரிட்டிஷ் தளபதிகளை 4 முறை புறமுதுகிட்டு ஓடச்செய்த மாவீரன். அந்த மாவீரனின் வெற்றிக்குக் கைகொடுத்த முக்கியத் தளபதிகளில் ஒருவர்தான் ஒண்டிவீரன்!

வரலாற்றுப் பதிவுகளில் புறக்கணிக்கப்பட்ட வீரர்களில் முதன்மையானவர் ஒண்டிவீரன். ‘‘அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் மன்னர் படையணிகளில் முக்கியப்பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்களில் மதுரைவீரன், ஒண்டிவீரன் போன்றோர் முக்கியமானவர்கள். வரிகட்ட மறுத்து முதன்முதலில் ஆயுத நடவடிக்கையில் இறங்கிய மாமன்னன் பூலித்தேவனின் நம்பிக்கைக்குரிய தளபதிதான் ஒண்டிவீரன். இயற்பெயர் வீரன். ஒண்டிக்கு ஒண்டியாக நின்று எதிரியை வீழ்த்தும் வல்லமைமிகுந்தவர் என்பதால் ஒண்டிவீரன் ஆனார்.

இவரது தலைமையிலான பூலித்தேவன் படையினர் 18 அடி நீளமுள்ள ஈட்டியை குறி தவறாமல் எதிரிகள் மேல் பாய்ச்சுவதில் கைதேர்ந்தவர்கள். வெறும் வாளும் ஈட்டியும் கேடயமும் கொண்டு வெள்ளையர் பீரங்கிகளைத் தகர்த்தவர்கள். 1767ல் பூலித்தேவர் மறைந்தபிறகும், தங்கள் மண்ணை எதிரிகள் கைப்பற்றவிடாமல் சக தளபதிகளுடன் இணைந்து போராடியுள்ளார் ஒண்டிவீரன்’’ என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

ஒண்டிவீரன் பற்றி நெல்லை வட்டாரத்தில் பல கதைப்பாடல்கள் உலவுகின்றன. அப்பாடலில் இடம்பெறும் செய்திகள் வியப்பூட்டுகின்றன.

பூலித்தேவரின் ஒற்றர் படைக்கு தளபதியாக ஒண்டிவீரன் இருந்தார். அத்தருணத்தில் கர்னல் ஹெரான், போர்தொடுக்கும் நோக்கில் தென்மலையில் முகாமிட்டு காத்திருந்தான். என்னதான் வெள்ளையரை ஓட ஓட விரட்டியடித்தாலும், அவர்களின் பீரங்கித் தாக்குதலை சமாளிப்பது பாளையத்து வீரர்களுக்கு சிரமமாகவே இருந்தது. அதற்கு மாற்றுவழி காணுமாறு தளபதி ஒண்டிவீரனுக்கு உத்தரவிட்டார் பூலித்தேவன். அதையேற்று தானே களத்தில் இறங்கினார் ஒண்டிவீரன்.

அன்று இரவு தொழிலாளி வேடம் பூண்டு வெள்ளையர் முகாமுக்குச் சென்றார். வழிமறித்த ஹெரானின் வீரர்களிடம், குதிரைக்கு வார்கட்ட வந்ததாகச் சொல்லி உள்ளே நுழைந்த ஒண்டிவீரன், அனைவரும் அசந்த நேரத்தில் நெல்கட்டும்செவலை நோக்கியிருந்த பீரங்கிகளை வெள்ளையர் படை திசையிலேயே திருப்பி வைத்தார். அருகில் வெள்ளைக்காரனின் பட்டத்துக்குதிரை நின்று கொண்டிருந்தது. பட்டத்துக்குதிரை வெற்றியின் சின்னம். அதைக் கவர்ந்து செல்வது வெற்றி பெற்றதற்கு சமம். மெல்ல அதன்மேலேறி பிடரியைப் பிடித்து உலுக்கிக் கிளப்பினார். சிலிர்த்த குதிரை மிரண்டு சத்தம்போட, வீரர்கள் ஓடிவந்தார்கள். அருகில் இருந்த தீவனக்கொட்டடியில் புற்களை மேலே போட்டுக்கொண்டு ஒளிகிறார் ஒண்டிவீரன்.
குதிரை கட்டில்லாமல் நிற்பதைப் பார்த்த வீரர்கள், தீவனக்கொட்டடியில் குதிரையைக் கட்டுவதற்காக ஒரு இரும்புக்கம்பியை அச்சாக அடிக்கிறார்கள். அந்தக் கம்பி, ஒண்டிவீரனின் வலதுகையில் இறங்கி, பூமியைத் துளைக்கிறது. வலி உயிரை இழுக்கிறது. ஆனால், ஒண்டிவீரன் சத்தம்போடவில்லை. 

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineரத்தம் பெருக்கெடுக்கிறது. வலி வதைக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் விடியப் போகிறது. மன்னன் தமக்கிட்ட கட்டளையை நிறை வேற்ற வேண்டும். யோசித்த ஒண்டிவீரன் தன் இடதுகையால் வாளை எடுக்கிறார். அடுத்த நொடி, வலதுகையில் இறங்குகிறது வாள். துண்டாகிறது கை. ரத்தம் சொட்டச் சொட்ட பட்டத்துக்குதிரையை அவிழ்த்துக்கொண்டு வெள்ளையர் முகாமை விட்டு வெளியேறுகிறார். இதைக்கண்ட வெள்ளைக்கார வீரர்கள் பீரங்கியை இயக்க, முகாமுக்குள்ளேயே குண்டுகள் விழுகின்றன. நிலைகுலைந்த வெள்ளையர்கள் முகாமை காலி செய்துவிட்டு தப்பியோடுகிறார்கள்.

ஒண்டிவீரனின் இந்தக் கதையை, ‘அங்கக்கை போனால் என்ன, தங்கக்கை தருவான் பூலிமன்னன்’ என்று தொடங்கும் கும்மிப்பாட்டு வடிவில் பாடுகிறார்கள் நெல்லை மக்கள். இதன்மூலம், தன்னைத்தானே வருத்திக்கொண்டு விடுதலைக்காகப் போராடிய முதல் தற்கொலைப்படை போராளியாகவும் ஒண்டிவீரனை உணர முடிகிறது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் பல கிராமங்களில் ஒண்டிவீரனை காவல்தெய்வமாக வணங்குகிறார்கள். வெள்ளையருக்கு எதிராகப் பொங்கியெழுந்த வீரர்கள் சிந்திய ரத்தத்தாலோ என்னவோ, நெல்கட்டும்செவல் அடர்ந்த செம்மண் பூமியாக இருக்கிறது. சங்கரன்கோவிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம். பூலித்தேவனின் அரண்மனை இன்றும் அவரின் வீரத்துக்கு அடையாளமாகவே இம்மண்ணில் நிற்கிறது. ஒண்டிவீரனின் மரபைச் சார்ந்த மக்கள் அவருக்கும் ஒரு நினைவிடம் எழுப்பி அவர் நினைவைப் போற்றுகிறார்கள்.
‘‘பேராசிரியர் ராசையா உள்ளிட்ட சில வரலாற்று ஆய்வாளர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பைப் பதிவு செய்துள்ளார்கள். இந்தப்பணி விரிவடைய வேண்டும். அவ்விதம் செய்தால்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு முழுமை பெறும்’’ என்கிறார் பிரபஞ்சன்.
வெ.நீலகண்டன்
படங்கள்:முத்தையா, ஆர்.சந்திரசேகர்